குட்கா விற்க அமைச்சர்களுக்கு லஞ்சமா? வருமானவரித்துறையின் கடிதம் மாயமான மர்மம்?

குட்கா

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் குட்கா, மவா போன்ற போதைப் பொருட்களை பெரிய அளவில் பறிமுதல் செய்து வருவதாக காவல்துறை தெரிவிக்கிறது.

ஆனால், இந்த போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பதற்காக அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் லஞ்சம் அளிக்கப்பட்டது தொடர்பான அரசுக்கு வருமான வரித்துறை எழுதிய கடிதம் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் புகையிலை கலந்த போதை பாக்கு, மாவா எனப்படும் புகையிலை ஆகியவற்றை தயாரிக்க, சேமித்துவைக்க, விற்பனை செய்ய, கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் தடைவிதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் காவல்துறையால் சோதனைக்குள்ளாக்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தாலும், இந்தப் பொருட்கள் தமிழகத்தில் தொடர்ந்து பரவலாகக் கிடைத்துவந்தன.

வருமானவரி துறையின் கடிதம் மாயம்

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பல குட்கா தயாரிப்பு ஆலைகளில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தியது. இதற்குப் பிறகு, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிலரது ஒத்துழைப்புடன்தான் இந்தப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன; இதற்காக அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறி வருமான வரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.

இந்தக் கடிதம், சில நாட்களுக்கு முன்பாக ஊடகங்களில் கசிந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், வருமான வரித்துறை தமிழக அரசுக்கு எழுதிய கடிதம் ஏதும் கிடைக்கவில்லையென தமிழக அரசு பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது.

தற்போது, தமிழக அரசுக்கு வருமான வரித் துறை எழுதிய கடிதம் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் குட்காவும் மாவாவும் மிக எளிதாகக் கிடைப்பதாகக் கூறி, சில பாக்கெட்டுகளையும் எடுத்துக் காட்டினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சபாநாயகர் தடைசெய்யப்பட்ட பொருட்களை சபைக்குக் கொண்டுவரக்கூடாது என்று கூறி, விவகாரம் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

கடும் நடவடிக்கை

இதையடுத்து, கடந்த சில நாட்களாக தமிழக காவல்துறை சென்னை நகரில் சட்டவிரோதமான குட்கா விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கிறது.

கடந்த ஜூலை 20, 21 ஆகிய நாட்களில் இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட சோதனைகளில் 421 பேர் கைதுசெய்யப்பட்டனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குட்கா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.

அதன் பிறகு சென்னையின் கொத்தவால் சாவடி, எஸ்பிளனேடு, கொருக்குப்பேட்டை ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனையில், ஐந்தரை லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அதன் பிறகு பெட்டிக்கடைகள், கிடங்குகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மேலும் 12 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுவரை ஒட்டுமொத்தமாக 750 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

தனிப்படை

இது தவிர, இந்தப் பொருட்களைத் தயாரிப்பவர்களை, விற்பவர்களைக் கைது செய்ய சென்னையில் மட்டும் ஒரு காவல் நிலையத்திற்கு ஒரு தனிப்படை என்ற வகையில் 135 தனிப்படைகளை அமைத்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ஆனால், இதெல்லாம் கண் துடைப்பு நடவடிக்கை என்கிறார்கள் இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடிவரும் அறப்போர் இயக்கத்தினர்.

'குட்கா விற்பனையைத் தடுக்க வேண்டுமென்றால் தயாரிப்பவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். சென்னையில் விற்பனைக்கு வரும் பிரபலமான பிராண்டின் உரிமையாளர் இன்னமும் வெளியில்தான் இருக்கிறார். காவல்துறை பெட்டிக்கடைக் காரர்களை, சில்லறை விற்பனையாளர்களைப் பிடித்து சிறையில் அடைக்கிறது.' என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெயராம் வெங்கடேசன்.

அமைச்சர்கள், தமிழக அரசு மீது குற்றச்சாட்டு

காவல்துறை தலைவர் மீதும் அமைச்சர் மீதும் நேரடியாகவே குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அவர்கள் இப்போதும் பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழ் உள்ள காவல்துறை நேர்மையாக நடவடிக்கை எடுக்க முடியுமெனக் கேட்கிறார் ஜெயராமன்.

"குட்கா ஊழலில் அமைச்சர் விஜய பாஸ்கரும் காவல்துறை உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு தவறுக்கு மேல் தவறு செய்துவருகிறது" என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தலைமை செயலகத்தில் திருட்டா?

குட்கா லஞ்சம் தொடர்பாக, வருமான வரித்துறை தமிழக அரசுக்கு எழுதிய ஆவணம் காணாமல் போனதாக செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில், தலைமைச் செயலகத்திலேயே திருட்டு நடந்திருக்கிறதா என அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க முற்பட்டதாலேயே காவல்துறையின் முன்னாள் தலைவர் அசோக்குமார் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார் என்றும் மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அருணாச்சலம் முக்கியத்துவம் இல்லாத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாற்றப்பட்டார் எனவும் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

வாடிப்போன வெற்றிலை விவசாயம்

காணொளிக் குறிப்பு,

வாடிப்போன வெற்றிலை விவசாயம் (காணொளி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :