குஜராத்தின் கூவத்தூராக மாறிய பெங்களூரு உல்லாச விடுதி

  • 31 ஜூலை 2017
அகமத் படேல் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அகமத் படேல்

தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் ஒரு முக்கிய திருப்பமாக, சசிகலாவை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியபோது, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால், சசிகலா நாற்காலியை பிடிக்க தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்டில் தங்கவைத்தார்.

பிறகு நடந்த மாற்றங்களால், சசிகலா முதலமைச்சராவதில் சிக்கல் ஏற்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது தமிழகத்தின் வரலாறு.

படத்தின் காப்புரிமை Getty Images

சரித்திரங்கள் மீண்டும் திரும்புவது இயல்பு என்றாலும், மிகக் குறைந்த கால இடைவெளியிலேயே எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஒருமுறை `பத்திரமாக` தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நிகழ்விடம் வேறு. தமிழகமல்ல, குஜராத். காட்சிகள் மாறினாலும் நோக்கம் ஒன்றே. அது முதலமைச்சருக்கான வாக்கெடுப்பு, இது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல்.

அமித்ஷா, ஸ்மிருதி இரானியும் களத்தில்

மாநிலங்களைவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள 3 இடங்களில் இரண்டு இடங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசியத் தலைவர் அமித்ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்ருமிதி இராணியும் போட்டியிடுகின்றனர்.

மூன்றாவது இடத்துக்கு காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சங்கர் சிங் வகேலா, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கொறடா பல்வந்த் சிங் ராஜ்புத் உள்பட 5 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது மாநிலங்களவை தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதன்பிறகு, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மூன்றாவது வேட்பாளராக அகமது பட்டேலை எதிர்த்து பல்வந்த் சிங் ராஜ்புத் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 3 காலியிடங்களுக்கு 4 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியது.

படத்தின் காப்புரிமை Reuters

தற்போது குஜராத் சட்டமன்றத்தில் 57 ஆக இருந்த காங்கிரஸின் பலம் 51 ஆக குறைந்துவிட்டது. மேலும் சிலர் வெளியேறி காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலுக்கு தேவையான வாக்குகள் கிடைக்காமல் சிக்கல் ஏற்படும் என்பதால் குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரு ரிசார்ட்டில் 'பாதுகாப்பாக' தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமையன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோஹில், பாரதியஜனதா கட்சியின் ஆட்சியில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டிருப்பதாகவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவே குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூருவுக்கு வந்துள்ளனர் என்றும், கட்டாயத்தின் பேரில் யாரும் அழைத்துவரப்படவில்லை என்று கூறினார்.

'சொகுசாக இருக்கவேண்டுமானால், வெளிநாடுகளுக்கு சென்றிருப்போம். எம்.எல்.ஏக்களை தங்கள் தரப்புக்கு இழுக்க பாரதிய ஜனதா கட்சி குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளது. எஞ்சியுள்ள 51 எம்.எல்.ஏக்களில் யாரும் பதவி விலகவில்லை என்பதால், அகமத் படேல் வெற்றிபெறுவது உறுதி' என்று கோஹில் தெரிவித்தார்.

வகேலா கட்சியைவிட்டு விலகிய பிறகு, இன்று முதல்முறையாக 42 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ஊடகங்களின் முன் நிறுத்தி அணிவகுப்பும் நடத்தப்பட்டது. காங்கிரஸின் ஆறு உறுப்பினர்கள் விலகியபிறகு குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 182இல் இருந்து 176 ஆக குறைந்துவிட்டது.

குற்றச்சாட்டுகளும், எதிர்குற்றச்சாட்டுகளும்

குஜராத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிகப்பட்டிருக்கும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லாமல், ரிசார்டில் தங்கியிருக்கின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டுகிறது.

அதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோஹில், எங்கள் உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். உண்மையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பல அமைச்சர்கள் தான் செல்லவில்லை என்று எதிர் குற்றச்சாட்டு வைக்கிறார்.

ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டுக்கு பலன் ஏற்பட்டது. அகமத் படேல் தந்து பகுதிக்கு சென்று புகைப்படத்தை டிவிட் செய்து, `இன்று குஜராத்தில் பல வெள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டதாக` பதிவிட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption அகமத் படேலின் டிவிட்டர் பதிவு

'மாநில அரசு நிர்வாகம் மந்தமாக இயங்குகிறது. அரசு ஆக்கப்பூர்வமாக துரிதமாக செயல்பட்டிருந்தால், சேதங்களை தவிர்த்திருக்கலாம்' என்று மற்றொரு டிவிட்டர் செய்தியில் தெரிவித்திருக்கிறார் அகமத் படேல்.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption அகமத் படேலின் டிவிட்டர் பதிவு

தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார், 'மாநிலத்தில் பலவிதமான அழுத்தங்களை எதிர்கொண்ட பிறகு எம்.எல்.ஏக்கள் இப்போதுதான் ஓய்வெடுக்கிறார்கள்.''

'இவர்களில் சிலர் ஆலயங்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்போம். ஆனால், பாரதிய ஜனதா கட்சி மற்றும் வகேலாவின் குற்றசாட்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் தனது உறுப்பினர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால், அவர்கள் பெங்களூருவில் இருக்கிறார்கள்.'என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption ஷங்கர் சிங் வகேலா

வகேலாவின் குற்றச்சாட்டுக்களை அரசியல் நிபுணர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்?

"வகேலாவும், ஆறு எம்.எல்.ஏக்களும் விலகிய பிறகு ஏற்பட்ட அச்சத்தால், காங்கிரஸ் எஞ்சியவர்களை பெங்களூருவில் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஊடகங்களின் முன் அவர்களின் அணிவகுப்பையும் நடத்திக்காட்டிவிட்டது. ஆனால், தேர்தலில் யாரும் அணி மாறி வாக்களிக்கமாட்டார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாது" என்று அகமதாபாதை சேர்ந்த அரசியல் விமர்சகர் தீமந்த் புரோஹித் பிபிசியிடம் தெரிவித்தார்.

"வகேலா காங்கிரஸை விட்டு விலகியபிறகு, அணி மாறி வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டன. காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமத் படேல், மாநிலங்களவை தேர்தலில் தோற்றுவிட்டால், அது கட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்."

எம்.எல்.ஏக்கள் பாதுகாக்கப்படுவது கூவத்தூர் ரிசார்டாக இருந்தாலும் சரி, பெங்களூரு ஈகிள்டன் ரிசார்ட்டாக இருந்தாலும் சரி, அரசியல் சூறாவளியில் சிக்குவது கட்சிகளின் சதுரங்க காய் நகர்த்தல்களே. தமிழகமோ, குஜராத்தோ சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை ஒன்றே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்