கீழடி அகழ்வு மாதிரிகள் 2,200 ஆண்டுகள் பழமையானவை: இந்திய அரசு தகவல்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் சேகரிக்கப்பட்ட அகழ்வாய்வுப் பொருள்கள் சுமார் 2,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை K STALIN

கீழடியில் உள்ள பொருள்கள் சங்க காலத்தை சேர்ந்தவை என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வியாழக்கிழமை பதில் அளித்துள்ளார்.

அதில், கீழடியில் இருந்து இருந்து கரியமில பொருள்கள் சேகரிக்கப்பட்டு அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

மேலும், அந்த கார்பன் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அதில் முதலாவது மாதிரியின்படி, இவை சுமார் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின்படி இவை 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ இருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் மகேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

கீழடியில் முன்பு தொல்லியல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அங்கு தொல்லியல் கண்காணிப்பாளராக கே.அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றினார்.

தற்போது அவர் அசாம் மாநிலத்தின் கௌஹாத்தியில் பணிபுரிந்து வருகிறார்.

அமெரிக்க ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"கீழடியில் பூமிக்கு அடியில் 4.5 மீட்டர் ஆழத்தில் இருந்து கரியமில மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும், ஆய்வு முடிவில் அவை கிறிஸ்துவுக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டு பழமையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது " என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கீழடி அகழ்வாய்வுப் பணியின்போது, ஆதன், உதிரன், சந்தன் போன்ற பெயர்கள் அங்குள்ள மாதிரிகளில் இருந்தன என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.

சங்க காலத்திலேயே நகர நாகரிகம் இருந்ததை கீழடி அகழ்வு மாதிரிகள் நிரூபிக்கும் வகையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மதுரை - சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் கீழடி கிராமம் அமைந்துள்ளது.

கீழடி அகழாய்வுகளைத் தொடர கோரிக்கை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கீழடி அகழாய்வுகளைத் தொடர கோரிக்கை

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :