கணவரை பெயர் சொல்லி அழைத்தால் ஆயுள் குறையுமா?

  • 30 ஜூலை 2017
தனது கணவனை மனைவி பெயர் சொல்லி அழைத்தால், துரதிஷ்டம் ஏற்பட்டு அவரின் ஆயுள் குறையும் என பெண்ணுக்கு சொல்லப்படுகிறது
Image caption கணவனை மனைவி பெயர் சொல்லி அழைத்தால், அவரின் ஆயுள் குறையும் என பெண்ணுக்கு சொல்லப்படுகிறது

மரியாதையை தெரிவிக்கும் விதமாக , இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள் தங்கள் கணவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை.

இந்திய நகரங்களில் இந்த வழக்கம் குறைவாக இருக்கும் போதிலும், கிராமப்புறங்களில் இந்த கலாசாரம் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது,இந்திய பெண்கள் இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

பெயரில் என்ன இருக்கிறது? கண்டிப்பாக நிறைய இருக்கிறது. நான் இதனை என்னுடைய வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய தந்தை கடந்த ஆண்டு மரணமடையும் வரை, எனது பெற்றோர் கடந்த 73 ஆண்டுகளாக திருமண வாழ்வில் இருந்தனர். இவர்களின் திருமணம் நடைபெறும் போது, எனது தாய்க்கு 11 வயது. எனது தந்தை அப்போதுதான் தனது 15-ஆம் வயதில் காலடி எடுத்து வைத்திருந்தார்.

பல தசாப்தங்களாக இணைந்து வாழ்ந்து வந்த அவர்கள், தங்கள் வாழ்நாளில் வட இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள குக்கிராமத்திலும், பின்னர் கொல்கத்தாவிலும் (முன்னர் கல்கத்தா) வசித்தனர். ஆனால் இந்த காலகட்டத்தில் எனது தாய், என் தந்தையின் பெயரை சொல்லி ஒரு முறை கூட அழைத்ததில்லை.

நாங்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் கூட , ஹிந்தியில் தந்தை என பொருள்படும் `பாபுஜி` என்ற வார்த்தை மூலமாகத்தான் அவரை எங்களிடம் குறிப்பிடுவார். அவரை நேரடியாக அழைக்கும் போது, `நீங்கள்` என ஹிந்தியில் பொருள்படும் `ஹே ஹோ` என்ற வார்த்தையைத்தான் குறிப்பிடுவார்.

பதின்ம வயதுக்குள் நுழைந்த நாங்கள், இதிலுள்ள காரணத்தை புரிந்து கொண்ட பிறகு, நாங்கள் எங்களது அம்மாவை கிண்டல் செய்வோம். எங்கள் தந்தையை ஒரு முறையாவது எங்கள் தாய் பெயர் சொல்லி அழைத்துவிட வேண்டும் என்பதற்காக, பல முயற்சிகளை செய்தோம். ஆனால் கடைசி வரை அவர் அதை செய்யவே இல்லை.

இந்திய சமுதாய அமைப்பின் கலாசாரத்தின்படி, கணவனுக்கு கண்டிப்பாக மனைவி மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக, கணவன் என்பவர் கடவுளுக்கு நிகரானவர் என பெண்களின் சிறுவயதிலிருந்தே கற்றுத்தரப்படுகிறது.

தனது கணவனை மனைவி பெயர் சொல்லி அழைத்தால், துரதிஷ்டம் ஏற்பட்டு அவரின் ஆயுள் குறையும் என பெண்ணுக்கு சொல்லப்படுகிறது. இந்த தடையானது கணவன் மட்டும் அல்லாமல், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த வழக்கத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள், மிக மோசமான விளைவுகளை கூட ஏற்படுத்தலாம்.

ஒரிசாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை பழிவாங்க கூட இந்த வழக்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

`ஒரு நாள் எனது மைத்துனி யாரெல்லாம் வெளியில் உட்கார்ந்திருக்கிறார்கள்? என என்னிடம் கேட்டார். எனது கணவரின் மாமா உட்பட வெளியில் அமர்ந்திருந்த ஆண்களின் பெயரை குறிப்பிட்டு விபரம் சொன்னேன்.` என பிரசாரக் குழுவான வீடியோ வாலன்டீர்ஸ் அமைப்பு தயாரித்துள்ள ஆவணப்படம் ஒன்றில் மாலதி மஹாதோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மஹாதோவின் மைத்துனி ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த பஞ்சாயத்தினர், மஹதோ கூறிய வார்த்தைகள் `கண்டிக்கத்தக்கவை` எனவும் `அவர் தனது குழந்தைகளுடன் ஊரின் எல்லையில் வாழ வேண்டும்` என தீர்ப்பு கூறி வெளியேற்றினர். கடந்த 18 மாதங்களாக மற்ற கிராமங்களால் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Video Volunteers

`ஆணாதிக்க படிநிலையானது பல நிலைகளில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது.` என சமூக மானுடவியலாளாரான பேராசிரியர் ஏ.ஆர்.வாசவி தெரிவிக்கிறார்.

`கணவன் கடவுளுக்கு நிகரானவராக கருதப்படுவதால், அவர் வணங்கப்பட வேண்டும். கலாசார வழக்கப்படி, கணவன் உயர்சாதியை சேர்ந்தவராகவும், மனைவிக்கு பொருளாதார ரீதியாக ஆதரவளிப்பராகவும் இருப்பார். எனவே அவர்தான் `எஜமான்` அல்லது `உரிமையாளர்`. மேலும் பொதுவாக அவர் வயதானவராக இருப்பார். அதனை கருத்தில் கொண்டும் அவருக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும்.` என அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Video Volunteers
Image caption `கணவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது என கேட்கிறார்கள்.` :ரோஹினி பவார்.

இந்த ஆணாதிக்க கலாச்சாரத்தை தடுப்பதற்காக, சில கிராமப்புற சமுதாய மக்களிடம் வீடியோ வாலன்டீர்ஸ் அமைப்பினர் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

தங்கள் கணவரை (பெயரைச் சொல்லாமல்) எப்படியெல்லாம் இந்திய மனைவிகள் அழைக்கிறார்கள்?

  • `இன்னாரின் அப்பா` அல்லது தனது கணவருடைய தொழிலை குறிப்பிட்டு அழைக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, `டாக்டர் அய்யா` அல்லது `வக்கீல் அய்யா`
  • `என்னங்க`, `ஏங்க`, `கொஞ்சம் கேக்குறீங்களா` எனக் கூட இந்திய மனைவிகள் கணவன்மார்களை அழைப்பார்கள்.
  • சில இந்திய மொழிகளில், `சகோதரர்`, `மூத்த சகோதரர்`, `ஹலோ` அல்லது `உரிமையாளர்` என கணவரை அழைப்பது வழக்கமான ஒன்று.

கடந்த அக்டோபர் மாதம், புனே நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலரான ரோஹினி பவார் என்பவர், தனது கிராமத்தில் உள்ள பெண்கள் விவாதக் குழுவில், கணவர் பெயரை சொல்லி அழைப்பது குறித்த விவகாரத்தை எழுப்ப முடிவு செய்தார்.

மற்றவர்கள் முன் இந்த பிரச்சனையை எழுப்பும் முன்னர், தானே இதனை முதலில் செய்ய முடிவெடுத்தார்.

`15 வயதில் திருமணம் செய்து கொண்ட நான், கடந்த 16 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருக்கிறேன். இதுவரை ஒருமுறை கூட எனது கணவர் பிரகாஷின் பெயரைச் சொல்லி நான் அழைத்ததில்லை.` என பவார் பிபிசியிடம் தெரிவித்தார்.

`முன்னரெல்லாம், அவரை ` பாபா` என அழைப்பேன். ஏனெனில் அவருடைய மைத்துனர்களும் அப்படித்தான் அவரை அழைப்பார்கள். அல்லது ஆஹோ ( நீ என மராத்தி மொழியில் பொருள்) என அவரை அழைப்பேன்.` என அவர் கூறுகிறார்.

பெயர் சொல்லி தனது மனைவி அழைப்பது குறித்து பிரகாஷ் கவலைப்படவில்லை. ஆனால் கிராம மக்கள் இதனை ஏற்கவில்லை. பலர் இந்த தம்பதிகளை பரிகாசம் செய்தனர்.

இந்த எண்ணம் குறித்து தன்னுடைய கிராமத்தின் பெண்கள் விவாத குழுவில் பவார் பேசிய போது, பலரும் அதனை வரவேற்றுள்ளனர்.

`அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அந்த நாளில் நிறைய சிரித்தோம். எங்கள் வாழ்க்கையில் முதன்முறையாக, எங்களது கணவர்களின் பெயரை சத்தமாக அழைத்தோம்.` சிரித்துக் கொண்டே கூறுகிறார் பவார்.

`பெண்களிடன் தங்களது கணவர்களின் பெயரை கோபமாக, மகிழ்ச்சியாக மற்றும் காதலுடன் அழைக்குமாறு கேட்டு, அதனை வீடியோவாக பதிவு செய்ய திட்டமிட்டிருந்தோம். இதனை எங்களில் ஒரு பெண் செயல்படுத்திப் பார்த்தார். தன்னுடைய வீட்டிற்கு சென்ற அந்த பெண், தனது கணவரை பார்த்த உற்சாகத்தில் அவரின் பெயரைச் சொல்லி சத்தமாக அழைக்க, அதற்கு பதிலாக அவருக்கு கன்னத்தில் அறைதான் கிடைத்தது.

இதே போல் மீண்டும் ஒரு முறை பெயரைச் சொல்லி அழைத்தால், அடி பலமாக இருக்கும் என அந்த பெண்ணை அவரது கணவர் எச்சரித்துள்ளார்.` என பவார் தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Video Volunteers

இந்திய நகரங்களில், மனைவிகள் தங்கள் கணவரின் பெயரைச் சொல்லி அழைப்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. பெண்களின் கல்வியறிவு வளர்வதால்,இந்த பழக்கத்தை பின் தொடரும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கு மாற்றாக காதல் திருமணங்கள் பெருகி வருவதால், இந்த கலாசாரம் காலாவதியான ஒன்றாக மாறி வருகிறது.

`நான் திருமணம் செய்து கொள்ளும் போது, எனது கணவர் என்னுடைய அலுவலகத்தில் சக ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக அவரை பெயர் சொல்லித்தான் அழைத்து வருகிறேன். திருமணம் ஆன பிறகு இந்த பழக்கத்தை நிறுத்துவது என்பது முட்டாள்தனமானது.’

ஆனால் இந்த மாற்றமானது தற்போதும் சமுதாயத்தின் `மிகச் சிறிய` பகுதிக்கு மட்டுமே பொருந்தும்.`அந்த மிகச்சிறிய பகுதி என்பது படித்த, மன தைரியம் உள்ள பெருநகரங்களில் வாழும் பெண்கள் மட்டுமே .` என ஏ.ஆர்.வாசவி கூறுகிறார்.

`இன்னும் பல மில்லியன் பெண்கள், பழமைவாதத்தை பின்பற்றும் இந்திய கிராமப்புறங்களில் வசித்து வருகிறார்கள் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. புதிதாக திருமணமான பெண் ஒருவர், இந்த வழக்கத்திற்கு எதிராக செயல்பட நினைத்தால், அவர் உடனடியாக தனது மாமியாராலோ அல்லது வயதில் மூத்த பெண்களாலோ எச்சரிக்கப்படக் கூடும்.`

தனது கிராமத்தில் கிடைக்கும் எதிர்ப்புகள்தான், இந்த ஆணாதிக்க கலாசாரத்திற்கு எதிராக சவால்விடுவதற்கு தங்கள் குழுவில் உள்ள பெண்களுக்கு மன உறுதியை அளித்து வருவதாக ரோஹினி பவார் தெரிவிக்கிறார்.

`மாற்றம் என்பது மிக எளிதானதல்ல.சிறிய பிரச்சனைகளை எதிர்க்க முன் வராதபோது, பெரிய ,முக்கியமான பிரச்சனைகளுக்கு எதிராக எப்படி சவால்விட முடியும்` என பவார் கூறுகிறார்.

`இது ஒரு சிறிய அடி போல தோன்றலாம். ஆனால் இதுதான் முதல் அடி. முதல் அடி எப்போதும் பெரியது.` என அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்