இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்

 • 4 ஆகஸ்ட் 2017
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பத்திரிக்கை செய்திகள் படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் மூன்றாம் பாகம் இது.

சரித்திரம், உலகம் மற்றும் நாட்டுநடப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளை தருபவை பத்திரிகைகள். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை, அதன் விளைவுகளை, தாக்கத்தை தெரிந்துக்கொள்ள அன்றைய பத்திரிக்கைகள் இன்றைக்கும் சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.

அக்காலக்கட்டத்தில் டெல்லியில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ்களான 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' மற்றும் 'டான்' ஆகியவற்றில் வெளியான செய்திகள் மூலமாக பிரிவினையை பற்றிய பிபிசியின் மூன்றாம் பாகத்தில் ஆராய்வோம்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், பிர்லா குழுமத்தின் பத்திரிகை. மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியிடன் சுமூகமான உறவு கொண்டிருந்தது. டான் பத்திரிகையின் நிறுவனர் காயத்-இ-ஆஜம் மொஹம்மத் அலி ஜின்னா, அதன் ஆசிரியர் அல்தாஃப் ஹுசைன் ஆவர்.

படத்தின் காப்புரிமை British Library
Image caption ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி
 • சுதந்திரத்தின்போது, 22 சுதேசி அரசுகள் இந்தியாவுடன் இணைவதற்கு இணங்கின. இது, பிரிட்டன் அரசின் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் அளித்த ஒரு மதிய உணவில் முடிவானது.
 • அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, சுதேசி அரசுகள் இந்திய ஒன்றியத்துடன் ஒன்றுவதே நல்லது என்று ஆலோசனை நல்கியிருந்தார் மவுண்ட்பேட்டன். அந்த அறிவுறுத்தலில் எச்சரிக்கைத் தொனியும் கலந்திருந்தது. பரோடா, பிகானீர், பட்டியாலா, குவாலியர், ஜோத்புர், நவான்கர் போன்ற சுதேசி அரசுகள் இவற்றில் முக்கியமானவை.
படத்தின் காப்புரிமை British Library
 • இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கு சுதந்திரம் கிடைக்கப்போகிறது, ஆனால் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு என்றைக்குமே விடுதலை கிடைக்காது என்று எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்ட பாத்ஷாஹ் கான், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களின் முன்னிலையில் வெளிப்படையாக முழங்கினார். எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களின் மேல் பாகிஸ்தான் திணிக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்தார்கள்.
 • முதன்முதலாக காஷ்மீர் பயணமாக ராவல்பிண்டியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற மகாத்மா காந்தியை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். காந்திக்கு ஜெ, அப்துல்லாவுக்கு ஜெ என்ற முழக்கங்களையும் மக்கள் எழுப்பினார்கள். காந்தியை சந்திக்க, காஷ்மீர் பிரதமமந்திரி ராம்சந்த்ர காக் தன்னுடைய இரண்டு பிரதிநிதிகளை அனுப்பினார். காந்தியின் காரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் கொடி பொருத்தப்பட்டிருந்தது.
 • ஜூலை 31 அன்று லாகூரில் ஃப்ரண்டியர் மெயிலில் குண்டு வைத்து தகர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்த்து. அந்த ரயிலில் மகாத்மா காந்தி பயணம் செய்துக் கொண்டிருந்தார்.
படத்தின் காப்புரிமை British Library
 • இந்திய ராணுவத்தின் முதல் தலைமையகமாக செங்கோட்டை இருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
 • ரஷ்யாவிற்கான இந்திய தூதராக விஜயலஷ்மி பண்டிட் நியமிக்கப்பட்டார். அவர் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மாஸ்கோ செய்தது. அது ரஷ்ய தரப்பில் இருந்து இந்தியாவிற்கான நேர்மறையான அணுகுமுறையாக பார்க்கப்பட்டது.
படத்தின் காப்புரிமை British Library
Image caption டான், 2 ஆகஸ்டு 1947 அன்று வெளியிட்ட செய்தி
 • பதான்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை ஆப்கானிஸ்தான் முன்வைத்தது. 'நமது ஆப்கான் சகோதரர்களின் நலனுக்காக பண்டிட் நேரு, மகாத்மா காந்தி ஜின்னா ஆகியோரை சமாதானப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்' என்று ஆப்கானிஸ்தான் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
 • இந்திய அரசு, ஒரு அரசிதழ் அறிவிப்பின் மூலம் ஆகஸ்ட் 15 ,16 என இரு நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்த்து.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த கதை(காணொளி)
 • அனைத்திந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் லியாகத் அலி கான், கடந்த துன்பமான நினைவுகளை புதைத்துவிடவேண்டும் என்று முறையிட்டார். 'இரு நாட்டு அரசுகளும், அரசியல் தலைவர்களும் நல்ல அண்டைநாடுகளாக, நம்பிக்கை கொண்ட உறவுகளை மேம்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 • பிரிட்டன் ராணுவத்தின் முதல் குழு ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று இந்தியாவில் இருந்து வெளியேறும் என்று அறிவிக்கப்பட்டது.
படத்தின் காப்புரிமை British Library
 • பஞ்சாப் எல்லை ஆணையத்தின் குழு, லாகூரில் இருந்து சிம்லா சென்றடைந்தது. சிம்லாவில் ஆகஸ்ட் மூன்றாம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சர் சிரில் ரெட்கிளிஃபும் இடம் பெற்றிருந்தார்.
 • ஹோஷியார்பூர் இனவாத வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். மூன்று நாட்களாக தொடர்ந்த பதற்றம், நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. அம்ரித்சர், கல்கத்தா, லாகூரில் இருந்தும் இதே போன்ற செய்திகள் வெளியாகின.
 • நேருவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட கிருஷ்ண மேனன், பிரிட்டனின் உயர்நிலை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :