வெளிநாடுவாழ் இந்தியர்களை திருமணம் செய்து கொள்வோருக்கு சட்டப்பாதுகாப்பு இல்லையா?

இந்தியாவில் உள்ள திருமண சட்டங்கள், என்ஆர்ஐ திருமண விதிகளை வலுவில்லாத வகையில் கொண்டுள்ளதாக பெண்ணுரிமை சமூக செயல்பாட்டாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Daniel Berehulak/Getty Images

வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களை ஒழுங்குமுறைப்படுத்த தற்போதைய சட்டங்கள், விதிகள், கொள்கைகள் ஆகியவற்றில் திருத்தம் செய்வது குறித்து ஆராய பஞ்சாபில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பஞ்சாப் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான அரவிந்த் குமார் கோயல் தலைமையிலான குழுவை இந்திய அரசு அண்மையில் நியமித்தது.

இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள், பெண்கள் அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக பயன்பாட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து ஏற்கெனவே மத்திய அரசு கருத்துகளை வரவேற்ற நிலையில் மீண்டும் அந்தப் பணி ஏ.கே.கோயல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

வரவேற்பு

இந்த நிலையில் திருமண சட்டங்களில் என்ஆர்ஐ திருமணங்களால் எழும் பிரச்னைகளைக் களைய சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தேசித்துள்ள இந்திய அரசின் முயற்சியை, தமிழகத்தைச் சேர்ந்த பெண் கவிஞர் சல்மா வரவேற்கிறார்.

இது பற்றி அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "என்ஆர்ஐ திருமணத்தை ஒழுங்குமுறைப்படுத்த புதிய சட்டங்கள் தேவையில்லை; தற்போது அமலில் உள்ள சட்டங்களை வலுப்படுத்தினாலே போதும்" என்றார்.

"வெளிநாடுகளில் இந்திய தம்பதி பிரிந்து விட்டால், அதனால் பாதிக்கப்படும் அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்போதைய சட்டங்கள் வலுவாக இல்லை" என்றும் கவிஞர் சல்மா கவலை தெரிவித்தார்.

தாய்க்கு ஆதரவாக தீர்ப்புகள்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுரிந்தர் கெளர் சாந்து - ஹர்பாக்ஸ் சிங் சாந்து என்ற தம்பதி இங்கிலாந்தில் வசித்தபோது பிரிந்து விட்டனர்.

அவர்களின் குழந்தைகள் இங்கிலாந்தில்தான் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், சுரிந்தர் கெளர், இந்தியாவில் உள்ள தமது தாய் வீட்டில் தமது குழந்தைகளை விட்டுச் சென்றார்.

படத்தின் காப்புரிமை Daniel Berehulak/Getty Images

அந்த வழக்கில், குழந்தைகளின் நலன் கருதி அவர்கள் தாயிடமே இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுபோல பல வழக்குகளில் என்ஆர்ஐ கணவருக்கும் இந்திய பெண்ணுக்கும் இடையிலான குழந்தைகள் தாயிடம் வளருவதே சரி என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மற்றொரு வழக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஐ கணவர் சுஷீல் சர்மா, தமது மனைவி சரிதா சர்மாவிடம் இருந்து பிரிந்து வாழ விவகாரத்து கோரி அந்நாட்டு நீதிமன்றத்தை அணுகினார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ளபோதே, அவரது மனைவி சரிதா, தங்களின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்து விட்டார்.

இதையடுத்து இந்திய உயர் நீதிமன்றத்தில் சுஷீல் சர்மா தொடர்ந்த வழக்கில் சட்டவிரோதமாக தமது குழந்தைகளை சரிதா வைத்துள்ளதாக முறையிட்டார்.

அதை ஏற்று குழந்தைகளை கணவரிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், மேல்முறையீட்டு வழக்கில், மைனர் வயதே ஆகும் குழந்தைகள் தாயிடம் வளருவதே சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

சட்டம் வலுவாக இல்லை

இதே போல இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், என்ஆர்ஐ கணவர் - மனைவி விவகாரங்களில் தாய்க்கு சாதகமாக இருந்தாலும், அவர்களின் குழந்தைகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதை இந்திய சட்டங்கள் உறுதிப்படுத்தவில்லை என்கிறார் புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவி கே.சுந்தரி.

