கலாமின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோதி

ஏவுகணை நாயகனின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோதி

ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடத்திலுள்ள பேக்கரும்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைத்தார்.

அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் 15 கோடி ரூபாய் செலவில் கலாம் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இன்றுகாலை தனி விமானம் மூலம் தலைநகர் டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பிரதமர், விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாமிற்கு வந்து பின் அங்கிருந்து அப்துல் கலாமின் மணிமண்டபத்திற்கு வந்தடைந்தார்.

கலாம் நினைவிடத்திற்கு வந்திறங்கிய மோதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பிக்கள் சிலரும் இடம்பெற்றிருந்தனர்.

அதனை தொடர்ந்து, வளாகத்தில் கொடி ஏற்றிவைத்துவிட்டு மணி மண்டபத்தை திறந்து வைத்த மோதி, அப்துல்கலாமின் குடும்பத்தாருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

அதன்பின், 'அப்துல் கலாம் - 2020' என்ற அப்துல் கலாமின் சாதனை பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோதியின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :