இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெங்கைய நாயுடு வெற்றி

  • 5 ஆகஸ்ட் 2017
இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராகிறார் வெங்கையா நாயுடு படத்தின் காப்புரிமை All India Radio News/Twitter
Image caption இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராகிறார் வெங்கைய நாயுடு

இன்று நடைபெற்ற இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகக் களமிறங்கிய வெங்கைய நாயுடு 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், முன்னாள் ஆளுநருமாகிய கோபால கிருஷ்ண காந்தியை விட 272 வாக்குகள் அதிகம் பெற்று முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக வெங்கையா நாயுடு விரைவில் பதவியேற்றுக் கொள்வார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கைய நாயுடுவுக்கு, பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

`நாட்டை கட்டமைக்கும் குறிக்கோளுக்காக, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய குடியரசு துணைத் தலைவராக வெங்கைய நாயுடு செயல்படுவார் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.` என தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று காலை தொடங்கிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் மொத்தம் 771 வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு சதவீதம் 98.21 சதவீதமாக இருந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெங்கையா நாயுடு 516 வாக்குகளும், கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றுள்ளதாக தேர்தல் அலுவலர் ஷெம்ஷெர் கே ஷெரிப் அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்