நிதாரியில் பெண் கொலை வழக்கு: இருவருக்கு தூக்கு தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம்

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் நிதாரி கிராமத்தில் இளம் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மொனிந்தர் சிங் பாந்தர், அவரது பணியாளர் சுரிந்தர் கோஹ்லி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY, STRDEL / AFP / GETTY IMAGES
Image caption சுரேந்தர் சிங் கோஹ்லி மற்றும் மொனீந்தர் சிங் பாந்தர்

இது தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி பவன் திவாரி குற்றம்சாட்டப்பட்ட இருவரும் "குற்றவாளிகள்" என்று கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.

அதைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) தண்டனை விவரங்களை அறிவித்த சிறப்பு நீதிபதி பவன் திவாரி, "அரிதினும் அரிதான வழக்காக இதை கருதி குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

தீர்ப்பின் முக்கிய பத்திகளை வாசித்த சிறப்பு நீதிபதி, "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நிவாரணம் பெறவோ மறுவாழ்வுக்கு அனுப்பப்படவோ தகுதி பெறவில்லை" என்றும் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை RAM DEVINENI
Image caption கொலைகள் நடந்த டெல்லி புறநகர் பகுதி

நிதாரி கிராம மர்ம சாவுகள்

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 30 அருகே உள்ளது நிதாரி கிராமம். அங்கு இளம் சிறுமிகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் 2005 முதல் 2006-ஆம் ஆண்டுவாக்கில் காணாமல் போனார்கள்.

இந்த நிலையில், நிதாரி கிராமத்தில் மொனீந்தர் சிங் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பின்பகுதி கால்வாயில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், சடலங்களின் பகுதிகள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒருவர் மட்டுமே 18 வயதைக் கடந்தவர். மற்ற அனைவரும் சிறுமிகள்.

இந்த விவகாரம் தொடர்பாக அந்த வீட்டு உரிமையாளர் மொனீந்தர் சிங், அவரது பணியாளர் சுரேந்தர் கோஹ்லி ஆகியோரை நொய்டா காவல்துறையினர் 2006-ஆம் ஆண்டில் கைது செய்தனர்.

சிறுமிகளைக் கடத்தி, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி கொன்றதாக அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

அரசியல் ரீதியாகவும், சமூக பயன்பாட்டாளர்கள் சார்பிலும் இந்த கொலைகளுக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் வாயிலாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. நிதாரி கொலை சம்பவங்கள் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பந்தேரின் வீட்டின் அருகே இறந்த குழந்தைகளின் உடல் பாகங்களும், துணிமணிகளும் ஒரு சாக்கடையில் வீசப்பட்டது

சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

இதையடுத்து அந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு 2007-ஆம் ஆண்டு ஜனவரியில் மாற்றியது.

அதன் பேரில் இருவருக்கும் எதிராக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 16 வழக்குகளில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதில் முதலாவது வழக்கில் மொனீந்தர், சுரேந்தர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

படத்தின் காப்புரிமை MANPREET ROMANA/AFP/Getty Images
Image caption சிபிஜ அதிகாரிகளோடு விவாதிக்கும் காணாமல் போன குழந்தைகளின் உறவினர்கள்

ஆனால், மேல்முறையீட்டு வழக்கில் மொனீந்தர் சிங்கை வழக்கில் இருந்து விடுவித்தும் அவரது பணியாளர் சுரேந்தர் கோஹ்லிக்கு சிபிஐ நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதிப்படுத்தியும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து மற்ற வழக்குகளில் மொனீந்தர் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது பணியாளர் சுரேந்தர் கோஹ்லிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் 20 வயது பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மொனீந்தர் சிங், சுரேந்தர் ஆகியோரை "குற்றவாளிகள்" என்று கடந்த சனிக்கிழமை காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் அறிவித்தது.

படத்தின் காப்புரிமை NINAD AUNDHKAR
Image caption ஆரம்பத்தில் இருந்து தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை பந்தேர் மறுத்து வந்தார்

இதையடுத்து ஜாமீனில் இருந்த மொனீந்தர் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

2006-ஆம் ஆண்டுவாக்கில், நிதாரி கிராம கொலை வழக்குகள் தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

குற்றப்பத்திரிகை தாக்கல்

உத்தரகண்ட் மாநிலத்தின் மங்ருக்கள் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் கோஹ்லி, மொனீந்தர் சிங்கிடம் வேலை பார்த்து வந்ததாகவும், வீட்டு வேலைக்காக இளம் பெண்கள், சிறுமிகள் போன்றோரை பணியமர்த்தி, பின்னர் அவர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி அவர்களின் உடல்களை துண்டுகளாக்கி வீட்டின் பின்பகுதியில் உள்ள கால்வாயில் வீசியதாக சுரேந்தர் கோஹ்லி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

படத்தின் காப்புரிமை PTI

20 வயது பெண் காணாமல் போன வழக்கில், 2006, அக்டோபர் 5-ஆம் தேதி அந்த பெண் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கோஹ்லி கைது செய்யப்பட்ட பிறகு, அவர் அந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி பின்னர் அவரது தலையைத் துண்டித்து வீட்டின் முதல் தளத்தில் இருந்து பின்பக்க கால்வாயில் வீசியதாகவும் விசாரணையில் ஒப்புக் கொண்டார்.

