ஓபிஎஸ் கிணறு விவகாரம்: அறப்போராட்டத்தை கைவிட்டனர் லட்சுமிபுரம் கிராம மக்கள்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் குடும்பத்திற்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணறு மற்றும் விவசாய நிலத்தை காசுக்கு விற்பதாக உறுதியளித்து பின்னர் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஊர் கூடி வென்ற போராட்டம்
பிரச்சனைக்கு காரணமான ஆழ்துளை கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பத்து சென்ட் நிலம் பொது சொத்தாக மாற்றி எழுதப்படும் என்று இன்று (புதன்கிழமை) மாலையில் ஓபிஎஸ் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை அளித்துள்ளதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று போரட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
போரட்டக்குழுவைச் சேர்ந்த சுப்புராஜ், ''கிராம மக்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. தண்ணீர் இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் சிரமப்பட்டோம், அதன் விளைவுதான் போராட்டம் நடத்தினோம்,'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தண்ணீர் தட்டுப்பாட்டில் தவித்த லட்சுமிபுரம்
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமியின் பெயரில் உள்ள நிலத்தில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணறுதான் என்று குற்றம்சாட்டினர்.
கிராமத்தில் உள்ள மற்ற கிணறுகளை விட இந்தக் கிணறு ஆழமாக இருப்பதாலும், அதிக எண்ணிக்கையில் அந்த கிணற்றுக்குள் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ளதால், கிராமத்தில் உள்ள மற்ற கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு வந்த ஓபிஎஸ்
மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, கடந்த ஜூலை13ம்தேதி ஓ.பி.எஸ் தரப்பு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஓபிஎஸ் நேரில் வந்து மக்களைச் சந்தித்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் கலந்துகொண்டனர் என்கிறார்கள் கிராமமக்கள்.
அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், தனது நிலத்தையும், நிலத்தில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணற்றையும் ஆறு கோடி ரூபாய் கொடுத்து கிராமமக்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று ஓபிஎஸ் உறுதியளித்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
அவர் மக்களுக்குக் கிணற்றை கொடுக்க உறுதியளித்ததாக உள்ளூர் ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன.
அவரின் உறுதியை ஏற்று பணம் சேர்த்ததாகச் சொல்லும் லட்சுமிபுரம் மக்கள், தங்களுக்கு உறுதி அளிப்பதற்கு முந்தைய தினமே (ஜூலை 12) வேறு ஒரு நபருக்கு நிலம் விற்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது என்றார்கள்.
''கிணற்றையும், நிலத்தையும் எங்களுக்கு ரூ. 6 கோடிக்கு விற்பதாக ஜூலை 13ம் தேதி இரவு ஓபிஎஸ் உறுதி கொடுதார். ஜூலை12 அன்றே அந்த நிலத்தை சுப்புராஜ் என்பவருக்கு விற்றுவிட்டதாக பத்திரப்பதிவு நடந்துள்ளது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது,'' என்று லட்சுமிபுர போராட்டக் குழுவைச் சேர்ந்த செந்தில் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.
நிலம் குறித்த ஆவணம் கிடைத்தபிறகு, மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாகவும், அதனால் ஊர் மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Laxmipuram Residents
உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு
பேச்சுவார்த்தையின் போது ஓபிஎஸ் 90 நாட்கள் கெடு வைத்ததாகவும், அதற்குள் பணத்தை சேர்த்து நிலத்தை வாங்கவேண்டும் என்று கூறியதால், உடனடியாக பணத்தை திரட்ட மக்கள் முடிவு செய்ததாக கூறுகின்றனர்.
ஆனால், இந்தக் கிணறு தொடர்பாக முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோதுதான் அந்தக் கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலம் பேச்சுவார்த்தைக்கு முந்தைய தினம் விற்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் ஆவணம் கிடைத்ததாக கூறுகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் குடும்பத்தினர் தேவைக்காக, வரட்டாறு என்ற ஆற்றை ஓடை என்று பெயர் மாற்றம் செய்து, கிணறு வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதும் தங்களுக்கு தெரியவந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்.
'ஏமாற்றாதே, ஏமாறாதே'
ஆண்கள் மட்டுமின்றி, பெண்கள், முதியவர்கள் என லட்சுமிபுரம் கிராமமக்கள் பலரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
''தண்ணீர் அடிப்படைத் தேவை. அதற்காகப் போராடவேண்டும் என்ற நிலைவந்துள்ளது. ஓபிஎஸ் எங்களை ஏமாற்றுகிறார். இளக்காரமாக நடத்துகிறார்,''என போராட்டத்தில் ஈடுபட்ட தருணத்தில் தவமணி தெரிவித்திருந்தார்.
ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் நிலத்திலுள்ள கிணறு
போரட்டக் குழுவினர் ஓபிஎஸ் தன்னுடைய கிராம மக்களை ஏமாற்றுவதாக எண்ணி தனது அரசியல் வாழ்கையில் ஏமாந்து போகும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
மாவட்ட நிர்வாகம் சொல்வது என்ன?
போராட்டம் நடந்த சமயத்தில் ஓ.பிஎஸ்சை தொடர்புகொள்ளப் பல முறை முயற்சி செய்தபோதும் பதில் கிடைக்கவில்லை. அவரது அலைபேசி எண்ணுக்கு அழைத்தால், தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அவரது அணியில் உள்ள மற்றவர்களும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நடந்த போராட்டம் குறித்து பிபிசி தமிழ் கருத்துகேட்டபோது தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் இது ஊர் மக்களுக்கும், அந்த ஊரைச் சேர்ந்த தனிநபருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனை என்றார்.
கருத்து சொல்ல மறுப்பு
''இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை லட்சிமிபுரம் கிராமத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது. கிராம மக்களுக்கும்,ஓபிஎஸ்சுக்கும் நடந்த பேச்சுவார்த்தையின்போது நான் இருந்தேன். ஆனால் மாவட்ட ஆட்சியராக அந்தப் பேச்சுவார்த்தை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது,'' என்றார் வெங்கடாசலம்.
வரட்டாறு என்ற ஆறு ஓடையாக மாற்றம் செய்யப்பட்டதாக மக்கள் தெரிவிக்கும் புகார் பற்றி கேட்டபோது, எந்த விஷயத்திலும் விதிகள் மீறப்படவில்லை என்று தெரிவித்த வெங்கடாசலம், இந்த விவகாரத்தில் தன்னால் வேறுஎந்த கருத்துக்களையும் சொல்ல முடியாது என்று குறிப்பிட்டார்.
பிரச்சனை முடிவுக்கு வந்தபிறகு பன்னீர் செல்வத்தை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவரது பதிலை பெறமுடியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்