நீட் தேர்விலிருந்து விலக்கு: பிரதமரிடம் தமிழக முதல்வர் மீண்டும் கோரிக்கை

மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முறையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

இளம் பெண்கள்

பட மூலாதாரம், MANPREET ROMANA/AFP/GETTY IMAGE

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோதியை முதல்வர் பழனிசாமி கடந்த மே மாதம் சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்பு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்த தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது "நீட்" விலக்கு தொடர்பாக மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பிரதமரை முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டதாக அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லம் திரும்பிய முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலங்களாக அறிவிக்கும் திட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளதாகவும் விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொருத்தவரை, திமுக அரசு 1989-ஆம் ஆண்டிலேயே செயல்படுத்தியிருந்தது. அது ஏதோ தற்போது அறிமுகமான திட்டம் கிடையாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு

இதைத்தொடர்ந்து இன்று பிற்பகலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள்ள வெங்கய்ய நாயுடுவை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.

பட மூலாதாரம், Getty Images

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணி எம்.பி.க்கள் சார்பில் அவர்களின் ஆதரவை வெங்கய்ய நாயுடுவிடம் தெரிவித்ததாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி கூறினார்.

அமைச்சர்கள் எங்கே?

நீட் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் (உள்துறை), ஜே.பி.நட்டா (சுகாதாரம்), ரவிசங்கர் பிரசாத் (சட்டம்) ஆகியோரை தமிழக அமைச்சர்கள் தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (நிதி), சி.வி.சண்முகம் (சட்டம்), பி.தங்கமணி (மின்சாரம்), சி.விஜயபாஸ்கர் (மக்கள் நல்வாழ்வு), கே.பி.அன்பழகன் (உயர்கல்வி), தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று (திங்கள்கிழமை) சந்தித்துப் பேசினர்.

நீட் விலக்கு குறித்த மாநில சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாக தமிழக அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்ட தமிழக அமைச்சர்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கிய காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை பார்ப்பதற்காக நீதிமன்றத்துக்குச் சென்றனர்.

முன்னதாக, தமிழக அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோதியை கடந்த 20-ஆம் தேதி சந்தித்தனர். நீட் விவகாரம் பற்றி அப்போது பிரதமரிடம் வலியுறுத்தியதாக அவர்கள் கூறினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :