பாகிஸ்தானுக்குக் கிடைத்த கிராமம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டதால் எழுந்த கொந்தளிப்பு

  • 6 ஆகஸ்ட் 2017
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சுதந்திர இந்தியாவின் எல்லைக் கோடுகளை வகுத்த சிரில் ராட்கிளிஃப்

பிரிவினை எப்படி நடைபெறுவது? அதாவது எந்தெந்த பகுதிகள் இந்தியாவுடன் இருக்கும்? எவை புதிய நாட்டில் இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மிகப்பெரிய பொறுப்பு. வீடோ, நாடோ பாகப்பிரிவினை, சொத்துப் பிரிவினை என்பது சற்று சிக்கலானது தானே?

ஒன்றாய் இருந்ததை இரண்டாய் பிரித்து எல்லைக் கோடுகளை வரையறுக்கும் பொறுப்பு சிரில் ராட்க்ளிஃப் என்ற பிரிட்டிஷ் வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எல்லைகளை முடிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சிரில் ராட்க்ளிஃப், வரைபடத்தில் பஞ்சாபின் எல்லைகளை நிர்ணயித்துவிட்டார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு வைஸ்ராய் மவுண்ட்பேட்டன், அவரை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.

Image caption எல்லை ஆணைக்குழு உறுப்பினர்கள்

உணவு மேசையில் இருவருக்கும் இடையில் பஞ்சாபின் எல்லை வரையறை குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. அது, பஞ்சாபின் பல இடங்களின் விதியை மாற்றியது.

உணவு மேசையில் மாறிய இடங்களில் ஃபிரோஜ்புரும் ஒன்று.

சிரில் ராட்க்ளிஃபின் அந்தரங்கச் செயலாளர் கிறிஸ்டோஃபர் போமெளண்ட் 1992இல் 'த டெலிகிராஃப்' பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் காணக்கிடைத்தது. அதில், ராட்க்ளிஃப் மற்றும் மவுண்ட்பேட்டனுக்கு இடையிலான இந்த விவாதம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டோஃபர் போமெளண்ட்டின் கருத்துப்படி, ராட்க்ளிஃப் உருவாக்கிய வரைபடத்தில் இருந்த ஃபிரோஜ்புர் பாகிஸ்தானில் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில், மவுண்ட்பேட்டனின் அறிவுறுத்தலின்படி, ஃபிரோஜ்புர் இந்தியாவிற்குள் வருமாறு எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன..

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த கதை(காணொளி)

பாகிஸ்தான்: பெண்களுக்காக ஆங்கில பத்திரிக்கை தொடங்கிய தாலிபான்

தனது தந்தை மெளண்ட் பேட்டனை வெறுத்தார் என்று கிறிஸ்டோஃபர் போமெளண்ட்டின் மகன் ராபர்ட் போமெளண்ட் பிபிசியிடம் தெரிவித்தார். பஞ்சாபில் நடைபெற்ற படுகொலைகளுக்கு மவுண்ட்பேட்டனே பொறுப்பேற்கவேண்டும் என்று கிறிஸ்டோஃபர் கருதியதாக ராபர்ட் கூறுகிறார்.

Image caption ராபர்ட் போமெளண்ட்

பிபிசியிடம் பேசிய ராபர்ட் போமெளண்ட், "பிரிவினையின்போது, எல்லைகளை மாற்றச் சொன்னதில் என் தந்தைக்கு வருத்தம் ஏற்பட்டது. ஏனெனில், எல்லைகள் பற்றிய முடிவு முன்னரே எடுக்கப்பட்டுவிட்டது. அது பற்றிய ஆவணங்கள் அனைத்தும் பஞ்சாபின் இடைக்கால ஆளுநர் சர் ஜேன்கின்ஸிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லை எங்கே உருவாகப்போகிறது என்பதும் அனைவருக்கும் தெரிந்திருந்தது".

"மவுண்ட்பேட்டன், நேருவின் விருப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் அடிபணிந்தார். இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிவினையின் தாக்கம் மோசமானதாக இருக்கும் என்று என் தந்தை உணர்ந்திருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் எல்லைகளை மாற்றியதும் நிலைமை படுமோசமானது" என்று தெரிவித்தார்.

இந்த மாறுதல், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பணயம் வைத்தது. இந்த சோகத்தை கண்ணால் கண்ட இருவர் தங்கள் அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்துக் கொண்டனர்.

Image caption மீனா பீபீ

நூறு வயதாகும் மீனா பீபீ, பிரிவினைக்கு முன் ஃபிரோஜ்புரில் வசித்தவர். தனது ஊரை விட்டு, எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்பது பிரிவினைக்கு முதல் நாள்தான் அவருக்கு தெரியவந்தது.

தற்போது பாகிஸ்தானின் புரேவாலா கிராமத்தில் வசிக்கும் மீனா பீபீ, பிரிவினையின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் தனது குடும்பத்தின் 19 பேரை இழந்திருக்கிறார். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கண்முன் நடந்த அந்த கொடூரச் சம்பவங்களை இன்றும் அவரால் மறக்கமுடியவில்லை.

கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எல்லை தாண்டி, புதிதாக உருவான பாகிஸ்தானில் காலடி எடுத்துவைத்தார் மீனா பீபீ.

'போட்டது போட்டபடியே விட்டுவிட்டு, உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்தோம். என் பெற்றோர்களை குசூரில் சந்தித்தோம். என் தந்தையிடம் அணிவதற்கு மேலாடைகூட இல்லை. என்னிடம் இருந்த குர்த்தாவில் ஒன்றை அவருக்கு கொடுத்தேன். அதிர்ஷ்டவசமாக என்னிடம் ஒரு பெட்டி நிறைய துணி இருந்தது. தேவைப்பட்டவர்களுக்கு நான் கொடுத்தேன்'.

புரேவாலாவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்திய கிராமம் ஃபிரோஜ்புரில் 84 ஆண்டுகளாக வசிக்கிறார் ராம்பால் ஷோரி.

13-14 வயதில் இருந்து இங்கு வசிக்கும் ராம்பால், ஹிந்துவாக இருப்பதால் அவர் தனது கிராமத்தையோ, தாயகத்தையோ விட்டு வெளியேறவில்லை. ஆனால் அறிந்தவர்களையும், தெரிந்தவர்களையும் இழந்த வலி இன்றும் அவரை வாட்டுகிறது.

Image caption 84 ஆண்டுகளாக ஃபிரோஜ்புரில் வசிக்கும் ராம்பால் ஷோரி

தனது நண்பர்களில் பலரின் நிலை என்ன என்பது தனக்கு இதுவரை தெரியவில்லை என்று அவர் வருத்தப்படுகிறார்.

ஷோரியின் இஸ்லாமிய நண்பர் அப்துல் மஜீத். ''தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு, இந்துக்களைப் போன்று உடையணிந்து இங்கிருந்து கிளம்பினார். தலையை மொட்டையடித்துக் கொண்டார் என்றும் சிலர் கூறினார்கள்.''

Image caption ஃபிரோஜ்புர் ரயில் நிலையம்

மீனா பீபீயைப் போன்று ராம்பால் ஷோரியும் பிரிவினையின் கோரத்தை, அது கொடுத்த துன்பத்தை மறக்கமுடியாமல் தவிக்கிறார். 70 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தைப் பருவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

"லாகூரில் இருந்து வந்த ரயிலில் காயமடைந்தவர்கள் நிரம்பியிருப்பார்கள். சிலருடைய கைகள் வெட்டப்பட்டிருக்கும், சிலரின் தலையில் காயம்பட்டிருக்கும், மோசமான நிலையில் மக்கள் வந்து குவிந்ததை பார்த்திருக்கிறேன். மனிதநேயம் என்ற வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றும்."

சிரில் ரட்க்ளிஃபும், மவுண்ட்பேட்டனும் எல்லையில் ஏற்படுத்திய ஒரு சிறிய மாற்றம், மீனா பீபீ, ராம்பால் ஷோரி என இருவரின் வாழ்க்கையை மட்டும் மாற்றவில்லை, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை, தலைவிதியை மாற்றியது. அதன் வலி எழுபது ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் பகிரப்படுகிறது, உணரப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்