ரஷ்ய தொடர்பு குறித்த விசாரணை: குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் டிரம்பின் மருமகன்

தாமோ, டிரம்பின் பிரசாரக் குழுவைச் சேர்ந்த வேறு எவருமோ அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக ரஷ்யாவுடன் எந்த ரகசியக் கூட்டும் வைக்கவில்லை என்று டிரம்பின் மருமகன் ஜேர்டு குஷ்னர் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் மருமகன் ஜேர்டு குஷ்னர்

பட மூலாதாரம், Reuters

தமக்கு முறைகேடான தொடர்புகள் ஏதுமில்லை என்றும் தமது வணிகத்துக்குத் தாம் ரஷ்ய நிதியைச் சார்ந்து இருக்கவில்லை என்றும் அவர் கூறுவார்.

தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரணை நடத்தும் செனட் குழுவின் கூட்டத்துக்கு முன்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார் குஷ்னர். அதிபர் டிரம்பின் முதுநிலை ஆலோசகராக இருக்கும் இவர், டிரம்பின் தேர்தல் பிரசாரக் குழுவில் டிஜிட்டல் உத்திகளை வகுப்பதற்குப் பொறுப்பேற்றிருந்தார். டிரம்பின் மகள் இவான்காவை மணந்துள்ள குஷ்னரின் வயது 36.

செனட் உளவுக் குழு முன்பாக திங்கள்கிழமையும், செனட் குழு முன்பாக செவ்வாய்க்கிழமையும் ஆஜராகவுள்ளார்.

வெளிநாடு எதனுடனும் தாம் முறைகேடான தொடர்பு வைக்கவில்லை, பிரசாரத்தில் அப்படித் தொடர்பில் இருந்த எவரையும் தமக்குத் தெரியாது என்று அவர் வெளியிட்ட 11 பக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரசாரத்தின்போது ரஷியாவுடனோ, ரஷ்யப் பிரதிநிதிகளுடனோ பெரிய தொடர்பு என்று சொல்லத்தக்க ஏதும் இல்லை என்று மறுத்துள்ள அவர் தமது அறிக்கையின் இறுதியில் தாம் சந்தித்த நான்கு ரஷ்யத் தொடர்புகள் பற்றித் தெரிவித்துள்ளார்.

ரஷிய பெண் வழக்குரைஞர் நடாலியா வெசல்நிட்ஸ்கயாவை கடந்த ஜூன் மாதம் சந்தித்தது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹிலரிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தகவல்களைத் தருவதாக நடாலியா வாக்குறுதி அளித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

பட மூலாதாரம், Andrew Harrer-Pool/Getty Images

நடாலியாவுடனான தமது சந்திப்பை விவரித்த அவர், அந்த சந்திப்புக்குத் தாமதமாகச் சென்றதாகவும், குறிப்பில் இருந்த பொருள் பற்றி பெரிதாக விவாதம் செல்லவில்லை; உபயோகமாக நேரம் செலவிடப்படவில்லை என்று உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

"சுமார் 10 நிமிடம் அந்த சந்திப்பு நீடித்தது. 'கிளம்புவதற்கு ஒரு காரணம் தேடுகிறேன். அதற்காக, என்னை என்னுடைய கைப்பேசியில் அழைக்க முடியுமா' என்று என் உதவியாளர் ஒருவருக்கு சந்திப்பில் இருக்கும்போதே மெயில் அனுப்பினேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"புலனாய்வு அமைப்புகளோடு தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி என்பதை இன்று காட்டியுள்ளேன். மறைப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை என்பதால் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பேன். இதன் மூலம் சர்ச்சை ஓயும்," என்று தெரிவித்துள்ளார் குஷ்னர்.

குஷ்னர் அளிக்கும் வாக்குமூலம், இந்த விவகாரத்தை விசாரித்துவரும் சிறப்பு வழக்குரைஞர் ராபர்ட் முல்லருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் தமது புலன் விசாரணையில் இதைப் பயன்படுத்துவார்.

தாங்கள் அறியவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று கூறியுள்ளார் செனட் உளவுக் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னிலை ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஆடம் ஷிஃப்.

டிரம்பின் மகனும், டிரம்பின் பிரசாரக் குழு பொறுப்பாளராக இருந்த பால் மனாஃபோர்ட்டும் அமெரிக்க காங்கிரஸ் முன் புதன்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளிக்க இருந்தனர். ஆனால் விவாதிக்கவேண்டிய பொருள் குறித்தும், ஆவணப்படுத்துதல் குறித்தும் வழக்குரைஞர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருவதால் அது தாமதமாகிவருகிறது.

ரஷ்யாவுடன் எந்த முறைகேடான தொடர்பும் வைக்கவில்லை என்று மறுத்துவருகிறார் அதிபர் டிரம்ப். ரஷ்யாவின் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்கிறது. ஜனநாயகக் கட்சியும் ரஷ்யர்களும் இந்த விவகாரத்தை வைத்து சிரிக்கிறார்கள் என்று ஞாயிற்றுக்கிழமை ஒரு டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :