இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 27 கிலோ தங்கம்

கடத்தப்பட்ட தங்கம்

இலங்கையிலிருந்து தமிழகத்திற்குக் கடத்தி வரப்பட்ட 27.6 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் ராமநாதபுரத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோயம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் இருந்த 10 கிலோ தங்கம் பிடிபட்டது.

அதிலிருந்த இருவரும் கோயம்புத்தூருக்கு தங்கத்தை கடத்திச் செல்வதை ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத மேலும் 4 கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், AFP

அதே நாள் மாலையில் தூத்துக்குடிக்கு அருகில் கடற்கரையோரப் பகுதியில் ஒரு காரை வருவாய்ப் புலனாய்வுத் துறையின் மற்றொரு அணி நிறுத்தி சோதனையிட்டபோது அந்தக் காரின் முன் இருக்கைக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ தங்கம் பிடிபட்டது. அந்தத் தங்கம் இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்டதாக வாகனத்தில் இருந்த ஒருவர் ஒப்புக்கொண்டார்.

வாகனத்தில் இருந்த மற்ற இருவரும் ஒரு சிறிய படகின் மூலம் நடுக்கடலுக்குச் சென்று தங்கத்தைப் பெற்று வந்துள்ளனர். அந்த வாகனத்தின் ஓட்டுனரும் இந்தக் கடத்தலுக்கு உதவியதும் கண்டறியப்பட்டது.

இந்தத் தங்கம் யாருக்காகக் கடத்தப்பட்டது என்பதும் அந்த நபர் யார் என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், AFP

அதே நாளில் ராமநாதபுரத்திற்கு அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் 3.6 கிலோ தங்கம் இருந்தது. அவரும் அதனை இலங்கையிலிருந்து கடத்திவந்ததை ஒப்புக்கொண்டார்.

இந்த சோதனைகளில் ஒட்டுமொத்தமாக 8.13 கோடி ரூபாய் மதிப்பிலான 27.6 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. 8 பேர் இந்தக் கடத்தல்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இம்மாதிரி வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படும் தங்கம் சென்னையில்தான் விற்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், தற்போது கோயம்புத்தூரும் கடத்தல் தங்கத்தின் இலக்காகியிருக்கிறது. அங்கு அதிகரித்துவரும் தங்க நகைக் கடைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் சென்னைப் பிரிவு கடல், விமான நிலையங்கள், நில எல்லைகளின் வழியாக கடத்திவரப்பட்ட 33.7 கோடி ரூபாய் மதிப்பிலான 114 கிலோ தங்கத்தைக் கைப்பற்றியதோடு, இது தொடர்பாக 41 பேரைக் கைது செய்துள்ளது.

பழையத் தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து தங்கம் எடுப்பு

காணொளிக் குறிப்பு,

பழையத் தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து தங்கம் எடுப்பு

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :