10 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்கக் கோரிய மனு தள்ளுபடி
பாலியல் வல்லுறவுக்கு ஆளான 10 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்தது.

பட மூலாதாரம், Getty Images
சண்டீகரில் தமது உறவினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி 26 வாரங்கள் கருவுற்று இருப்பதாக தெரிய வந்தது.
இந்த வழக்கில் அந்த சிறுமியின் உறவினர் கைது செய்யப்பட்டார்.
அவரது கருவை கலைக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சண்டீகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கோரியும் இதுபோன்ற விவகாரங்களில் அரசு முடிவெடுக்க ஏதுவாக வழிகாட்டுதல் நெறிகளை வகுக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சண்டீகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையின் மருத்துவர்கள், கருவுற்ற அந்த சிறுமியின் உடலை பரிசோதனை செய்தனர்.
பட மூலாதாரம், WIN MCNAMEE/GETTY IMAGES
பின்னர் தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் மருத்துவர்கள் குழு அளித்தது. அந்த அறிக்கையில் 32 வாரங்கள் கடந்த நிலையில் சிறுமியின் கருவைக் கலைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பரிசீலித்தது. அப்போது நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு திருப்தி தெரிவித்தனர்.
மருத்துவ அறிக்கையில் கருவைக் கலைப்பதால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து நேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், "நீதிமன்றத்தில் இருந்த மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) ரஞ்சித் குமாரிடம் கருக்கலைப்பு செய்யக் கோரும் விவகாரம் தொடர்பான ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருவதால், அது பற்றி முடிவெடுக்க மாநிலந்தோறும் மாநில அளவிலான மருத்துவக் குழுவையை நிரந்தரமாக அமைக்கலாம் என்று மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று நீதிபதிகள் கூறினர்.
மனுதாரரின் யோசனை குறித்து பரிசீலிக்குமாறும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பட மூலாதாரம், SCOTT OLSON/GETTY IMAGES)
பின்னணி: இந்தியாவில் 20 வாரங்களுக்கும் அதிகமான கருவை கலைக்க சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பதால் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் கருதி அவரது கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சண்டீகர் நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல்நிலை, எதிர்காலத்தைக் கருதி, அவரது கருவை கலைக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் அலோக் குமார் ஸ்ரீவாஸ்தவா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்தியாவில் ஆண் - பெண் பாலினத்தில் சமநிலை இல்லாத நிலையில் ஆண் குழந்தையை பெற்றடுப்பதையே பெரும்பாலானவர்கள் விரும்பும் நிலை 1970-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.
இதையடுத்து 1971-ஆம் ஆண்டில் கருக்கலைப்பை தடுப்பதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது.
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிவது சட்டவிரோதமாகவும், 20 வாரங்களுக்கு அதிகமான கருவை கலைக்கக் கூடாது என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கருவில் வளரும் குழந்தை பிறப்பு ரீதியாக ஏதேனும் கோளாறுடன் பிறக்கக் கூடும் அல்லது சிறுமியின் உயிருக்கு ஆபத்து நேரும் என மருத்துவ ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், அந்த வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் கரு கலைக்கப்படலாம் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அலோக் ஸ்ரீவாஸ்தவாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
செயற்கைப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
பிற செய்திகள்
- ‘பாலியல் ரீதியாக துன்புறுத்தியது சகோதரனே’ - அதிரவைக்கும் ஆணின் கதை
- 2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்
- வளர்ப்பு நாய்க்கு அதிபரின் பெயரை வைத்தவர் விடுவிப்பு
- “புலிகளுக்கு ஆதரவு என தமிழரின் கட்டடத்தை ராஜபக்ஷ பறித்தது செல்லாது”
- கறுப்பு பண குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம்
- ''இலங்கையில் யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்