இந்தியாவின் 14-ஆவது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு

இந்தியாவின் 14-ஆவது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

படத்தின் காப்புரிமை PRDBIHAR.GOV.IN

அவருக்கு இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவேகெளட, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்ததும் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "பெருமை மிகு இந்த தேசத்தின் 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன்" என்றார்.

படத்தின் காப்புரிமை TWITTER

நாம் ஒவ்வொருவரும் இந்திய நலன் மற்றும் மரபுகளின் பாதுகாவலர் என்றும் இதை வழிவழியாகக் கொண்டு செல்வோம் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

ராஜேந்திர பிரசாத், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் பிரணாப் முகர்ஜி வழியில் மிகவும் கவனமாக தமது பயணம் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்றபிரதமர் மோதி, "ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகியுள்ளதன் மூலம், பாரதிய ஜன சங் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய பயணம், குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது" என்றார்.

படத்தின் காப்புரிமை PIB

பதவியேற்பு விழா முடிந்ததும், குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் அவர் நுழைவதற்கு முன்னால், அவருக்கு முப்படையினர் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து விடைபெற்றுச் செல்லும் பிரணாப் முகர்ஜிக்கும் முப்படையினர் அணுவகுப்பு மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, பாரம்பரிய வழக்கத்தின்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து புறப்படும் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண். 10, ராஜாஜி சாலை அரசு பங்களாவரை சென்று புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழியனுப்பி பிரியா விடை அளித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்