அதிக வரவேற்பை பெற்றுள்ளது 'அன்புச் சுவர்': சொல்கிறார் நெல்லை மாவட்ட ஆட்சியர்

"தேவையற்றவற்றை விட்டுச் செல்க; தேவையானவற்றை பெற்றுச் செல்க!" இந்த வாசகம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலின் முன் வைக்கப்பட்டுள்ள 'அன்புச் சுவரில்' எழுதப்பட்டுள்ளது.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் சொல்கிறது திருநெல்வேலியின் அன்புச் சுவர்

பட மூலாதாரம், Tirunelveli collectorate

’அன்புச் சுவர்’, இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முன் முயற்சி.

தங்களின் தேவைக்கு அதிகமாக உள்ள பொருட்களை மக்கள் இந்த அன்புச் சுவரில் வைத்துவிட்டு போகலாம் அவ்வாறு வைக்கும் பொருட்களை தேவையானவர்கள் எடுத்துச் செல்லலாம்; அதுதான் அன்புச் சுவர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியால் இந்த முயற்சி நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அன்புச்சுவர் முயற்சி வெற்றியடைந்தால், மாவட்டத்தின் பிற இடங்களிலும் தொடங்கப்படும் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

ஏராளமான பாராட்டுக்களை பெற்ற முயற்சி

தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே இம்முயற்சிக்கு ஏராளமான பாராட்டுகளை சமூக ஊடகங்களில் காணமுடிந்தது.

இது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் முன்முயற்சி, எனவே, இதற்கு கண்காணிப்பாளர்கள் என்றில்லாமல் பொருட்களை கொடுக்கவும், தேவைப்பட்டவர்கள் வந்து எடுத்துச் செல்லவும் மக்கள் ஆர்வமாக முன் வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் சந்தீப்.

பட மூலாதாரம், Tirunelveli collectorate

தமிழகத்தில் முதல்முறையாக இம்மாதிரியான ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள், மற்றும் இதர பயனுள்ள பொருட்களை இதில் வைத்துச் செல்லலாம் என்று எழுதப்பட்ட அந்தச் சுவரில் முயற்சி தொடங்கிய இரண்டாம் நாளே பொருட்கள் நிரம்பி வழிந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ஆட்சியர்.

மேலும், மக்கள் இதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் சந்தீப்.

இம்முயற்சி பிற மாவட்டங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்று பலர் விருப்பம் தெரி்வித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்புச் சுவரின் மூலம் தேவையான பொருட்களை தேவையானவர்களுக்கு கிடைக்கச் செய்வதால் பெயருக்கு ஏற்றார் போல் பொருட்களின் மூலம் அன்பும் பரிமாரப்படும் முயற்சியாகவே இதுவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :