வந்தே மாதரம் பாடலை கல்வி நிலையங்களில் கட்டாயம் பாடவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைNOAH SEELAM
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பாடமுடியாதவர்கள் சரியான காரணத்தைக் கொண்டிருந்தால் அவர்களை பாட வற்புறுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், என்னென்ன காரணங்கள் என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறி நிராகரிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் வி முரளீதரன் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளார்.
தகுதித் தேர்வில் வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு வங்காள மொழி என்று வீரமணி பதில் அளித்திருந்தார். ஆனால் அந்தக் கேள்விக்கு பதில் சமஸ்கிருதம் என்று முடிவு செய்து தமிழக அரசின் ஆசிரியர் தகுதி தேர்வுக் குழு அவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கவில்லை.
அரசு ஆசிரியராக தேர்வு பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் தேவைப்பட்ட சமயத்தில், சரியான பதிலான வங்காள மொழி என்பதை விடுத்து, தவறான பதிலை அரசு தேர்வு குழு முடிவுசெய்திருப்பதாகவும், அதனால் தனக்கு கிடைக்கவேண்டிய அரசு வேலை அளிக்கப்படவில்லை என்று வீரமணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் .
வழக்கு குறித்து பேசிய வீரமணியின் வழக்கறிஞர் பிரகாசம் இந்த வழக்கில் சரியான பதிலை வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் அரசு வழக்கறிஞரிடம் கேட்டிருந்தது என்றார்.
''வழக்கறிஞர் குழு மேற்குவங்காளம் சென்று இது குறித்த தகவல்களைச் சேகரித்தது. வந்தே மாதரம் பாடலில் சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் , வங்காள மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கப்பட்டது. தற்போது வீரமணியின் பதில் சரியானது என்றும் அவருக்கு ஒரு மாத காலத்தில் அரசு வேலை அளிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது,'' என்று வழக்கறிஞர் பிரகாசம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் .
வந்தே மாதரம் பாடலை கல்வி நிலையங்களில் பாடாததால்தான் இது போன்ற குழப்பம் ஏற்பட்டது என்று கூறி , இந்தப் பாடலை பள்ளிக்கூடம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பாடவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வழக்கறிஞர் பிரகாசம் தெரிவித்தார் .
கல்வி நிலையங்களில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வந்தே மாதரம் பாடலை பாடவேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்திற்கு ஒரு முறையாவது பாடவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்