பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமானது வட கொரியா : விமானப்படை முன்னாள் அதிகாரி எச்சரிக்கை

வடகொரியா ஏவுகணை சோதனை படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானுடன் அணுஆயுத ஒத்துழைப்பை பேணும் வட கொரியா மீதான அணுகுமுறையில் இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய விமானப்படையின் முன்னாள் துணைத் தளபதி கபில் கக் எச்சரித்துள்ளார்.

வடகொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்த நிலையில், ஏவுகணை சோதனை திட்டத்தை வட கொரியா நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், வட கொரியாவுடன் இந்தியா கொண்டுள்ள வர்த்தக உறவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய விமானப் படையின் முன்னாள் துணைத் தளபதி கபில் கக் பிபிசி தமிழிடம் கூறினார்.

இந்தியா கவனத்தில் கொள்ள அவர் குறிப்பிடும் 7 முக்கிய அம்சங்களை காண்போம்.

  • வடகொரிய ஏவுகணை திட்டத்தால் அமெரிக்க பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் உலக அளவில் சில விளைவுகளை ஏற்படுத்தலாம்.
  • வடகொரியாவுடன் இந்தியாவுக்கு வர்த்தக உறவுதான் உள்ளது. ஆனால், அணு ஆயுத தயாரிப்பு தொழில்நுட்பத்தை தனக்கு நெருக்கமான பாகிஸ்தானுடன் வட கொரியா பகிர்ந்துள்ளது.
  • நிலக்கரி, இரும்பு, மீன் வளம், மீன் வகை உணவு போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை வட கொரியாவுக்கு ஏற்படுவது, இந்தியாவை பெரிதாக பாதிக்காது.
  • வடகொரியா மீதான தடையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக தீர்மானித்துள்ளது. எனவே, வேறு வகையில் வட கொரியாவுக்கு சாதகமாக இந்தியா செயல்படக் கூடாது.
  • வடகொரியா ஏவுகணையைத் தயாரிக்கும்வரை காத்திருக்கலாம் என்ற கருத்தில் ரஷ்யாவும் சீனாவும் உடன்படுகின்றன. அதே சமயம், திட்டத்தை கைவிடுமாறு அவை, வட கொரியாவை மிகவும் தீவிரமாகக் கோரவில்லை.
  • சீனாவுடன் சேர்ந்து கொண்டு வட கொரியாவுக்காக இந்தியா குரல் கொடுக்கக் கூடாது.
  • சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நாளையே ஒரு முடிவு எடுக்கப்பட்டால் மற்ற நாடுகளின் அணியில்தான் இந்தியா சேர வேண்டும். அதனால் மிகவும் கவனமாக வட கொரியா விஷயத்தை இந்தியா கையாள வேண்டும்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :