பொதுவெளியில் பாலூட்டும் தாய்மார்களும், அவர்கள் சந்திக்கும் பாலியல் பார்வைகளும்

  • 3 ஆகஸ்ட் 2017

அண்மையில், உள்ளாடைகளை அணிந்துகொண்டு தன் குழந்தைக்குப் பாலூட்டும் கிர்கிஸ்தான் நாட்டு அதிபரின் இளைய மகளின் புகைப்படம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பாலியல் ஆகியவற்றைப் பற்றிய விவாதத்தை சமூகவலைத்தளத்தில் ஏற்படுத்தியது,

படத்தின் காப்புரிமை Aliya Shagieva
Image caption பாலூட்டுதலைக் கருவாகக் கொண்டுள்ள அலியா ஷிகீயேவாவின் புகைப்படம்.

"என் குழந்தைக்கு எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் பாலூட்டுவேன்," என்னும் வாசகத்தை அலியா ஷிகீயேவா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். பின்னர் எதிர்ப்புகள் கிளம்பவே அவர் அதை நீக்கிவிட்டார்.

சர்வதேச அளவில் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஷிகீயேவா சொல்வதைப் போல, தேவைப்படும்போது பொது வெளியில் குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கின்றன என பிபிசி தமிழ் கேட்டபோது, தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் சமூக ஆர்வலர்களும், பொது இடங்களில் பாதுகாப்பான வெளியைக் கட்டமைக்கவேண்டிய தேவையை முன்வைக்கிறார்கள்.

ஒரு தாய் எதிர்கொண்ட அனுபவம்

கோவையைச் சேர்ந்த இளம்தாய் நித்யா தனது மகனுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுத்தவர்.

''எனது படிப்பு, வேலை என எதிலும் என்னால் கவனம் செலுத்தமுடியாது. வெளியிடங்களுக்குச் சென்றால் நிம்மதியாக குழந்தைக்கு பால் கொடுக்கமுடியாது என்ற காரணத்திற்காக பல நாட்கள் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறேன்,'' என்கிறார் நித்யா.

பேருந்து அல்லது ரயில் நிலையங்களில் காத்திருக்கும் போதோ அல்லது பயணம் செய்யும் போதோ எல்லோரும் தன்னை உற்றுப்பார்ப்பதுபோல் இருந்தது என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பணியிடத்தில் தன குழந்தைக்கு பாலூட்டும் ஒரு தாய்

''குழந்தையோடு சேர்த்து என்னை மூடிக்கொள்ளும்வகையில் பெரிய சால்வையைப் போர்த்திக்கொண்டாலும், அசௌகரியமாக இருக்கும். பயணத்தின்போது, குழந்தை அழுதால், அங்குள்ளவர்கள் பால் கொடு என்று அறிவுரை சொல்வார்கள். பயத்தில் பால் புகட்டும்போது வருத்தமாக இருக்கும்,'' என்றார் நித்யா

நித்யா போன்ற தாய்மார்களுக்கு பயன்தரும் வகையில் தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில், கடந்த 2015ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 300க்கும் மேற்பட்ட தாய்ப்பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டன.

பாலூட்டும் அறைகளின் செயல்பாடு எப்படி?

கடந்த ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் செயல்படும் அறைகள் பற்றிய ஆய்வு நடத்திய ஆய்வாளர் சண்முகவேலாயுதம் பெரும்பாலான அறைகள் திறக்கப்பட்டிருந்தாலும், அந்த அறைகள் செயல்படுகின்றன என்பதோ, பாலூட்டும் அறைகள் உள்ளன என்பதோ பல தாய்மார்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என்கிறார்.

''விளம்பரப் பலகைகள் அல்லது அறிவிப்புகள் என எதுவும் இல்லாததால், பாலூட்டும் அறைகள் இருப்பதே பலருக்கு தெரியவதில்லை. சில இடங்களில் ஆண் காப்பாளர்கள்தான் உள்ளார்கள், பெண் காப்பாளர்கள் அமர்த்தப்படவேண்டும்,'' என்றார் ஆய்வாளர்.

படத்தின் காப்புரிமை TN Forces
Image caption பெண்ணாகரத்தில் பூட்டிய நிலையில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை

.

சென்னையில் தி.நகர், திருவொற்றியூர்,அயனாவரம் போன்ற இடங்களில் குறைந்த அளவில் பெண்கள் பயனடைவதற்குக் காரணம் அறியாமை என்கிறார். ''தஞ்சாவூர் மற்றும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறைகளை அங்குள்ளவர்கள் ஓய்வு எடுக்கப் பயன்படுத்துகிறார்கள்,'' என்றார் சண்முகவேலாயுதம்.

பாலியல் பார்வை

தாய்ப்பால் வாரத்தின் தொடக்கத்தில் பிபிசிதமிழ் முகநூல் நேரலை சென்னையில் நடத்தியது. அதில் பேசிய இளம் பட்டதாரி ஜான்சி ராணி, பொதுவெளியில் தாய்ப்பால் கொடுப்பது இன்றளவும் பெண்களுக்கு பெரிய சிக்கலாக நீடிப்பது சமூக அவலம் என்கிறார்.

''பாலியல் கண்ணோட்டத்தில் ஆண்கள் பார்ப்பார்கள் என்ற எண்ணமே பெண்களை அச்சம் கொள்ளவைக்கிறது. அந்த பயத்தில் தாய் ஒருவர் பால் கொடுக்கும்போது, பதட்டத்துடன் இருப்பார், அந்தக் குழந்தைக்கும் அது ஏற்றதாக இருக்காது,'' என்றார் ஜான்சி ராணி.

குழந்தையின் வளர்ச்சிக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

தேசிய அளவிலான குடும்ப நல சுகாதார ஆய்வின்படி 2015-16, தமிழகத்தில், பிறந்த குழந்தைகளில் வெறும் 48.3 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. மற்ற குழந்தைகள் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே செயற்கை பால்பவுடர் மற்றும் திட உணவுகள் அளிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

பெண்கள் வேலைக்குச் சொல்லுமிடத்தில் பராமரிப்பு மையங்கள் இல்லாமை, பொது இடங்களில் பால் கொடுப்பதற்கு உள்ள சிக்கல்கள் போன்றவை தாய்ப்பால் கொடுப்பதை தடுக்கும் காரணிகளாக உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

படத்தின் காப்புரிமை TN Forces
Image caption சிவகாசி பேருந்து நிலையத்தில் பூட்டப்பட்டு இருக்கும் பாலூட்டும் அறை

பாலூட்டும் தாயை உற்றுப்பார்க்காதே

தாய்ப்பாலைச் சேகரித்து, தேவைப்படும் குழந்தைகளுக்கு அளிப்பதற்காகத் தொடங்கப்பட்ட தமிழக அரசின் தாய்ப்பால் வங்கி திட்டத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற மருத்துவர் குமுதா, தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று பெண்களை வலியுறுத்தும்போது அதற்கான வசதியைச் செய்துதரவேண்டியது சமூகக்கடமை என்கிறார்.

'ஒரு தாய் தனது குழந்தைக்கு உணவு கொடுப்பதை பாலியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது மோசமான செயல். தனது குழந்தைக்கு ஒரு தாய் பாலூட்டுவதை இயல்பாகச் செய்யும் அளவுக்கு சமூகம் அதை இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும். பொது வெளியில் ஒரு குவளையில் சாதம் ஊட்டுவதை யாரும் உற்றுப்பார்ப்பதில்லை. அதுபோலவே, குழந்தைக்கு தாய்பாலூட்டும்போதும் அதை பிறர் உற்றுப்பார்த்து, தாய்மார்களை சிரமப்படுத்தக்கூடாது,'' என்றார் குமுதா.

பாலூட்டும் அறைகளின் செயல்பாட்டில் உள்ள தொய்வு குறித்து கருத்துகேட்க பலமுறை முயற்சித்தும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :