பார்க்க வந்தாரா, தாக்க வந்தாரா? ஓ.பி.எஸ் தொண்டருக்கு அடி-உதை

திருச்சி விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க வந்ததாகக் கூறி ஒருவரை அஇஅதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியினர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி பிபிசி தமிழிடம் தமிழக காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் கூறுகையில், "திருச்சியைச் சேர்ந்த சோலைராஜா என்பவரை முன்னாள் முதல்வர் விமான நிலைய வாயில் அருகே இருந்தபோது, அவரது தொண்டர்கள் தாக்கியதாக தெரிய வந்துள்ளது" என்றார்.

Image caption போலீஸ் வாகனத்தில் சோலைராஜாவை தாக்கும் தொண்டர்கள்

"விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் வருவதையடுத்து, அவரை வரவேற்க சோலைராஜாவை அழைத்து வந்ததாக உள்ளூர் கட்சிப் பிரமுகர் கூறியுள்ளார். அவரிடம் திருச்சி நகர காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்" என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

மேலும், "செய்தியாளர்களுக்கு முன்னாள் முதல்வர் பேட்டியளித்தபோது, அவருடன் புகைப்படம் எடுக்க சோலைராஜா விரும்பியதாகவும், அப்போது அவரது இடுப்பில் இருந்த சிறிய கத்தி கீழே விழுந்தது" என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Image caption போலீஸ் பறிமுதல் செய்த கத்தி

"இதையடுத்து பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு அளித்த படையினர் சோலைராஜாவை போலீஸ் வாகனத்திற்கு அழைத்துச்சென்றபோது, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சோலைராஜாவை தாக்கினர்" என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

முதல் கட்ட விசாரணையில், அதிமுக எம்ஜிஆர் மன்ற தொண்டரான சோலைராஜன், பால் பாக்கெட்டை அறுப்பதற்காக கத்தியை வைத்திருப்பது வழக்கம் என்றும், திடீரென உள்ளூர் கட்சிப் பிரமுகர் அழைத்ததால், தனது இடுப்பிலேயே கத்தியை வைத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின்போது சோலைராஜா குடிபோதையில் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறினர்.

Image caption போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வத்தின் உயிருக்கு தமிழகத்தில் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அவருக்கு மத்திய காவல் பாதுகாப்பு வழங்குமாறு அவரது ஆதரவாளரான மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர்.மைத்ரேயன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று நடந்த சம்பவத்தில் பிடிபட்ட சோலைராஜா கூறுவது உண்மைதானா என்பது பற்றி விசாரிக்க அவரை விமான நிலைய காவல்நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக உள்ளூர் அதிமுகவினர் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய பாதுகாப்பு அல்லது தற்போது அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை பலப்படுத்த அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மீண்டும் வலியுறுத்துவது பற்றி பரிசீலிப்போம் என்று மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் பிபிசி தமிழிடம் கூறினார்.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிறகு பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்