'சாக்லெட் தந்த சித்தப்பா, என்னை மாமா என்று கூப்பிட சொன்னால், அதை மறக்கமுடியுமா?'

BadTouch படத்தின் காப்புரிமை Getty Images

தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் ஏழாம் பகுதி. இந்தத்தொடரில் குறிப்பிடப்பட்ட அனாமிகா, தீபா, அதுல் என்பவை வெறும் பெயர்கள் மட்டும் அல்ல. சமூகத்தின் பிரதிநிதிகள். குழந்தைப் பருவத்தில் பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்த புரிதல் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். விவரம் புரிந்த பிறகே அதன் தாக்கங்களை உணர்கின்றனர்.

தவறான சம்பவங்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மை ஆட்கொண்டு, ஆட்டுவிக்கும். மனம் வருத்தப்பட்டு ஒருவிதமான மன அழுத்தமும், மனச்சோர்வும் ஏற்படும், சில சமயங்களில் மனதில் வன்முறையும், ஆவேசமும் கிளர்ந்தெழும். சிறுபிராயத்து நினைவுகள் மனநிம்மதியை சீர்குலைக்கும்.

'சித்தப்பா சாக்லெட்டும், தின்பண்டமும் கொடுத்து என்னை மாமா என்று கூப்பிடச் சொன்னால், அதை மறக்கமுடியுமா?'

சிறு குழந்தைகளுக்கு எல்லா விசயங்களும் சொல்லவேண்டாம், அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று பெரியவர்கள் திரை போட்டுவிடுகின்றனர். குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்ல, கண்மூடித்தனமான நம்பிக்கையும் பாசமுமே காரணங்களாகிறது. தவறு நடப்பது தெரியவந்தாலும், தவறிழைப்பவர் நெருங்கியவர்களாக இருப்பதாலும், அவப்பெயர் ஏற்படும் அச்சத்தினாலும் மறைத்துவிடுகின்றனர்.

நம்பிக்கை மோசடி

கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மிகவும் அதிகரித்துவிட்டதாக, உத்தரப்பிரதேச மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையின் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் விபா சொல்கிறார்.

பெற்றோர் இல்லாத நிலையில், உறவினர்களின் வீட்டில் வசிக்கும் குழந்தைகளே அதிக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுவதாக கூறும் விபா, அந்த சூழ்நிலையில் தனக்கு நிகழும் கொடுமைகளை குழந்தை யாரிடமும் பகிர முடியாத நிலையில் ஆதரவற்று அமைதியாக இருப்பதாக கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை AFP

நம்பமுடியாத ஆனால் உண்மைச் சம்பவங்களை பார்க்கும்போது, உறவுகளின்மீதே நம்பிக்கையற்றுப் போவதாக விபா வருத்தப்படுகிறார். ஆனால் இவற்றை தடுக்கமுடியும் என்றும், தேவை கூடுதல் கண்காணிப்பு மட்டுமே என்கிறார்.

இது சமூக பொறுப்பு என்று கூறும் அரசு அதிகாரி விபா, ஒரு குழந்தை இயல்பாக இல்லை என்றோ, கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவோ தோன்றினால் உடனே 1098 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறுகிறார்.

குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் என்றால் என்ன?

குழந்தைகள் மீது துஷ்பிரயோகம் என்பதற்கான விளக்கத்தை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பணியாற்றும் எஃப்.எக்ஸ்.வி இந்தியா தொண்டு நிறுவன திட்ட மேலாளர்சத்ய பிரகாஷ்.

பொதுவாக உடலுறவை மட்டுமே பாலியல் துன்புறுத்தலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர். ஆனால் அது சரியல்ல. 2012ஆம் ஆண்டின், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி, குழந்தைகளை பாலியல் ரீதியாக தொடுவது, துன்புறுத்துவது, சீண்டுவது, அவர்கள் முன் ஆபாசமாக நடந்துக்கொள்வது, ஆபாசப் படங்களை காட்டுவது, ஆபாசமாக பேசுவது உட்பட பல செயல்கள் குற்றங்கள்.

எப்போது வேண்டுமானாலும் இதுபோன்ற கொடுமைகள் குழந்தைகளுக்கு நிகழலாம். குழந்தைக்கு முற்றிலுமாக பாதுகாப்பளிக்கும் இடம் எது? வீடா? அவசியம் இல்லை. வீடு, அக்கம்-பக்கம், பள்ளி, பொதுஇடம் என எங்கும் எப்போதும் குழந்தைகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஒரே வழி என்கிறார் சத்யபிரகாஷ். தற்காத்துக் கொள்வதே மிகச்சிறந்த வழி என்னும்போது, அதற்கு முதலில் தொடுகைகளை இனம் காண சொல்லிக் கொடுக்கவேண்டும். 'குட் டச்', 'பேட் டச்' என்றால் என்ன? யாராவது தவறாக தொட்டால் என்ன செய்யவேண்டும் என்பவற்றை குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் கற்பிக்கவேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தக் கோணத்திலும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அரசு முகமைகள், அரசுசாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என பல தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு தேவை.

1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை சொல்லாம் என்பதை சத்யபிரகாஷும் சுட்டிக்காட்டுகிறார். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு முதலில் மனோதத்துவ ரீதியிலான ஆலோசனைகள் வழங்கவேண்டும். மருத்துவ உதவிகளுக்கான தேவை இருந்தாலும் அதையும் செய்யவேண்டும்.

தங்களிடம் வரும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளித்த பிறகு, குழந்தை நல தங்கும் விடுதிகளுக்கு அனுப்ப்படுவார்கள். அப்போது அவர்கள் எதிர்காலத்தை எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ளும் மன உறுதியை பெறுவார்கள்.

சட்ட உதவி கிடைக்கும்

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. ஆனால் பொதுவாக சட்ட நடவடிக்கைகள் என்றாலே பின் வாங்கும் போக்கே காணப்படுகிறது. சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் குழந்தைகளுக்கு தேவையான அனைத்துவிதமான பாதுகாப்பும் வழங்கப்படும். இதுபோன்ற வழக்குகளில், குற்றம் சாட்டியவர், தனக்கு கொடுமை இழைக்கப்பட்டதை நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. மாறாக, குற்றம் சாட்டப்பட்டவரே, தான் குற்றம் இழைக்கவில்லை என்று நிரூபிக்க்க் கடமைப்பட்டவர்.

குழந்தைகளின் பிரச்சனை புரிந்து கொள்வது

குழந்தைகளுக்கு சரி-தவறு பற்றி தெரியாத நிலையில் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்/சீண்டல்களை எப்படி தெரிந்துக்கொள்வது?

இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் குழ்ந்தைகள் மற்றவர்களிடம் இருந்து விலகியிருக்க விரும்புவார்கள் என்று சொல்கிறார் மனநல ஆலோசகர் நீதூ ராணா. சிலரை கண்டாலே பயப்படுவது, அவர்களிடம் செல்வதற்கு மறுப்பது போன்றவற்றை கவனிக்கவேண்டும். அருகிலிருக்கும் கடைக்கு போவதற்கே குழந்தை பயப்படும்.

இதைத்தவிர, அந்தரங்க உறுப்புகளில் வலி ஏற்படுவதாக சொன்னால், அதை உடனடியாக கவனிக்கவேண்டும். சில சமயங்களில் குழந்தை எதையும் வெளியில் சொல்லாமல், மறைக்கத் தொடங்கிவிடும். அம்மா குளிக்க வைக்க வந்தாலோ, எண்ணெய் பூச வந்தாலோ மறுப்பு சொல்வது, குளிக்கும்போதும் ஆடையை கழற்ற மறுப்பது போன்ற குழந்தைகளின் நடத்தை மாற்றங்களை பெற்றோர் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

படத்தின் காப்புரிமை AFP

குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதை நீங்களாகவே தெரிந்துக் கொண்டால், முதலில் ஆறுதல் சொல்லுங்கள், நம்பிக்கையூட்டுங்கள். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதை புரிய வையுங்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடிப்படைத் தேவை தேவை, ஆறுதல், மன அமைதி, நம்பிக்கை.

குழந்தைக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டதும், சிறிய சிறிய விசயங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள். அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். நீங்களாக தெரிந்துக் கொள்ளாமல் குழந்தையே உங்களிடம் வந்து தனக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொன்னால், அவர்களின் அச்சத்தை அகற்றி, பாதிப்பு ஏற்படுத்துபவர்களிடமிருந்து விலக்கி வையுங்கள்.

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அவர்களின் மழலையையும், குழந்தைத்தன்மையையும் மாசுபடுத்தி, மாறா வடுக்களாக மனதில் பதிந்துவிடுகிறது. நீதூ ராணாவின் கருத்துப்படி, பெரியவர்களானதும் அந்தக் குழந்தைகள் மன அழுத்தத்தால், மனச்சோர்வால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிலருக்கு ஆளுமைத் தொடர்பான கோளாறு (personality disorder) ஏற்படுகிறது. உறவுகளில் பிரச்சனை ஏற்படும். சிலரது தாம்பத்ய உறவுகள் இயல்பாக இருக்காது. இறுதியில் வாழ்க்கையே போர்க்களமாகிவிடும்.

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும், இந்த விசயத்தில் விழிப்புணர்வு ஏற்படவேண்டியதும், அதை பரவலாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். விழிப்புணர்வு என்று சொல்வது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும்தான்! இல்லாவிட்டால், மழலைப்பருவ நினைவுகள் மீளாத்துயராக மாறி, காரணமே தெரியாத பிரச்ச்சனைகளுக்கும், சிக்கல்களுக்கும் உருவாகும்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்