தொடர் சலசலப்பு: கமல் பயணிக்கும் பாதை எது?

  • 2 ஆகஸ்ட் 2017

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற யூகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கும் நிலையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர் கிளப்பிவரும் தொடர் சர்ச்சைகள் அதற்கு வலுச்சேர்த்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாதை தெரிகிறதா?

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் இருப்பதாக கமல் கூறியது இந்த யூகத்துக்கு பலம் சேர்ப்பதாகவே அமைந்தது.

தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கமல் வெளியிட்டு வரும் கருத்துக்களும், அவர் எத்திசையில் பயணிக்க உள்ளார் என்ற வினாவை எழுப்பியது.

ஊழல் புகார்கள் தொடர்பாக அமைச்சர்கள் கேட்டுக்கொண்டபடி ஆதாரங்களை மக்களே இணையதளங்களில் அல்லது தங்களது வசதிக்கேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பிவைக்க வேண்டுமென கமல் வேண்டுகோள் விடுத்தார்.

செவ்வாய்க்கிழமையன்று தனது டிவிட்டர் பக்கத்தில், ''பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்துக்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது" என்று கமல் பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption டிவிட்டர் பதிவு

இந்நிலையில், கமலின் கருத்துக்களின் தன்மை குறித்தும், அண்மையில் அவர் தெரிவித்திருக்கும் விமர்சனங்கள், அதற்கு அவர் சந்திக்கும் எதிர்வினைகள் ஆகியவை அவர் பயணிக்கவுள்ள பாதையை தீர்மானிக்கிறதா என்பது குறித்து எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஞானி, பிபிசி தமிழிடம் உரையாடினார்.

கமல் தெரிவிக்கும் கருத்துக்களின் சமூக அக்கறை குறித்து ஞானி கூறுகையில், ''மக்கள் செல்வாக்குள்ள கமல் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு நிச்சயம் மக்கள் மத்தியில் மதிப்பிருக்கத்தான் செய்யும். அவரது கருத்துக்களை அலட்சியப்படுத்திவிட முடியாது'' என்று கூறினார்.

என்ன முடிவை எடுப்பார் கமல்?

கமல் அரசியல் பாதையில் பயணிப்பாரா என்று கேட்டதற்கு, ''தனக்கு மிகவும் பிடித்த சினிமாத்துறையை விட்டுவிட்டு கமல் தேர்தல் அரசியலுக்கு வருவாரா என்பது சந்தேகம்தான்'' என்று ஞானி கூறினார்.

முக்கிய பிரச்சனைகளில் ஓர் அழுத்தம் உண்டாக்கும் பணியை சமூக இயக்கமாக சுற்றுசூழல் இயக்கங்கள் மற்றும் மனித உரிமை இயக்கங்கள் செய்து வருகின்றன. அது போன்ற ஒரு பங்களிப்பை கமல் செய்யமுடியும் என்றுதான் எண்ணுவதாக ஞானி தெரிவித்தார்.

தற்போது மட்டும் கமல் அரசியல் விமர்சனங்கள் செய்து வருவது ஏன் என்று கேட்டதற்கு, ''ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அதிமுக அமைச்சர்களும் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில்தான் இருந்தனர். தற்போதுதான் பலரும் நிமிர்ந்து நடக்கின்றனர். அறிக்கை விடுகின்றனர். குற்றம்சாட்டுபவர்கள் மீது பல அவதூறு வழக்குகள் அப்போது போடப்பட்டது'' என்று ஞானி நினைவுகூர்ந்தார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption ஞானி

அதனால், கமல் அப்போது ஏன் கருத்து தெரிவிக்கவில்லை, தற்போது ஏன் தெரிவிக்கிறார் என்று வினா எழுப்புவது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்த ஞானி, ''பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக கமல் அரசியல் விமர்சனங்களை மேற்கொள்கிறார் என்பது நம்பமுடியவில்லை'' என்று குறிப்பிட்டார்.

அதே வேளையில், கமலின் நோக்கம் குறித்தும், அவரின் கருத்துக்களின் பின்னணியில் அரசியல் விருப்பம் உண்டா என்று பிபிசி தமிழிடம் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான பத்ரி சேஷாத்ரி எடுத்துரைத்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption டிவிட்டர் பதிவு

''முன்பு கமல் ஏன் பேசவில்லை? தற்போது ஏன் பேசுகிறார்? அதிமுகவை அவர் குறிவைத்து தாக்குகிறாரா? - இது போன்ற கேள்விகள் முக்கியம்தான். ஆனால், அவற்றை மீறி அவர் வைக்கும் விமர்சனங்களும் கவனிக்கப்பட வேண்டியவை'' என்று பத்ரி சேஷாத்ரி கூறினார்.

சினிமாவை தூக்கி ஏறிவாரா கமல்?

மேலும், பேசிய பத்ரி சேஷாத்ரி, ''இதுவரை திரையுலகில் இருந்து அரசியல் களத்துக்கு பலர் வந்துள்ளனர். ஆனால், சினிமாவில் இருந்துகொண்டே அரசியல் கருத்துக்களை கமல் தெரிவிப்பது ஒரு புதிய மற்றும் பாராட்டப்படவேண்டிய விஷயம்'' என்று தெரிவித்தார்.

கமலின் கருத்துக்கள் எத்திசையை நோக்கி செல்கின்றன என்பதற்கு பதிலளித்த பத்ரி, 'அண்மையில் கமல் அளித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இதுகுறித்து அவர் எந்த தெளிவான பதிலையும் அளிக்கவில்லை' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Badri Seshadri
Image caption பத்ரி சேஷாத்ரி

கமல் மீது பாஜகவின் எதிர்வினை ஏன்?

திரைத்துறையை தூக்கியெறிந்தால்தான் அவரால் முழு நேர அரசியலில் ஈடுபட முடியும். ஆனால், அவர் அவ்வாறு எளிதாக திரைத்துறையை தூக்கியெறியமாட்டார் என்றுதான் எண்ணுவதாக குறிப்பிட்ட பத்ரி, ''ஆனால், அழுத்தம் தரும் ஒரு குரலாக அவரால் சமூகத்தில் தொடர்ந்து ஒலிக்கமுடியும்'' என்று கூறினார்.

கமல் மீது அமைச்சர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பத்ரி குறிப்பிடுகையில், ''அவருக்கு அரசியல் தெரியாது என்று வைக்கப்படும் விமர்சனம் சரியல்ல. டிவிட்டரில் கமலை 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அவருக்கு அரசியல் தெரியவில்லை என்பது அவரையும், மற்றவர்களையும் அவமதிக்கும் செயல். அது சரியல்ல'' என்று கூறினார்.

''சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை நான் காயத்ரிக்கு சொல்லிக்கொடுக்கவில்லை''

'ஊழல்புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்': கமல் ஆவேசம்

தமிழகத்தை ஆள தமிழன் என்ற உணர்வே போதுமானது: கமல்ஹாசன்

''கமல் தெரிவிக்கும் கருத்துக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த வேண்டும் என்று கூறப்படுவதில் உண்மையும் இருக்கலாம். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னமும் எவ்வளவு நாள் நடக்கும்? அதனால் , அவர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருப்பதற்கு முக்கிய காரணம் தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல்தான்'' என்றும் பத்ரி குறிப்பிட்டார்.

'ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?

கமல், ரஜினி ஆகிய இரு நடிகர்களில் ரஜினியை பாஜக விரும்புவது இயல்பான ஒன்று. இதற்கு கமலின் பெரியார் சார்பு கருத்துக்களும், ரஜினியின் ஆன்மிகச்சார்பும் காரணமாகும் அதனால் கமல் குறித்து பாஜகவின் விமர்சனங்கள் எதிர்மறையாக உள்ளது எதிர்பார்த்த ஒன்று என்று பத்ரி சேஷாத்ரி குறிப்பிட்டார்.

''கமலுக்கு பதில் அளிக்கும் தமிழக அமைச்சர்கள் சில சமயங்களில் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை வெளியிடுகின்றனர். சில மூத்த அமைச்சர்களே கமலை 'ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?' என்று கேட்பது நிச்சயம் சிறுபிள்ளைத்தனமான கருத்து'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :