இரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அமைந்திருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை புதன்கிழமையன்று இரவு திடீரென அகற்றப்பட்டது. இதற்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையும் ராதாகிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் இதனை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் புதன்கிழமையன்று நள்ளிரவில், இயந்திரங்களின் மூலம் சில மணி நேரத்தில் சிவாஜியின் சிலை அகற்றப்பட்டது.

அங்கிருந்து ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட சிலை, சென்னை சத்யா ஸ்டுடியோவிற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அந்த இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரவோடு இரவாக சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது தமிழகத்திற்கு தலை குனிவு என சிவாஜி ரசிகர்களின் அமைப்பான சிவாஜி சமூக நலப் பேரவை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் கே. சந்திரசேகரன், "தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் 13,000க்கும் மேற்பட்ட சிலைகள் இருக்கின்றன. அவையும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாகத்தான் இருக்கின்றன. அவற்றை அகற்ற அரசு முன்வருமா?" என கேள்வியெழுப்பினார்.

இது குறித்த பிற செய்திகள்:

நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் சிலை அகற்றப்படுவதாக தமிழக அரசு கூறுகிறது; நீதிமன்றத்தின் எல்லா உத்தரவுகளையும் இந்த அரசு அப்படியே பின்பற்றுகிறதா என்ற கேள்வியையும் சந்திரசேகரன் எழுப்பினார்.

எல்லாத் தலைவர்களுக்கும் மணி மண்டபம் தனியாகவும் சிலைகள் தனியாகவும் இருப்பதுபோல, சிவாஜி கணேசனுக்கும் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்பினோம். கடற்கரையில் காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் இடையில் இதனை அமைத்திருக்கலாம் என்கிறார் அவர்.

சிவாஜி கடந்த 2001ஆம் ஆண்டில் மரணமடைந்த நிலையில், அவருக்கு சென்னையில் மணி மண்டபமும் சிலையும் அமைக்க வேண்டுமென அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரப்பட்டது. இடையடுத்து சென்னை சத்யா ஸ்டுடியோவுக்கு அருகில் மணி மண்டபம் அமைப்பதற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் பணிகள் ஏதும் நடக்கவில்லை.

இந்நிலையில், 2006ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, ஆளுனர் உரையிலேயே சிவாஜிக்கு மணி மண்டபமும், சிலையும் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே, அதாவது ஜூலை 21ஆம் தேதி கடற்கரைச் சாலையில் இந்தச் சிலை திறந்துவைக்கப்பட்டது.

இது குறித்த பிற செய்திகள்:

அப்போதே, இந்தச் சிலை கடற்கரையில் உள்ள காந்தி சிலையை மறைப்பதாக புகார்கள் எழுந்தன. அதற்குப் பிறகு, இந்தச் சிலை போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், சிலையை அகற்ற வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த போக்குவரத்துக் காவல்துறை, அந்தச் சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறியது.

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் சிலையை அகற்றத் தயாராக இருப்பதாக தமிழக அரசும் தெரிவித்தது. இதனால், அந்தச் சிலையை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்தச் சிலையை அங்கிருந்து அகற்றினால், காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் இடையில் அமைக்க வேண்டுமென சிவாஜி சமூக நலப் பேரவையின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால், சிலையை அகற்றத் தடையில்லை என்று கடந்த ஜூலை 17ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில், இந்தச் சிலை புதன்கிழமையன்று இரவில் அகற்றப்பட்டிருக்கிறது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்