வார்த்தை தவறுகிறார் முதல்வர்: அய்யாக்கண்ணு புகார்

மாடாய் உழைக்கும் விவசாயி

பட மூலாதாரம், NAEEM ANSARI

விவசாய கடன்கள் தள்ளுபடி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்பு தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது மாற்றிப் பேசுவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

விவசாயக கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமமையிலான விவசாயிகள் குழுவினர் கடந்த 10 நாட்களாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் டெல்லி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் அய்யாக்கண்ணு தலைமையிலான குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் சந்தித்து மனு அளித்தனர்.

அய்யாக்கண்ணு புகார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, "விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்பு உறுதியளித்த முதல்வர் தற்போது மாற்றிக் கூறுகிறார் என்றார்.

தமிழக அரசுக்கே போதுமான நிதி இல்லை என்றும் ஜிஎஸ்டி மூலம் மாநிலத்துக்கு 30 சதவீதம்தான் வருவாய் வருகிறது என்றும் முதல்வர் குறிப்பிட்டதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவுகளால், சுமார் 2 ஆயிரம் சாராயக் கடைகள் மூடப்பட்டதால், ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேலாக மாநிலத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் கூறியதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசும் மத்திய அமைச்சர்கள், விவசாய கடன்களை அந்தந்த மாநில அரசுகளே தள்ளுபடி செய்யலாம் என்று பேசியது பற்றி முதல்வரிடம் கேட்டதற்கு, இதுபற்றி அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசுவார்கள் என்று முதல்வர் கூறுவதை நம்புகிறோம் என்றார்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தை திரும்பப் பெறுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை" என்றார் அய்யாக்கண்ணு.

முன்னதாக, அய்யாக்கண்ணு தலைமையில் 30-க்கும் அதிகமான விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் தமிழ்நாடு இல்லத்துக்குள் நுழைய முற்பட்டனர்.

ஆனால், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் அவர்கள் உள்ளே நுழைய கட்டுப்பாடு விதித்தனர்.

இதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 10 பேர் அடங்கிய குழுவினர் மட்டும் முதல்வரை பார்க்க காவல்துறையினர் அனுமதித்தனர்.

முதல்வர் மறுப்பு

இந்நிலையில் தமிழ்நாடு இல்ல வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமியிடம் "மதுக்கடைகள் மூடப்பட்டதால், நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நீங்கள் கூறியதாக அய்யாக்கண்ணு கூறுகிறாரே" என்று கேட்டதற்கு, "அது தவறு" என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கணக்கிட்டு அவர்களுக்குரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்தியே அய்யாக்கண்ணு குழுவினர் போராட்டம் நடத்தி வருவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மனிதனே ஏர் உழும் பரிதாப நிலை (காணொளி)

காணொளிக் குறிப்பு,

மனிதனே மாடாக மாறி ஏர் உழும் ஏழை விவசாயின் பரிதாப நிலை (காணொளி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :