பாஜகவுடன் நிதீஷ் ஒப்பந்தமா?: லாலு கேள்வி

முதலமைச்சர் பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ள நிதீஷ்குமார், பாரதீய ஜனதாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டாரா என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ராஜினாமா செய்யவேண்டாம் என்று நிதீஷ்குமாரை கேட்டுக்கொண்டதாக கூறும் லாலு, "நிதீஷ் மீது 302ஆம் பிரிவின்படி வழக்கு இருக்கிறது. நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்கலாம். பாரதீய ஜனதா கட்சியைத் தோற்கடித்த எங்கள் கூட்டணியில் இருந்த நிதீஷ்குமார், குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்விருப்பப்படி முடிவெடுத்தார், இப்போது முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். இனி எங்கள் மகா கூட்டணிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும்" என்று சொல்கிறார்.

ஊடகங்களிடம் பேசிய லாலு பிரசாத், பிறகு வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், மகா கூட்டணியின் கருவை சிதைத்துவிட்டார் நிதீஷ் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதற்கிடையில், பிகாரில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ்குமாருக்கு ஆதரவளிக்க பாரதிய ஜனதா கட்சி முடிவெடுத்துள்ளது.

"நிதீஷ்குமாருக்கு ஆதரவளிக்கும் முடிவை அவரிடம் தெரிவித்துவிட்டோம். விரைவில் மாநில ஆளுனரை சந்தித்து தகவல் தெரிவிப்போம்" என்று பிகார் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சுஷீல்குமார் மோதி கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை REUTERS

தற்போது, பிகார் சட்டமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 71 பாரதீய ஜனதாவுக்கு 53 ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 80 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

அண்மையில் லாலு பிரசாத் யாதவின் மகனும், மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி உட்பட பலர் மீது தொடர்பாக சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்தது.

'தற்போதுள்ள சூழலில் ஆட்சி நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. ஒத்த கருத்து உருவாகாத நிலையில், ராஜினாமாவைத் தவிர வேறு வாய்ப்புகள் இல்லை'' என்று கூறி பதவி விலகல் கடிதத்தை கொடுத்த நிதீஷ்குமாருக்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் முதலமைச்சர் பதவியை நிதீஷ்குமார் ராஜிநாமா செய்ததாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்