"அ.தி.மு.கவையும் ஆட்சியையும் வழிநடத்துவது எடப்பாடி பழனிச்சாமிதான்"

  • 1 ஆகஸ்ட் 2017
பழனிச்சாமி படத்தின் காப்புரிமை Getty Images

அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவது எடப்பாடி பழனிச்சாமிதான் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இதனை அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க. அம்மா பிரிவின் பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சியை நானே வழிநடத்துவேன் என டிடிவி தினகரன் இன்று காலையில் தெரிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலையில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் அணியுடனான இணைப்பு குறித்து விவாதிக்கப்படலாம் என யூகங்கள் எழுந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

மாலை ஐந்தரை மணியளவில் நடந்த கூட்டம் 7 மணியளவில் முடிவடைந்தது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், "எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக எப்படிக் கொண்டாடுவது என்பது குறித்தே ஆலோசனை நடைபெற்றது" என்று கூறினார்.

இரு அணிகளும் இணையப் போவதாக செய்திகள் வருவது குறித்து ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "முதல்வர், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் விரும்புவது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதைத்தான். எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற அடிப்படையில், பேச்சு வார்த்தைக்கான கதவு மூடப்படவில்லை. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. சுமுகமான தீர்வு விரைவில் எட்டப்படும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்" என்று கூறினார்.

மேலும், தாங்களும் பன்னீர்செல்வம் தரப்பும் பேச்சுவார்த்தைக்காக குழுக்களை அமைத்ததாகவும் அவர்கள் குழு கலைக்கப்பட்டாலும், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்படவில்லை. விரைவில் முடிவுகள் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

டிடிவி தினகரன் இன்று காலையில், கட்சியைத் தான் வழிநடத்தப்போவதாக கூறியிருப்பது குறித்துக் கேட்டபோது, "எடப்பாடி தலைமையில் கழகமும், ஆட்சியும் சென்றுகொண்டிருக்கிறது. மற்றவர்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

விரைவில் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணையும் என்றும், அமைச்சரவையில் இடம்பெறுமென்றும் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, ஆட்சியை சிறப்பாக நடத்த மத்திய அரசிடம் பல்வேறு உதவிகளைக் கேட்பதாகவும் அதை வேறு மாதிரி எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி கட்சி நிர்வாகிகளை தினகரன் சந்தித்துப் பேசவிருப்பதாக செய்திகள் அடிபட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை எடப்பாடி பழனிச்சாமி இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.

முன்னதாக, இன்று காலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்திலும் ஆலோசனை நடைபெற்றது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே. பாண்டியராஜன், "இணைப்பிற்கு நாங்கள் விதித்த நிபந்தனை அப்படியே நீடிக்கிறது" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :