நலன்களை பாதுகாக்காத சட்ட மசோதா: திருநங்கைகள் குமுறல்

  • 1 ஆகஸ்ட் 2017

இந்திய அரசின் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவில் உள்ள சில அம்சங்கள் தங்களின் நலன்களைக் காக்கும் வகையில் இல்லை என்று திருநங்கைகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Image caption உரிமைக்கு போராடும் திருநங்கைகள்

புதிய சட்ட மசோதா அறிமுகம்

மக்களவையில் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த மசோதாவை, மக்களவை பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ரமேஷ் பயஸ் தலைமையிலான மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்தது.

அந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் கே.மரகதம் (மக்களவை), விஜிலா சத்யானந்த் (மாநிலங்களவை) உள்பட மொத்தம் 28 பேர் நிலைக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த ஆண்டில் மூன்று முறையும் இந்த ஆண்டில் இரு முறையும் கூடி மசோதாவை ஆய்வு செய்த நிலைக் குழு, தனது அறிக்கையை அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

நிலைக்குழுவின் கவலைகள்

அதில் வீதிகளில் வாழ்வாதாரத்துக்காக பிச்சை எடுக்கும் திருநங்கைகளின் செயலை குற்றமாகக் கருதும் அம்சங்களை, மசோதா கொண்டுள்ளதாக நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது.

"திருநங்கைகள் வசிப்பதற்கு நிரந்தரமான வீடு, வேலைவாய்ப்பு ஆகியவை உறுதிபடுத்தப்பட்டால் அவர்கள் அடிக்கடி இடம் மாறுவதும், தங்களின் வாழ்வாதாரத்துக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட மாட்டார்கள்" என்று பிபிசி தமிழிடம் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினரும் தமிழக எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த் கூறுகிறார்.

"பொது கழிவறைகள், அரசு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் திருநங்கைகளுக்காக தனி கழிவறைகள், விண்ணப்ப படிவங்களில் ஆண், பெண் பாலினம் போல "திருநங்கைகள்" என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தனியாக பாலின குறியீடு நிரப்பும் பகுதி இருக்க வேண்டும். அவர்களை "பிற" என்ற பாலின வட்டத்துக்குள் சேர்க்கக் கூடாது" என்கிறார் விஜிலா சத்யானந்த்.

தமிழகத்தில் திருநங்கைகள் நலன்களுக்காக தனி வாரியம் செயல்படுவதாகவும் வேலைவாய்ப்பு திட்டங்களில் அவர்கள் ஊக்குவிப்படுவதாகவும் விஜிலா சத்யானந்த் கூறுகிறார்.

பெயரை மாற்ற கோரிக்கை

இந்த மசோதாவின் பெயரை "திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா" என்பதற்கு பதிலாக, "திருநங்கைகள் மற்றும் இரு பாலினத் தன்மை மிக்கவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா" என மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலில் பரிந்துரை செய்ததாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ரமேஷ் பயஸ் கூறுகிறார்.

ஆனால், இரு பாலினத்தவர் தன்மை மிக்கவர்களின் நலன்களும் திருநங்கைகள் மசோதாவில் பாதுாக்கப்படும் என மத்திய அரசு அளித்த உறுதியை தமது நிலைக்குழு பின்னர் ஏற்றுக் கொண்டது என்று ரமேஷ் பயஸ் கூறினார்.

திருநங்கைகளின் வாதம்

சேலத்தில் உள்ள "தாய்மடி அறக்கட்டளை" நிறுவனரும் திருநங்கையுமான கோ.தேவி பிபிசி தமிழிடம் கூறுகையில், "இந்தியாவில் பொது இடத்தில் ஆண் கழிவறைக்கு ஒரு திருநங்கையால் செல்ல முடியாது. பெண்கள் கழிவறைக்கு சென்றால் எங்களை ஏற்கக் கூடிய முழுமையான மனநிலைக்கு பெண்களில் பெரும்பாலானவர்கள் வரவில்லை. அந்த நிலை மாற வேண்டும்" என்கிறார்.

Image caption தாய்மடி அறக்கட்டளை நிர்வாகி கோ.தேவி

"வீடுகளில் புறக்கணிக்கப்பட்டும், வேலைவாய்ப்பும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கைவிடப்படும் திருநங்கைகள், பிச்சை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை குற்றச்செயலாகக் கருதக் கூடாது. அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடியதாக மசோதா இருக்க வேண்டும்" என்று தேவி கூறுகிறார்.

(சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தலில் 2016-ஆம் ஆண்டில் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் தேவி.)

தெளிவில்லாத மசோதா

தனி நபர்கள் இடையிலான வாய் வழி புணர்ச்சி அல்லாத செயல்கள், இந்திய தண்டனை சட்டத்தின் 377-ஆவது பிரிவின்படி எவ்வாறு குற்றமாகக் கருதப்படும் என்பதை மசோதா தெளிவுபடுத்தவில்லை என்று தனது அறிக்கையில் நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

திருநங்கைகள் மீதான உடல் மற்றும் பாலியல் ரீதியிலான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையும், மற்ற குற்றங்களுக்கு அவற்றின் தன்மைக்கு ஏற்ப தண்டனை விதிக்கலாம் என்று நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தாமலும், அவர்களின் செயலுக்கான காரணத்தை ஆராயாமலும் தண்டனை விதிப்பதற்கு சட்டம் இயற்றும் நடவடிக்கை ஏற்க முடியாதது என்கின்றனர் திருநங்கைகள்.

அரசுக்கு யோசனைகள்

ஆண், பெண் பாலினங்களை போல "திருநங்கைகள்" சமமான வேலைவாய்ப்பு மற்றும் வாழும் சூழ்நிலைகளை கொண்டிருக்கவில்லை என்றும், அந்த சமுதாயத்தினருக்கு ஓட்டுநர், நடத்துநர், போக்குவரத்து காவலர் போன்ற பணிகளை வழங்கி மாற்று வேலைவாய்ப்பை உருவாக்கும்படி மத்திய, மாநில அரசுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நிலைக்குழு யோசனை கூறியுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு சில வாரங்களுக்கு முன்பு ஆஜராகி திருநங்கையர்களின் நிலைமையை விளக்கி கருத்துகளைப் பதிவு செய்தவர்களில் ஒருவர் திருநங்கையான எஸ்.சுபிக்ஷா.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் இணைச் செயலாளரான அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "திருநங்கைகளும் இதே பூமியில் பிறந்தவர்கள்தான். கலை, கலாசாரம் அடிப்படையில் வட மாநிலங்களில் திருநங்கைகள் ஆடிப்பாடி பதாய் (பணம் பெறுதல்) வாங்குவது தெய்வீகச் செயலாகப் போற்றப்படுகிறது. ஆனால், தென்னிந்தியாவில் திருநங்கைகளுக்கு எவ்வித சமூக அங்கீகாரமும் கிடையாது" என்கிறார்.

Image caption திருநங்கை சுபிக்ஷா

"பிறப்பால் ஆணாக இருந்தாலும், உணர்வால் பெண்ணாகவே உள்ளோம். பிறப்பால் ஆண் உறுப்பும், பெண் உறுப்பும் சேர்ந்து பிறந்தவர்கள்தான் திருநங்கை என்றும் உறுப்பு சிகிச்சை செய்து கொண்டவர்கள்தான் திருநங்கையாக அடையாளப்படுத்தப்படுவார் என்ற அரசின் விளக்கம் சரியானது கிடையாது" என்பது சுபிக்ஷாவின் வாதம்.

இதேபோல, சிவில் உரிமைகளாகக் கருதப்படும் திருமணம், விவாகரத்து, குழந்தைகள் தத்து எடுத்தல் போன்றவை திருநங்கைகளுக்கு இல்லாத நிலையையும் திருநங்கைகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்தில் நியமனம்

திருநங்கை கிரேஸ் பானுவின் சாதனைப் பயணம்

சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது

திருமணம் செய்து கொள்ளாமலேயே, இசைவுடன் வாழும் திருநங்கைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பதால் அதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

திருநங்கைகளுக்கு என தனியாக எச்ஐபி எய்ட்ஸ் பரிசோதனை மையங்கள்; விமான நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்ற இடங்களில் திருநங்கைகளை சோதனை செய்யும் அலுவலராக திருநங்கை நியமிக்கப்பட வேண்டும் என்று நிலைக்குழு கூறியுள்ளது.

Image caption மசோதா நிறைவேற நம்பிக்கையுடன் காத்திருக்கும் திருநங்கைகள்

திமுக எம்.பி.யின் தனி நபர் மசோதா

முன்னதாக, 2015-ஆம் ஆண்டில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, திருநங்கைகள் பாதுகாப்புக்கான தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தினார். அந்த மசோதா பரிசீலனையில் உள்ளதாகக் கூறிய மத்திய அரசு, தனியாக ஒரு மசோதாவை கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

ஆனால் திருச்சி சிவா பரிந்துரைத்த, திருநங்கைகளுக்கான தனி வேலைவாய்ப்பு சிறப்பு மையம்; தேசிய மற்றும் மாநில அளவிலான திருநங்கைகள் ஆணையம்; ஆரம்ப பள்ளி, உயர்நிலை மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு போன்றவை ஏற்புடையதாக இல்லை என்று தனது மசோதாவில் மத்திய அரசு கூறியுள்ளது.

இது குறித்து திருச்சி சிவா பிபிசி தமிழிடம் கூறுகையில், "திருநங்கை" என்பவர் யார் என்பதை அடையாளப்படுத்த மத்திய அரசு அளித்துள்ள விளக்கம், அந்த பாலினத்தவர்களையே கேவலப்படுத்துவது போல உள்ளது.

"உடல் அமைப்பு வேறாக இருந்து, மனதால் ஒருவர் திருநங்கையாக இருந்தால் அவரை திருநங்கையாக ஏற்க வேண்டும் என்று எனது தனி நபர் மசோதாவில் முன்மொழிந்திருந்தேன். ஆனால், மத்திய அரசின் மசோதாவில், "பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் இருப்பவர்தான் திருநங்கை ஆக அடையாளப்படுத்தப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளது. இது திருநங்கைகளை கேவலப்படுத்துவது போல இது உள்ளது" என்கிறார் திருச்சி சிவா.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஆணையத்தை மத்திய அரசால் உருவாக்கும்போது, திருநங்கைகளுக்கான ஆணையத்தை மட்டும் மத்திய அரசால் உருவாக்க முடியாதா? என்று கேள்வி எழுப்புகிறார் திருச்சி சிவா.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கூத்தாண்டவர் கோயில் விழாவில் திருநங்கைகள்

அரசு மசோதாவின் முக்கிய அம்சங்கள்?

"திருநங்கை" என்பவர், முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாதவர்; பெண் அல்லது ஆண் பாலினங்களின் கலவையாக இருப்பவர்; பிறப்பால் குறிப்பிடப்பட்ட இனத்திற்கு பிந்தைய காலத்தில், ஆணாகவோ பெண்ணாகவோ இல்லாது, பாதி ஆண் மற்றும் பாதி பெண் தன்மையுடன் இருப்பவர்; இரு பாலினங்களுக்கும் உரிய குணங்களுடன் சாராமல் இருப்பவர், ஆகியோர் "திருநங்கை" ஆக அடையாளப்படுத்தப்படுவார் என்று மத்திய அரசின் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை மருத்துவ அதிகாரியின் கீழ் மாவட்ட பரிசோதனைக் குழுவினர் அளிக்கும் பரிந்துரையின்படி திருநங்கைக்கான தற்காலிக சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும்;

திருநங்கையாக இருப்பவர் தமது பாலினத்தை மாற்றிக் கொள்ளவும், தனது முதலாவது பெயரை பிறப்புச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களில் மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படும்;

குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான குடும்ப உறுப்பினர் ஆகியோருடன் வசிப்பதற்கான உரிமை வழங்கப்படும்;

கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் திருநங்கையின் உடல் நலனுக்கான நலத் திட்டங்களை உருவாக்கவும் அவர்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க தண்டனை வழங்கப்படும் போன்றவை மசோதாவின் முக்கிய அம்சங்கள்.

கணக்கெடுப்பில் குழப்பம்

"ஓரினச்சேர்கையாளர் அல்லது லெஸ்பியன் அல்லது இருபாலின சேர்க்கையாளர் ஆகியோரை "திருநங்கை" பட்டியலில் சேர்க்கக் கூடாது" என்று வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி அளித்த தீர்ப்பில் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒடிசா மாநிலத்தில் சாவித்ரி பூஜையில் வழிபடும் திருநங்கைகள்

முன்னதாக, இந்தியாவில் 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஆண் அல்லது பெண் அல்லாத பாலினத்தவர்கள் என்பதை குறிக்கும் "பிற" என்ற வாய்ப்பை 4,87,803 பேர் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு பதிவு செய்தவர்கள் திருநங்கையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான திருநங்கைகள் தங்களை ஆண் அல்லது பெண் பாலினமாகவும் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

எனவே, திருநங்கைகள் யார் என்பதும் இந்தியாவில் எவ்வளவு திருநங்கைகள் உள்ளனர் என்பது பற்றிய புள்ளிவிவரம் குழப்பமாக உள்ளதாக திருநங்கையர்கள் கருதுகின்றனர்.

"இதுபோன்ற குறைபாடான அம்சங்களைக் கொண்ட மசோதாவை நிறைவற்றாமல், மீண்டும் ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தி அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என்று திருநங்கையர்கள் கோருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்