`தேநீர் பிரியர்களுக்கு டார்ஜிலிங் தேயிலை கிடைக்காமல் போகலாம்'

  • 6 ஆகஸ்ட் 2017
டார்ஜிலிங் தேயிலை படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உலகின் மிக விலை உயர்ந்த தேயிலை வகைகளில் டார்ஜிலிங் தேயிலையும் ஒன்று.

நீங்கள் ஒரு தேநீர் விரும்பியாக இருந்தால் உங்களுக்கு ஒரு வருத்தமான செய்தி காத்திருக்கிறது. ஆம், தினந்தோறும் காலையில் ஆவி பறக்க நீங்கள் குடிக்கும் டார்ஜிலிங் தேநீரை மிக விரைவில் இழக்க நேரிடலாம்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் "தேநீர் ஷாம்பைன்" என்று அனைவராலும் அழைக்கப்படும் டார்ஜிலிங்கில் உள்ள 87 தோட்டங்களில் டார்ஜிலிங் தேயிலை வளர்க்கப்படுகிறது. இவற்றில் சில தேயிலை தோட்டங்கள் 150 ஆண்டுகள் பழமையானவை.

இவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளில் பாதிக்கும் மேலாக அதாவது 8 மில்லியன் கிலோகிராம் அளவிற்கு ஐக்கிய ராஜ்யம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 80 மில்லியன் டாலர் மதிப்பில் இது விற்பனையாகிறது.

உலகின் மிக விலை உயர்ந்த தேயிலை வகைகளில் டார்ஜிலிங் தேயிலையும் ஒன்று. ஒரு கிலோ 850 டாலர்கள் என்ற மதிப்பில் கூட விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் முதன் முதலில் புவிசார் குறியீடு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜூன் மாதத்தில் இருந்து டார்ஜிலிங் முழுவதும் போராட்டங்களும், நீடித்த வேலை நிறுத்தமும் நடைபெற்று வருகிறது.

ஆனால், தற்சமயம் டார்ஜிலிங் தேயிலை உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. நேபாள மொழி பேசும் கூர்கா இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை தனியாக பிரித்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று உள்ளூர் அரசியல் கட்சி ஒன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளதே இதற்கு காரணம். இதனால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து டார்ஜிலிங் முழுவதும் போராட்டங்களும், தொடர் வேலைநிறுத்தமும் நடைபெற்று வருகிறது.

நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் ஒரு லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட பயிரில் இருந்து 8.32 மில்லியன் கிலோ தேயிலை மட்டுமே ஜூன் மாதம் வரை அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்த சிக்கல் நீடித்தால், 40 மில்லியன் டாலர்கள் வரை இழப்பு நேரிடலாம் என்று தோட்ட உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

"இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை இதுவரை நாங்கள் சந்தித்ததில்லை. தேயிலைக்காக முன்னரே பதிவு செய்தவர்கள் ரத்து செய்து வருகின்றனர். புதிதாக அறுவடை செய்யப்பட்ட தேயிலைகளும் தற்போது கையிருப்பில் இல்லை. நிலைமை சீராகும் வரை டார்ஜிலிங் தேநீரை விரும்பும் நபர்கள் மிக விரைவில் வேறு தேயிலையை நாட வேண்டி வரும்" என டார்ஜிலிங் தேயிலை உற்பத்தி சங்கத்தின் முக்கிய ஆலோசகர் சந்தீப் முகர்ஜி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரிவினைவாத போராட்டங்கள் 1980-களில் இருந்தே இப்பகுதி மக்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தோட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த முடக்கநிலை மிக மோசமான நேரத்தில் வரவில்லை. தேயிலையின் அறுவடைக்காலம் 7 மாதங்களாக அதாவது மார்ச் முதல் அக்டோபர் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரிவினைவாத போராட்டங்கள் 1980-களில் இருந்தே இப்பகுதி மக்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் அறுவடைக்காலங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் நடைபெற்றது.

தேயிலைகளை வாங்குவோர் நெருக்கடி நிலையை சந்திக்க தொடங்கியுள்ளனர். இந்தியாவில் தேயிலையின் தேவை மிக அதிமகானது.

தேயிலை வரத்தில் உண்டாகியுள்ள சிக்கல் சீராகவில்லை என்றால் நவம்பர் மாதத்தில் தேயிலை தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும் என்று ஜப்பானில் உள்ள சில பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளன.

போராட்டம் முடிவுபெற்று நாளையே பணியாளர்கள் வேலைக்கு திரும்பினாலும், அறுவடை செய்வதற்கு ஒரு மாதத்திற்கும் மேலான காலம் பிடிக்கும்.

"தற்சமயம் குறைந்த அளவிலான வரையறுக்கப்பட்ட தேயிலையாக டார்ஜிலிங் தேயிலை இருக்கிறது" என 13 தோட்டங்களுக்கு உரிமையாளரான சஞ்சய் லோகியா தெரிவித்துள்ளார். மேலும், "தேநீர் விரும்பிகளுக்கு மிக விரைவில் தரமான தேயிலைகளை வழங்குவோம் என நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தருணத்தில், தேநீர் அருந்துபவர்கள் தங்களுக்கு விருப்பமான தேநீரை அருந்தாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்