2007-ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்த பெண்ணின் ஆடைகள், காலணி போன்றவற்றை கால்வாய் பகுதியில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது சம்பவம் நடந்ததாக கூறப்படும் வாரத்தில் தாம் ஊரில் இல்லை என்று மொனீந்தர் சிங் சிபிஐயிடம் கூறியிருந்தார். அதை தமது குற்றப்பத்திரிகையிலும் சிபிஐ பதிவு செய்திருந்தது.

படத்தின் காப்புரிமை MANAN VATSYAYANA / AFP / GETTY IMAGES
Image caption போராட்டத்தில் குழந்தைகள்

இருப்பினும், அவருக்கும் அவரது பணியாளர் சுரேந்தர் சிங் கோஹ்லிக்கும் தூக்கு தண்டனை விதித்து காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த நிலையில் மொனீந்தர் சிங்குக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்துள்ள தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அவரது மகன் கரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிலுவை வழக்குள் எத்தனை?

இந்த இருவர் மீதும் தொடரப்பட்ட மொத்தம் 19 வழக்குகளில் 16 வழக்குகளில் இதுவரை சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் மூன்று வழக்குகள் முடித்துக் கொள்ளப்பட்டன.

படத்தின் காப்புரிமை NINAD AUNDHKAR
Image caption மதுவருந்துவதிலும், விலை மாதர்களிடமும் பந்தேருக்கு ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது

இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குடன் சேர்த்து, மொத்தம் ஆறு வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் பல்வேறு கட்டங்களில் நிலுவையில் உள்ளன.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள்

  • 2009, 13, பிப்ரவரி - ரிம்பா ஹால்தா் (14) கொலை வழக்கில் மொனீந்தர், கோஹ்லிக்கு தூக்கு
  • 2009, 10, செப்டம்பர் - மொனீந்தர் சிங்கை விடுவித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம்
  • 2010, 04, மே - ஆர்த்தி பிரசாத் (7) கொலை வழக்கில் சுரிந்தர் கோஹ்லிக்கு தூக்கு
  • 2010, 27 செப்டம்பர் - ரச்னா லால் (9) கொலை வழக்கில் சுரிந்தர் கோஹ்லிக்கு தூக்கு
  • 2010, 22 டிசம்பர் - தீபாலி சர்கார் (12) கொலை வழக்கில் சுரிந்தர் கோஹ்லிக்கு தூக்கு
  • 201115 பிப்ரவரி - கோஹ்லியின் தூக்கு தண்டனை, உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது
  • 201224 டிசம்பர் - சோட்டி கவிதா (5) கொலை வழக்கில் கோஹ்லிக்கு தூக்கு
  • 201722 ஜூலை - பிங்கி சர்கார் (20) கொலை வழக்கில் மொனிந்தர் சிங், கோஹ்லிக்கு தூக்கு

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மரணத்தில் இருந்து தப்பிய கோஹ்லி

2011-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சுரிந்தர் கோஹ்லிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு சுரிந்தர் கோஹ்லி தரப்பில் அனுப்பிய கருணை மனு, 2014, ஜூலை மாதம் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது.

படத்தின் காப்புரிமை MANPREET ROMANA/AFP/Getty Images
Image caption பலியானோரின் புகைப்படங்களோடு போராட்டம்

ஆனால், கோஹ்லி அடைக்கப்பட்டிருந்த காஜியாபாதின் தாஸ்னா சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் வசதிகள் இல்லை என்று சிறை நிர்வாகம் கூறியது.

பின்னர் 2014, செப்டம்பர் 4-ஆம் தேதி தாஸ்னா சிறையில் இருந்து மீரட் சிறைக்கு கோஹ்லி மாற்றப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி கோஹ்லியின் தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது.

ஆனால், ஒரு வாரத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

படத்தின் காப்புரிமை NINAD AUNDHKAR
Image caption கைது செய்யப்பட்ட பிறகு பந்தேர் 7 ஆண்டுகள் சிறையில் இருந்தார்

2014, செப்டம்பரில் கோஹ்லி தரப்பு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், கோஹ்லிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எவ்வித தவறும் இல்லை என்று தெரிவித்தது.

2015, ஜனவரி 28-ஆம் தேதி, கோஹ்லியின் கருணை மனுவை மிகவும் தாமதமாக முடிவெடுக்கப்பட்டது எனக் கூறி அவருக்கு விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் சிறை தண்டனையாக அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.கே.எஸ்.பாஹெல் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :