'அந்த கொடுமையை அக்குழந்தை எத்தனை நாள் பொறுத்து கொண்டிருந்தாளோ?'

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள்

பட மூலாதாரம், AFP

(தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பெண்கள் பகிர்ந்து கொள்ளும் தொடரின் ஐந்தாம் பகுதி.)

நமக்கு நடந்த விஷயங்களை நினைவுகூர்வது இயல்பானதே. ஆனால், பிறருக்கு நடந்த அசம்பாவிதங்களையும் மறக்கமுடியாமல் தவிப்போம்.

அம்பிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நேயரின் அனுபவம் இது.

யார் என்றே நான் அறியாத ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த கொடுமையை என்னால் எப்போதும் மறக்கமுடியாது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. அலகாபாதில் நெரிசலான பகுதியில் இருந்த என் சகோதரியின் காலியாக இருந்த வீட்டில், இரண்டு சிநேகிதிகளுடன் தங்கி படித்து வந்தேன்.

ஒரு பெரிய வீட்டை பாகம் பிரித்தபோது, கிடைத்த பாகத்தில், கீழே ஒரு பெரிய அறையும், அதன்மேல் மூன்று அறைகளும் கட்டி வசிப்பதற்கு ஏற்றதாக மாற்றியிருந்தார்கள். என்னுடன் தங்கியிருந்த இரண்டு பேரும் விடுமுறைக்கு தங்கள் கிராமத்திற்கு சென்று விட்டார்கள்.

நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்வதற்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திருந்தேன். அதனால் கிராமத்திற்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டேன். வீட்டுக்கு அருகில் குடிசைப்பகுதிகள் இருந்தன, அதில் ஏழை கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் வசித்துவந்தார்கள்.

பட மூலாதாரம், AFP

அன்று மாலையில், நான் மொட்டை மாடியில் நடந்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஒன்றரை முதல் இரண்டு வயது இருக்கும் ஒரு குழந்தையுடன் 25-30 வயது இளைஞன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

நான் குழந்தையின் குறும்பையும், விளையாட்டையும் ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தக் குழந்தைக்கு, இளைஞன் நன்றாக தெரிந்தவன் என்பது குழந்தையின் இணக்கத்தில் இருந்து புரிந்துக் கொண்டேன். நான் இருந்த இடத்தில் இருந்து அவர்களைப் பார்க்கமுடியும். ஆனால், அவர்கள் அங்கிருந்து பார்த்தால் என்னை பார்க்க முடியாது.

திடீரென்று அந்த மனிதன், குழந்தையை மடியில் உட்கார வைத்துக்கொண்டான். சிறிது நேரத்திற்கு குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான், பிறகு குழந்தையை அழைத்துச் சென்று, ஒரு ஓரத்தில் நிற்கவைத்து, ஆண்குறியால் தேய்க்கத் தொடங்கினான்.

நான் இதை எழுதுவது அதிகபிரசங்கித்தனமாக தோன்றலாம், ஆனால் இது அவசியம் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகளை பிறரை நம்பி ஒப்படைக்கும் பெற்றோர்கள் பலமுறை யோசிக்கவேண்டும். மனித மனதின் வக்கிரம் பெரும்பாலும் தனிமையில்தான் வெளிப்படுகிறது.

அந்தக் குழந்தை அம்மா… அம்மா என்று அழுதபோதிலும், அந்த மனிதன் குழந்தையை விடவில்லை. சிறிது நேரம் கழித்து அவன் விடுவித்தபிறகு, குழந்தை முன்புபோலவே சிரித்து விளையாடத் தொடங்கிவிட்டது.

இந்த சம்பவத்தைப் பார்த்ததும் முதலில் எனக்கு ஏற்பட்டது அச்சம்தான். யாரிடமும் இதைப்பற்றி சொல்லவில்லை. அந்த மனிதனைப் பற்றி யாரிடமாவது புகார் சொன்னால், அவன் என்னை குறிவைத்தால் என்ன செய்வது என்றுதான் தோன்றியது.

என்னுடைய சுயநல கண்ணோட்டத்தினால், நான் வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், மனதின் உறுத்தல் அடங்கவில்லை.

அந்தக் குழந்தைக்காக நான் எதாவது செய்திருக்கவேண்டும். நான் முயற்சி செய்திருந்தால், அந்தக் குழந்தைக்கு நிவாரணம் கிடைத்திருக்கலாம், அந்தக் குழந்தை எத்தனை நாள் அந்தக் கொடுமையை அனுபவித்ததோ தெரியவில்லை என்று வருத்தமாக இருக்கும். கண் முன்னே நடக்கும் தவறை தட்டிக் கேட்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

சரோஜாவின் கதை

பட மூலாதாரம், MONEY SHARMA/AFP/GETTY IMAGES

சரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பிபிசிக்காக எழுதி அனுப்பியிருக்கிறார்.

"இதுபோன்ற துயரமான அனுபவங்களை நானும் சந்தித்திருக்கிறேன். என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறவுமுறையில் எனக்கு சித்தப்பா. 12 வயதாக இருந்த என்னை, ஒரு முறை அல்ல, பலமுறை அவர் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.''

''என்னை உடல்ரீதியாக துன்புறுத்தி, மனரீதியான பாதிப்பையும் ஏற்படுத்திய அந்த கயவன், உலகின் முன் மதரீதியான பிரசாரங்களை செய்யும் பிரபலர் என்பது மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது. நான் சொன்னதை பெற்றோர்கள் கூட நம்பவில்லை என்பதுதான் எனக்கு அதிக வருத்தம் தந்தது. இந்த அத்துமீறலை நான் வெளிப்படையாக சொல்கிறேன் என்று சொன்னபோது, குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிடாதே என்று தடுத்துவிட்டார்கள்.''

''பெற்றவர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் என்ன? என் காதலரிடம் (இப்போது கணவர்) எனக்கு நடந்த கொடுமையைப் பற்றிச் சொன்னேன். அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் என்னை சமாதானப்படுத்தினார். இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று சொல்லி, திருமணம் செய்துக்கொண்டார். பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுவது, துன்புறுத்துவது, தங்களுடைய கேவலமான இச்சைகளைத் தீர்த்துக்கொள்வது, எல்லாம் அந்த பெண்ணை நன்கு அறிந்தவர்களே என்ற கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.''

''ஓப்ரா வின்ஃப்ரேவை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு, உள்ளுக்குள் தொடர்ந்து வலிக்கும் இந்த சம்பவத்தை, பகிர்ந்துக் கொள்கிறேன். எனக்கு நடந்த கொடுமைக்கு நான் எந்தவிதத்திலும் காரணம் இல்லை என்று தொடர்ந்து எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்கிறேன். செய்யாத தவறுக்கு எனக்கு நானே ஏன் தண்டை கொடுத்துக் கொள்ளவேண்டும்? தவறு செய்தவனை உலகம் குருவாக கொண்டாடுவதுதான் எரிச்சலடையச் செய்கிறது. நிலைமை மாறும் என்று நம்புகிறேன். நடக்கும் தவறுகளுக்கு, பாதிக்கப்பட்ட பெண்களையே தண்டிக்கும் போக்கும் மாறவேண்டும்.''

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :