இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் வலியையும் அன்பையும் சொல்லும் அருங்காட்சியகம்

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் தற்போது நெருங்குகிறது.

படத்தின் காப்புரிமை SHIB SHANKAR CHATTERJEE/BBC
Image caption அருங்காட்சியக நிறுவகர்களில் ஒருவர் மல்லிகா அஹ்லுவாலியா

இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் ஆறாம் பாகம் இது.

அமிர்தசரஸின் அழகான டவுன் ஹால், கடந்துபோன நினைவுகளின் சாட்சியாக திகழ்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் அடிமைப்பட்டு கிடந்த நினைவுகளின் சாட்சியாக நிமிர்ந்து நிற்கிறது.

70 ஆண்டுகளுக்கு முன்பு காலணி நாடான இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்த ஆங்கிலேயர்கள், பாகிஸ்தான் என்ற மற்றொரு தேசத்தையும் உருவாக்கி, பாகப்பிரிவினை செய்தார்கள்.

பாகப்பிரிவினை, வன்முறையைத் தூண்டி ரத்த ஆற்றை ஓடவிட்டது. சகோதரர்களாக ஒரே குடும்பமாக இருந்தவர்கள், எதிரிகளாகி அடித்துக் கொண்டார்கள்.

இந்த டவுன் ஹாலில் அமைந்திருக்கும் 'பிரிவினை அருங்காட்சியகம்' பழைய வடுக்களை கிளறி, புதிய வலியை கொடுக்கிறது.

ஆனால், இதர அருங்காட்சியகங்களில் இருந்து வேறுபடும் இது, பிரிவினையை அண்மையில் இருந்து பார்த்தவர்களின் குரலை, அந்த நினைவுகளை பாதுகாத்து வைத்திருக்கிறது.

'20-25 ஆண்டுகள் வரை கலவரங்களே கனவாக வந்தன'

படத்தின் காப்புரிமை SHIB SHANKAR CHATTERJEE/BBC
Image caption அமிர்தசரஸின் டவுன் ஹாலில் இருக்கும் பிரிவினை அருங்காட்சியகம்

பிரபல பாடகர் குல்ஜார் தனது மனப்பதிவுகளை பகிர்ந்துக் கொள்கிறார். "அன்று கோகுலாஷ்டமி நாள், பஞ்சாபிகளின் குடியிருப்புகளுக்கு சென்று நாங்கள் அடைக்கலம் புகுந்தோம். அந்த கால நினைவுகள், கண்களில் அப்படியே உறைந்து போய்விட்டன."

"ஏறக்குறைய, 20-25 ஆண்டுகள் தூங்கவிடாமல் துரத்திய அந்த கனவுகள் அலைகழிக்கும். அந்த நாள் நிகழ்ச்சிகள் தொடருமோ என்ற அச்சம் மனதை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது" என்று தெரிவித்தார்.

"எழுத்தினால், மனதின் ரணத்தை வெளியேற்றி மருந்திட்டேன். இல்லாவிட்டால், நான் என்னவாகியிருப்பேன் என்று சொல்லமுடியாது" என்று சொல்லி வருத்தப்படுகிறார் குல்ஜார்.

சுதந்திரம் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகே இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதிதான் அறிவிக்கப்பட்டது என்பது சிலருக்கே நினைவில் இருக்கும்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption குல்ஜாரின் குடும்பம் பஞ்சாபின் பஸ்தியில் அடைக்கலம் புகுந்தார்கள்

பெண்களின் நினைவாக உருவாக்கப்பட்ட கிணறு

எல்லைகள் வெளியிடப்பட்ட பிறகு இடம்பெயர நினைத்த மக்களில் லட்சகணக்கானோர் வீடுகளை, உயிரை, வாழ்க்கையை, வாழ்வாதாரங்களை இழந்தார்கள்.

அருங்காட்சியகத்தின் நிறுவனர்களில் ஒருவரான மல்லிகா அஹ்லுவாலியா சொல்கிறார், 'இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் என அனைத்துத் தரப்பினரும் துன்பங்களை அனுபவித்தனர்'.

இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து ஆழமாக சிந்தித்த மூன்று பேர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மஹிந்தரா அண்ட் மஹிந்தரா நிறுவனம் பிறந்த கதை (காணொளி)

'முத்தரப்பினரும் பாதிக்கப்பட்டதை காட்ட முயற்சித்திருக்கிறோம். துன்பத்தை மட்டுமல்லாமல், பிரிவினையின் நேர்மறை கோணத்தையும் காட்ட விரும்புகிறோம்.'

'மற்றவர்களுக்கு உதவி செய்தவர்களையும் முன்னிலைப்படுத்தும் உதாரணங்களையும் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறோம். இதுபோன்ற கதைகளையும், சம்பவங்களையும் மக்களுக்கு சொல்வது அவசியம்.'

அருங்காட்சியகத்தின் ஒரு பெரிய அறையின் நடுவில் ஒரு கிணறு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்பட்டபோது, சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக, கிணறுகளில் விழுந்து உயிர் மாய்த்துக் கொண்ட பெண்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட கிணறு இது.

படத்தின் காப்புரிமை SHIB SHANKAR CHATTERJEE/BBC
Image caption பிரிவினை அருங்காட்சியகத்தில் இருக்கும் கிணறு

'மனதை மகிழ்விக்கும் கதைகளும் உண்டு'

"பிரிவினை பற்றிய எண்ணிலடங்கா துன்ப நினைவுகள் நம்மிடம் இருந்தாலும், மனதை நெகிழச்செய்யும், மகிழச்செய்யும் கதைகளும் இருக்கின்றன".

"பிரிந்த காதலர்கள் எப்படி சேர்ந்தனர் என்ற கதையும் உண்டு… ஆனால், அந்தக் கதையை கேட்க நேரடியாக அருங்காட்சியகத்திற்கு வாருங்கள்" என்கிறார் மல்லிகா.

ஒரு அறையின் மூலையில், மகனுக்காக தந்தை எழுதிய கடிதம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. "நிலைமை மோசமாகிவிட்டது, இங்கிருந்து வெளியேற முடியுமா என்று தெரியவில்லை. உன்னை மீண்டும் பார்ப்பேனா என்பதும் தெரியவில்லை" என்று கடிதம் மூலம் இறுதி எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தந்தை.

படத்தின் காப்புரிமை SHIB SHANKAR CHATTERJEE/BBC
Image caption அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய கடிதங்கள்

பிரிவினையின் சாட்சியாக இருந்த தலைமுறையினர் அருகிவிட்டனர். ஆனால், அவர்களின் வேதனையான நினைவுகளும் அருகிவிடுமா? அடுத்த தலைமுறைக்கு பிரிவினை பற்றிய தகவல்கள் தெரியாமல் போய்விடுமோ?

ஆனால், இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தருபவர்களில் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் சரித்திரங்கள் சரிந்து போகாது.

படத்தின் காப்புரிமை SHIB SHANKAR CHATTERJEE/BBC
Image caption அருங்காட்சியகத்தில் பல அரிய பொருட்கள் உள்ளன

சரித்திரமும் உண்டு, பாடமும் உண்டு

வரலாற்றில் ஈடுபாடு கொண்ட ரோஷன் கூறுகிறார், "இந்த அருங்காட்சியகம், இதுவரை அடைபட்டுக் கிடந்த புதிய பாதையை திறந்துவிட்டுள்ளது".

"ஆசிரியர்களிடம் பெரியவர்களிடம் இருந்து கதைகளை கேட்டிருக்கிறோம். இங்கு வந்தால் செவிவழிக் கதைகளை உணரமுடியும். நிலைமை எப்போதும் எப்படியும் மாறலாம், இயல்பு நிலைமை கட்டுப்பாட்டை மீறலாம் என்ற பாடத்தை கற்றுக்கொள்ளலாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை SHIB SHANKAR CHATTERJEE/BBC
Image caption பாடம் கற்றுத் தரும் அருங்காட்சியகம் இது என்கிறார் ரோஷன்

இந்த அருங்காட்சியகம் பல்வேறு கோணங்களை காட்டுகிறது. இங்கு சரித்திரம், பாடம், படிப்பினை, வலி-வேதனை மட்டுமல்ல, காதலும் நெகிழ்வும் உண்டு.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது எப்படி? (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த கதை(காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :