கல்லூரி நட்பால் கனிந்தது கல்லீரல்: சென்னை இளைஞரின் தானம்

  • 6 ஆகஸ்ட் 2017
இந்தியாவை பொருத்தவரை ஆண்டுதோறும் கல்லீரல் தானத்திற்காக 2 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தியாவை பொருத்தவரை ஆண்டுதோறும் கல்லீரல் தானத்திற்காக 2 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்

சென்னையை சேர்ந்த பிரசன்னா கோபிநாத் குடும்பத்தோடு பிரிட்டனுக்கு மேற்படிப்புக்காக சென்றபோது, அங்கு டெல்லியை சேர்ந்த ஒரு குடும்பத்துடன் ஏற்பட்ட நட்பால், தற்போது டெல்லியில் வாழும் அந்த குடும்பத்தின் தலைவிக்கு பிரசன்னா தன்னுடைய கல்லீரலை தானம் செய்துள்ளார்.

தமிழகத்தில் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், பல்வேறு காரணங்களைக் கூறி அதனை தட்டிக் கழிக்கும் மனப்போக்கு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் உடலுறுப்பு தானத்தில், இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியராக பணியாற்றி வந்த டெல்லியைச் சேர்ந்த பூஜா பட்நாகர் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் அவரின் உடல் நிலை மேலும் மோசமானதால், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பூஜாவின் கல்லீரல் செயலிழக்கும் சூழலில் இருப்பதாகவும், எனவே அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பூஜா தயாராக இருந்தாலும், அவருக்கு தேவையான கல்லீரலை தானமாக அளிக்கக்கூடிய நபரை தேடிக் கண்டுபிடிக்க அனுராக் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.

படத்தின் காப்புரிமை Prasanna Gopinath
Image caption கடந்த மே மாதம் பூஜாவை பரிசோதித்த மருத்துவர்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர்பிழைக்க முடியும் என தெரிவித்தனர்.

இரண்டு மாதமாக தேடி அலைந்தும் ,கல்லீரல் கொடையாளி கிடைக்காததால் வேறு வழியின்றி, தனது நிலை குறித்து பேஸ்புக் பக்கத்தில்  அனுராக் பதிவிட்டார்.

அனுராக் பிரிட்டனில் படித்த போது நண்பராக அறிமுகமான சென்னையைச் சேர்ந்த பிரசன்னா கோபிநாத் மற்றும் அவரது மனைவி நிர்மிதி ஆகியோர் இந்த பேஸ்புக் பதிவை பார்த்து, தங்களுடைய கல்லீரலை தானம் செய்ய முன் வந்தனர்.

இருவரில் பிரசன்னாவின் கல்லீரல் பூஜாவுக்கு பொருந்திப்போக, கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற 13 மணி அறுவை சிகிச்சை மூலம், பிரசன்னாவின் பகுதி அளவு கல்லீரல் தானமாக பெறப்பட்டு, பூஜாவுக்கு பொருத்தப்பட்டது.

`'கல்லீரலை தானமாக அளிக்க அனுராக் குடும்பத்தினருடன் உள்ள நட்பு மட்டுமே காரணம். நம் மீது எதிர்பார்ப்பில்லாத அன்பு செலுத்திய ஒருவருக்கு ஆபத்து என்றால்  அமைதியா இருக்க முடியுமா'` என்கிறார் பிரசன்னா கோபிநாத்.

அனுராக்கிடம் பேசியபோது, தன் மனைவிக்கு பிரசன்னா மூலம் மறுவாழ்வு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியில் இருந்தாலும், பிரசன்னா கல்லீரல் தானம் அளிக்க முன்வந்திருக்காவிட்டால், தற்போது வரை கல்லீரல் தானம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான் என தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Prasanna Gopinath
Image caption தானமாக பெறப்பட்ட கல்லீரல், ஒத்துழைக்கத் துவங்கியதும் பூஜா தனது பழைய வாழ்க்கைக்கு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசன்னா தனது நட்புக்கு மரியாதையாக கல்லீரலை தானமாக அளித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பெருமளவு பாராட்டப்படுவதோடு, உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வையும் பேசு பொருளாக்கியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை ஆண்டுதோறும் கல்லீரல் தானத்திற்காக 2 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள் எனவும் ஆனால் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே கல்லீரல் தானம் கிடைப்பதாகவும் 'ஆர்கன் இந்தியா' அமைப்பு கூறுகிறது.

சமீபகாலமாக உடலுறுப்புகள்  திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும்  தகவலை மறுத்துள்ள மருத்துவர் இளங்குமரன், உடல் உறுப்புகளுக்காக அரசிடம் முன் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறுகிறார்.

பிரசன்னாவைப் போல கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல் போன்ற உறுப்புகளை உயிருடன் இருக்கும்போதே தானமாக அளிக்க முடியும்.

இதயம், நுரையீரல், கண்கள் போன்றவற்றை இறப்பிற்கு பின்னர் தானமாக அளிக்க முடியும்.

கல்லீரல் மட்டுமல்லாது இதயம், சிறுநீரகம் போன்ற மற்ற உறுப்புகள் தானமாக கிடைப்பதிலும் இதே சூழ்நிலை நிலவுகிறது. உடலுறுப்பு தானம் சரியான நேரத்தில் கிடைக்காததால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவரின் உடல் நிலை மேலும் மோசமாகிறது அல்லது அவர்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.

`தேவையான அளவு உடலுறுப்பு தானம் கிடைப்பதில்லை`

ஒருவரின் மூளை செயலிழந்து, அவரது இதயம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது உடல் உறுப்புகளை தானமாக பெற்றால் மட்டுமே , அந்த உறுப்புகளின் செயல்திறன் நன்றாக இருக்கும் என்கிறார் சென்னை அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணராண மருத்துவர் இளங்குமரன்.

`பொதுவாக இரண்டு முறையில் உடலுறுப்பு தானம் பெறப்படுகிறது. முதல் வகையில், மருத்துவமனையில் மூளை செயல் இழந்து அவரின் இதயம் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, குடும்பத்தினர்களின் ஒப்புதலோடு உடல் உறுப்புகள் தானம் பெறுவது.

இரண்டாவது வகையில், உயிரிழந்த ஒருவரின் உடல் உறுப்புகளை, அவை பயனளிக்கும் நேரத்திற்குள் தானமாக பெறுவது. இந்த முறையில் ஒருவர் இறந்து சில மணி நேரம் ஆகிவிட்டாலே, அவரது உடல் உறுப்புகள் வீணாகிவிடும்.` என்கிறார் மருத்துவர் இளங்குமரன்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவை பொறுத்தவரை உடலுறுப்பு தானம் செய்ய முன் வருபவர்களை விட, உடலுறுப்பு தானம் குறித்த தவறான புரிதல்கள் கொண்டிருப்பர்கள்தான் அதிகம்.

  • இந்த பிறவியில் நான் குறிப்பிட்ட உடலுறுப்பு இல்லாமல் இறந்தால், அடுத்த பிறவியில்  அதே உறுப்புகள் இல்லாமல் பிறப்போம் என்கிற நம்பிக்கை.
  • மத நம்பிக்கைகள், உடல் உறுப்பு தானத்தை எதிர்ப்பதாக கூறி தவிர்ப்பது.
  • உடலுறுப்பு தானம் செய்தால், இறந்தவரின் உடல் அகோரமாக காட்சியளிக்கும் என நம்புவது.
  • உடலுறுப்பை திருடி பணத்திற்காக வேறு யாருக்காவது விற்றுவிடுவார்கள் போன்ற கருத்துகள் மக்களிடையே அதிகம் காணப்படுகிறது.

ஆனால் இவை அனைத்தும் தவறான புரிதல்கள் எனக்கூறும் மருத்துவர் இளங்குமரன், இந்த காரணங்கள் அனைத்தும் உடலுறுப்பு தானம் அளிப்பதை தவிர்ப்பதற்காக சொல்லப்படுபவை என தெரிவிக்கிறார்.

பாகிஸ்தான்: ஆண்டுக்கு 1200 சிறுநீரகங்கள் விற்பனை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பாகிஸ்தான்: ஆண்டுக்கு 1200 சட்டவிரோத சிறுநீரகங்கள் விற்பனை

உடல் உறுப்பு தானம் குறித்த தவறான புரிதல்கள், நம்பிக்கைகளிலிருந்து மக்கள் தெளிவு பெற்றால் மட்டுமே இந்தியாவில் உடலுறுப்புகள் தானம் செய்வது அதிகரிக்கும். இதன் மூலம் மண்ணுக்கு வீணாகச் செல்லும் ஒரு உறுப்பை,ஒருவருக்கு மறுவாழ்வு அளிக்க பயன்படுத்தலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :