கலாம் நினைவிடத்தில் குரான், பைபிள் வைக்கப்பட்டதால் சர்ச்சை

கலாம் நினைவிடத்தில் குரான், பைபிள்
Image caption இருபது கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கலாம் நினைவிடத்தை பிரதமர் மோதி கடந்த வாரம் திறந்துவைத்தார்.

தமிழ்நாட்டில், ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவரது சிலையுடன் பகவத் கீதை சிலையாக வடிக்கப்பட்டிருந்ததற்கு அருகில் பைபிள் மற்றும் குரான் வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படும் கலாம் நினைவிடத்தில் எந்தவித முன் அனுமதியின்றி கலாமின் பேரன் அப்துல் சலீம் பைபிள் மற்றும் குரான் புத்தகங்களை வைத்தார் என்று இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.

இருபது கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கலாம் நினைவிடத்தை பிரதமர் மோதி கடந்த வாரம் திறந்துவைத்தார்.

நினைவிட திறப்பு விழாவிற்குள் அங்கு எல்லாப் பொருட்களையும் வைக்க முடியாத காரணத்தால் மட்டுமே தானாக குரான் மற்றும் பைபிளை வைத்ததாக சலீம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஞாயிற்றுக்கிழமையன்று ஊடகங்களிடம் பேசிய சலீம், அவர் வைத்த புத்தகங்களை, கலாம் சிலைக்கு அருகில் உள்ள ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்துவிட்டதாகத் தெரிவித்தார். 'கலாமின் பொருட்களில் அவர் வைத்திருந்த சுமார் 5,000 புத்தகங்கள் எங்களிடம் உள்ளன. அவர் பயன்படுத்திய பொருட்களை ஒவ்வொரு இடத்தில் பொருத்த நேரம் வேண்டும். இன்னும் 15 நாட்களில் எல்லாப் பொருட்களும் வைக்கப்படும்,'என்றார்.

கலாம் எல்லா மதத்தினரையும் சமமாக பார்ப்பவர் என்பதால் மட்டுமே பைபிள் மற்றும் குரானை அவரது சிலைக்கு அருகில் வைத்ததாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், குரான் மற்றும் பைபிளை அனுமதி பெற்று வைத்திருக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலாம் சிலைக்கு அருகில் பகவத் கீதை மட்டும் சிலையாக வடிக்கப்பட்டு, குரான் மற்றும் பைபிள் வைப்பதற்கு எழுந்துள்ள எதிர்ப்பைக் கண்டித்துள்ளனர்.

இந்த பிரச்சனை தொடர்ந்தால், மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார் .

கலாமின் பேரன் அப்துல் சலீமிடம் கருத்து கேட்க பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பதில் கிடைக்கவில்லை .

தங்கச்சிமடம் காவல் நிலைய ஆய்வாளர் முரளியிடம் கேட்டபோது இந்து மக்கள் கட்சியினர் கொடுத்த புகரை பெற்றுக்கொண்டதாகக் கூறினார். ''பைபிள் மற்றும் குரான் கலாம் சிலை அருகில் இருந்து நீக்கப்பட்டு, சிலைக்குப் பின்புறம் உள்ள கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பிரச்சனை எதுவும் இல்லை என்பதால், தேவைப்பட்டால் மட்டும் விசாரணை நடத்துவோம். இதுவரை யாரும் கலாம் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தவில்லை''என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்