ஈவ்டீஸிங் செய்த பாஜக தலைவரின் மகன் மீது நடவடிக்கை: ஹரியாணா முதல்வர் உறுதி

ஒரு இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து குற்றத்திற்காக, ஹரியாணா மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரின் மகன் உள்பட இருவரைசண்டிகர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரியாணா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் உறுதியளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook/Subash Barala
Image caption ஹரியானா பாஜக தலைவர் சுபாஷ் பராலா.

இது குறித்து பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம் பேசிய சண்டிகர் துணை காவல் கண்காணிப்பாளர் சதிஷ் குமார், "அவசர உதவி எண்ணான 100-க்கு அழைத்த ஒரு இளம் பெண், தன்னை சிலர் பின்தொடர்வதாகவும், தனது காரைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் புகார் தெரிவித்தார்" என்று கூறினார்.

"அவர்களின் கார் பதிவு எண்ணை வைத்து, சில நிமிடங்களில் விகாஷ் பராலா மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்," என்று அவர் தெரிவித்தார்.

அந்த இரு இளைஞர்களும் மது உட்கொண்டிருந்ததை மருத்துவப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சதீஷ் குமார் கூறினார். எனினும், கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் வெள்ளியன்று பின்னிரவில் நடைபெற்றது. சனியன்று காவல் துறையினரால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணிடம், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 164-இன் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் முன்பே இந்திய தண்டனைச் சட்டம் 341-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் அம்மாநிலத்தில் பணிபுரியும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகளாவார்.

விகாஷ் பராலா ஹரியாணா பாஜக தலைவரின் மகன்தான் என்று காவல் துறையினர் உடுதிப்படுத்தியுள்ளனர். விகாஷ் பராலா சண்டிகரில் தங்கி சட்டம் படித்து வருகிறார்.

ஹரியாணா பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் கருத்தை அறிய பிபிசி அவரை தொடர்பு கொண்டபோது, அவரின் செல்பேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், ''இச்சம்பவம் குறித்து நான் போலீசாரிடம் கேட்டறிந்தேன். சண்டிகர் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக புகார் பதிவு செய்துள்ளனர். அவர்கள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

''இந்த பிரச்சனை ஹரியாணா பாஜக தலைவர் சுபாஷ் பராலா தொடர்புடையது அல்ல. ஒரு தனி நபர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அதனால் பராலா மகன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் மேலும் தெரிவித்தார்.

மகன் செய்த தவறுக்காக தந்தை தண்டிக்கப்படமாட்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்