இது பற்றி பிபிசி தமிழிடம் சுந்தரி மேலும் கூறுகையில், "இந்தியாவில் தற்போது அமலில் உள்ள ஹிந்து, முஸ்லிம் உள்ளிட்ட பிற மதங்களின் திருமண சட்டங்களை வலுப்படுத்த, அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்.

படத்தின் காப்புரிமை Daniel Berehulak/Getty Images

"இந்தியாவில் உள்ள பெண்களை திருமணம் செய்து வெளிநாடு அழைத்துச் சென்று அவர்களை திடீரென பரிதவிக்க விடும் கணவன்மார்களுக்கு விதிக்கப்படும் தண்டனை இந்தியாவில் கடுமையாக இல்லை" என்று சுந்தரி சுட்டிக்காட்டுகிறார்.

"தமது தலைமையிலான ஆணையத்துக்கு வரும் பெண்களின் புகாரில் வெளிநாடுவாழ் இந்திர்களை திருமணம் செய்து விட்டு, பின்னர் அவர்களால் தவிக்க விடப்படும் பெண்களின் புகார்களே அதிகம்" என்றும் சந்தரி கூறுகிறார்.

யோசனை

"இந்தியாவில் திருமணம் செய்யும் என்ஆர்ஐ நபர்களுக்கு இந்திய நீதிமன்றங்கள் மட்டுமே விவாகரத்து வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு நீதி்மன்றங்கள் அவர்களின் விவகாரத்து வழக்குகளை விசாரணைக்கு ஏற்பதைத் தடுக்கும் உடன்படிக்கையை பிற நாடுகளுடன் இந்திய அரசு செய்து கொள்ள வேண்டும்" என்றும் சுந்தரி யோசனை கூறுகிறார்.

அமைச்சக பணி என்ன?

இந்தியாவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த விவகாரங்களை கவனிக்க தனியாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் உள்ளது. அதன் அமைச்சராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மேனகா காந்தி உள்ளார்.

இதேபோல தேசிய அளவில் மகளிர் நலன்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் புகார்கள் போன்றவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உள்ளது.

அதன் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த லலிதா குமாரமங்கலம் உள்ளார்.

படத்தின் காப்புரிமை Daniel Berehulak/Getty Images

இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள், அவை தொடர்பாக எழும் பிரச்னைகளைக் களைய பல்வேறு பரிந்துரைகள் அண்மையில் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டன.

அந்தப் பரிந்துரைகளைப் பரிசீலித்து சட்டத்திருத்தம் செய்யும் முயற்சியை முன்னெடுப்பது அல்லது தனிச் சட்டத்தை இயற்ற மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்ய வேண்டியது அமைச்சகத்தின் பணி.

முந்தைய பரிந்துரைகள் என்ன?

தற்போது அமலில் உள்ள 1969-ஆம் ஆண்டு வெளிநாட்டு திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது; வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களுடன் இந்தியாவில் உள்ளூரில் உள்ள அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது; பாதிக்கப்பட்ட பகுதிகளாகக் கருதப்படும் கிராமங்கள், நகரங்கள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள் போன்றவற்றில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக் கூடாது? வெளிநாடுவாழ் இந்தியர்களைத் திருமணம் செய்து கொள்ளும் முன்பும் பின்பும் மத்திய சமூக நல வாரியத்தின்கீழ் செயல்பட்டு வரும் குடும்ப ஆலோசனை மையங்களில் ஆலோசனை பெறுவது, தூதரக அளவில் பாதிக்கப்படும் நபருக்கு சட்டம், நிதியுதவி வழங்குவது, வெளிநாடுவாழ் இந்தியர் திருமணங்களை கட்டாயம் பதிவு செய்வது, வெளிநாடுவாழ் இந்தியர் திருமணங்களின்போது அந்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்தான் அடிப்படைப் பாதுகாவலர் போன்ற பல பரிந்துரைகள், மத்திய அரசுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர் திருமணங்களின்போது தம்பதி பிரிந்து விட்டால் அவர்களின் குழந்தைகளின் நிலை என்ன ஆகும்? அக்குழந்தைகளின் சமூக, மனோநிலை, சட்டப்பூர்வ பாதுகாப்பு போன்றவை தொடர்பான பிரச்னைகளை ஆராய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தை (என்சிபிசிஆர்) மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு நீதிமன்றங்கள்

என்ஆர்ஐ திருமணம் மூலம் மோசடி செய்யும் கணவன் மீது, இந்திய சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

படத்தின் காப்புரிமை Daniel Berehulak/Getty Images

தற்போதுள்ள நடைமுறையின்படி, இந்து திருமணச் சட்டத்தின்படி, இந்தியாவில் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர், அவர் வசித்து வரும் நாட்டின் நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தால், அவரது வழக்கை, அந்நாட்டு நீதிமன்றம் அங்குள்ள உள்நாட்டு சட்டப்படி அணுகி விவகாரத்து வழங்குகிறது.

சில வழக்குகளில், சம்பந்தப்பட்ட என்ஆர்ஐ நபரின் மனைவி இந்தியாவில் வசித்து வந்தால், அவரது வசிப்பிட முகவரிக்கு விவாகரத்து வழங்கியதாகக் கூறும் உத்தரவு, தபால் மூலம் வெளிநாட்டு நீதிமன்றம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக அளவில் என்ஆர்ஐ திருமணங்களுக்கு விவாகரத்து வழங்கப்படும் நபர்கள் சார்ந்த மாநிலங்கள் வரிசையில், பஞ்சாப் முதலிடத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற வழக்கின் வாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20 ஆயிரம் வழக்குகள் நிலுவை

பஞ்சாபில் மட்டும் சுமார் இருபதாயிரம் என்ஆர்ஐ விவகாரங்கள் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் துறை (தற்போது வெளியுறவுத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது) அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.

நியூ ஜெர்சியில் உள்ள தொண்டு அமைப்பான "மானவி" வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், "என்ஆர்ஐ மோசடி திருமணங்கள் தொடர்பாக 2011 முதல் 2015 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 275 புகார்கள் பல்வேறு நாடுகளில் உள்ள 12 இந்திய தூதரகங்களுக்கு வந்துள்ளன" எனக் கூறப்பட்டுள்ளது.

என்ஆர்ஐ நபரை திருமணம் செய்து கொள்ளும் முன்பு, கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களை விளக்கும் வழிகாட்டுதல் கையேட்டை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டுதல்கள் பற்றிய பிரசாரத்தை செய்து வருவதாக இந்திய மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Daniel Berehulak/Getty Images

கர்நாடகா என்ஆர்ஐ அமைப்பின் துணைத் தலைவரும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் சமுதாய வளர்ச்சித் துறை முன்னாள் அதிகாரியுமான ஆர்த்தி கிருஷ்ணா பிபிசி தமிழிடம் கூறுகையில், "வெறும் சட்டங்களைப் பிறப்பிப்பதாலும், கடுமையான விதிகளை அமல்படுத்துவதாலும் என்ஆர்ஐ கணவர்களால் ஏமாற்றப்படும் பெண்களின் நிலைக்கு தீர்வு கிடைக்காது" என்றார்.

"என்ஆர்ஐ நபர்களை திருமணம் செய்து கொள்ளும் முன்பாக அவர்களை பற்றி விசாரிக்க ஒவ்வொரு வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் சமுகாய விவகாரங்களுக்கான அதிகாரியின் உதவியை பெண் வீட்டார் அணுகலாம்" என்கிறார் ஆர்த்தி கிருஷ்ணா.

"இந்தியாவில் என்ஆர்ஐ வாங்கிய சொத்துகளில் பிரச்னைகள், சொத்து ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற விவகாரங்களுக்கு மட்டுமே தற்போது மத்திய, மாநில அரசுகள் அளவில் சட்டப்பூர்வ ஆய்வு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கான சட்டங்கள் உள்ளன" என்று அவர் குறிப்பிட்டார்.

மகளிர் ஆணையம் கோரிக்கை

இத்தகைய சூழலில், வெளிநாடுகளில் உள்ள நீதிமன்றங்கள், இந்தியாவில் இந்து திருமணம் அல்லது முஸ்லிம் அல்லது வேறு மத சம்பிரதாயப்படி திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணங்கள் மீதான விவாக ரத்தை செய்யும் அதிகாரம் வெளிநாடு நீதிமன்றங்களுக்கு இருக்கக் கூடாது என்று தேசிய மகளிர் ஆணையம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மேலதிக நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பெண்ணுரிமை செயல்பாட்டாளர்களின் குறையாக உள்ளது.

தாலி ஆணுக்கும் வேலி! - புதுவை அருகே 'புதுமைத் திருமணம்'

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தாலி ஆணுக்கும் வேலி! – புதுவை அருகே 'புதுமைத் திருமணம்'

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :