'காலே இல்லாத பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது': துரைமுருகன்

பிகாரில் நடந்துவரும் அரசியல் மாற்றங்களில் ஒரு பகுதியாக, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அடுத்த நாளே, மீண்டும் அதே இருக்கையில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் அமர்ந்துவிட்டார்.

பாஜகவின் துணையுடன் பதவிக்கு திரும்பிய நிதிஷ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

பாஜகவின் துணையுடன் பதவிக்கு திரும்பிய நிதிஷ்

ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலுவுடன் கூட்டணி வைத்து 2015ல் ஆட்சிக்கு வந்தாலும், இரண்டு தரப்புக்கும் இடையில் அரசியல் முரண்பாடு இருந்துவந்தது.

பாஜகவின் துணையுடன் பதவிக்கு திரும்பிய நிதிஷ்

தனது ஆட்சியில் துணை முதல்வரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் புகார் எழுந்த பிறகு அவர் பதவி விலகாததால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி நிதிஷ் குமார் கடந்த புதன் அன்று (ஜூலை 26ம் தேதி) அறிவித்தார்.

இதன்மூலம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பாஜகவின் துணையுடன் இன்று (ஜூலை27ம் தேதி) மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

அதேசமயம், பாஜகவைச் சேர்ந்த சுஷில் குமார் மோதியை துணை முதல்வராக நியமித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக ஆட்சிக் கலைப்பு நடைபெற்றது என்று அவர் அறிவித்ததும், பாஜகவிற்கு தனது ஆட்சியில் பங்கு கொடுத்ததும் அரசியல் வட்டரங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

திமுகவை வியக்கவைத்த நிதிஷ்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா நிகழ்வு, மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்தும் விழா என்று அறியப்பட்டபோதும், அதில் பங்கேற்ற சமயத்தில் கூட நிதிஷ் குமார் பாஜக குறித்து விமரசனங்கள் எதையும் வைக்கவில்லை என்று கூறப்பட்டது.

படக்குறிப்பு,

கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா நிகழ்வு

தற்போது நிதிஷ் குமார் பாஜகவுடன் கைகோர்த்துள்ளதை திமுக எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டதைப் பற்றி திமுகவின் தலைமை நிலைய முதன்மை செயலாளரும், அக்கட்சியின் சட்டப்பேரவை துணைத்தலைவருமான துரை முருகனிடம் கேட்டபோது, ''நிதிஷ் குமார் ஒரு சிறந்த அரசியல்வாதி. அவர் மீது எங்களுக்கு மதிப்பு இருந்தது, அவர் மதவாத கட்சியுடன் இணைந்துள்ளது வருத்தத்திற்கு உரியது.'' என்று தெரிவித்தார்.

படக்குறிப்பு,

'காலே இல்லாத பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது'

மேலும், அவர் கூறுகையில், ''முற்போக்கு சிந்தனை மற்றும் நேர்மை போன்ற பண்புகளை பெற்றிருந்த நிதிஷ் குமார் தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக, அவர் எதிர்த்து வந்த மதவாத கட்சியுடன் கைகோர்த்துள்ளது வியப்புக்கு உரியது,'' என்றார்.

காலே இல்லாதவர்கள் காலுன்ற முடியாது

''மதவாதத்திற்கு எதிரான நிதிஷ் குமாரை ஆளும் பாரதிய ஜனதா தனது பலத்தைக் கொண்டு அவரை மாற்றிவிட்டதாக எண்ணுகிறோம்,'' என்று துரைமுருகன் தெரிவித்தார்.

பிகாரில் அரங்கேறிய நிதிஷ் குமாரின் பதவி விலகல், அடுத்த நாளே பதவி ஏற்பு போன்றவை மத்திய அரசு பிற மாநிலங்களை தங்களது அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மற்றொரு ஆதாரம் என்றார் துரைமுருகன்.

''இதே போன்ற நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தி, தமிழகத்தில் காலூன்ற எண்ணும் பாஜகவின் திட்டம் வெறும் கனவு. காலே இல்லாதவர்கள் காலுன்ற முடியாது,'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :