தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலரை மாற்றும் முயற்சிக்கு வலுக்கிறது எதிர்ப்பு

பள்ளிக்கல்வித் துறையின் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்படலாம் என தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவருகின்றன. இது தொடர்பாக அரசியல் கட்சிகளும் கல்வித் துறை ஆர்வலர்களும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்ற பிறகு, பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று உதயசந்திரன் நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஆறு ஆண்டுகளாக அத்துறையின் செயலராக செயல்பட்டுவந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சபீதாவின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், உதயசந்திரனின் நியமனத்தை கல்வியாளர்கள் வரவேற்றனர்.

செங்கோட்டையன் அமைச்சராகவும் உதயசந்திரன் செயலராகவும் பதவியேற்ற பிறகு, பல்வேறு மாற்றங்கள் பள்ளிக்கல்வித் துறையில் நடைபெற ஆரம்பித்தன.

இடஒதுக்கீடு மற்றும் ஆன்-லைன்முறை

அரசுப் பள்ளிக்கூடங்களில் 11-ஆம் வகுப்புச் சேர்க்கையின்போது பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படாமல் இருந்த இடஒதுக்கீடு முறையை கண்டிப்பாக கடைபிடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. அதேபோல, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின்போது மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்றவர்களின் பெயர்களை வெளியிடும் முறை ரத்துசெய்யப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

தனியார் பள்ளிக்கூடங்கள் 12-ஆம் வகுப்புப் பாடத்தை 11-ஆம் வகுப்பிலேயே நடத்துவதைத் தடுக்கும் வகையில், 11-ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டதோடு, கடந்த 12 ஆண்டுகளாக தமிழகத்தில் மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டங்களை மாற்றும் பணிகளும் துவங்கின.

இவற்றையெல்லாம்விட பலரும் முக்கியமாகச் சுட்டிக்காட்டுவது, ஆசிரியர்களுக்கான இடமாறுதல்கள். ஆசிரியர்களுக்கான இடமாறுதல்கள் பல ஆண்டுகளாக கலந்தாய்வு முறையிலேயே நடைபெற்றுவருகின்றன என்றாலும், பல காலியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரியாமல் மறைத்துவிடுவதாகவும் பிறகு, அந்தக் காலிப் பணியிடங்களுக்குத் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்து வந்ததாகவும் புகார்கள் இருந்தன. இதனைப் போக்கும் வகையில் ஆன்-லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, 13000 ஆசிரியர்கள் இடமாற்றங்களைப் பெற்றனர்.

மேலும், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அனுமதி அளிப்பதிலும் ஆன்-லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

நூலகங்களுக்குப் புத்துயிர்

பள்ளிக்கல்வித் துறை தவிர, அந்த அமைச்சகத்தின் கீழ்வரும் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றங்கள் வெளிப்படையாகத் தென்பட்டன. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், முன்பு பதிப்பித்திருந்த புத்தகங்களின் மறுபதிப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிதாகவும் பல புதிய நூல்களைக் கொண்டுவரும் முயற்சிகளும் தொடங்கப்பட்டன.

பொதுநூலகத் துறையிலும் சுறுசுறுப்பு தென்பட்டது. கவனிக்கப்படாமல் கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு புத்துயிர் வழங்கப்பட்டது. அங்குள்ள அரங்குகள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டதோடு, நூலகத்தைப் புதுப்பிக்கும் பணிகளும் துவங்கின.

மாவட்ட நூலகங்களுக்கு மாநில மட்டத்திலிருந்தே இதழ்களைத் தேர்வுசெய்து சந்தா கட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

விமர்சனங்களுக்கிடையே அரசுக்கு நற்பெயர்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து கல்வியாளர்கள் நம்பிக்கையும் பாராட்டுகளையும் தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உதயசந்திரன் அந்தத் துறையிலிருந்து மாற்றப்படுவார் என்ற செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. ஆசிரியர் பணியிட மாற்றங்களின்போது, அ.தி.மு.கவினர் அளித்த பரிந்துரைகள் ஏற்கப்படாததால், அமைச்சர் தரப்பு கோபமடைந்திருப்பதால், விரைவில் உதயசந்திரன் இடமாற்றம் செய்யப்படலாம் என அந்தச் செய்திகள் கூறுகின்றன.

இது தொடர்பான செய்திகள் வெளியாக ஆரம்பித்ததுமே, பாட்டாளி மக்கள் கட்சி இதற்குக் கண்டனம் தெரிவித்தது. தமிழ்நாட்டில் பல பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், "2950 ஆசிரியர் பணியிடங்களை இடமாறுதல் மூலம் நிரப்பப்பட வேண்டிய சூழல் உருவான போது, முதற்கட்டமாக 700 பணியிடங்களுக்கு லஞ்சம் பெற்று இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அடுத்தகட்ட மாறுதலுக்கு உதயசந்திரன் அனுமதிக்காததால், செங்கோட்டையன் முதல்வர் பழனிச்சாமியிடம் புகார் செய்ததாகவும் அதனால்,அவர், உதயசந்திரனை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும்" பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

இந்தச் செய்திகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் வசந்திதேவி, "இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று யாராவது சொல்லவந்தால் அவர்கள் பள்ளிக்கல்வித் துறையைத்தான் உதாரணமாகக் காட்டுவார்கள். அதற்குக் காரணம் உதயசந்திரன்தான். அவர் அத்துறையிலிருந்து மாற்றப்பட்டால், அது மிக மோசமான ஒரு பெயரை அரசுக்கு ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டார்.

"பள்ளிக் கல்வித் துறையில் பல நாட்களாக செய்யப்பட வேண்டியிருந்த மாற்றங்களை அவர் சில நாட்களில் செய்தார். தமிழக கல்வித் துறை குறித்து புதிய நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார். உதயசந்திரன் மாற்றப்படுவது காரணம் என்று பல வதந்திகள் தற்போது உலாவருகின்றன. அந்த வதந்திகள் எல்லாம் மிக மோசமானவை. நேர்மையும் திறமையும் கொண்ட ஒருவரை நீக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகள், மிக மோசமான சக்திகள் என்பதில் சந்தேகமில்லை" என்கிறார் வசந்திதேவி.

அரசியல் அழுத்தம் காரணமா?

கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கும் மேலாக உதயசந்திரன் மாற்றப்படுவது குறித்து செய்திகள் அடிபட்ட நிலையில், இன்று சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வியெழுப்பியபோது, அவர் நேரடியாக இதற்குப் பதிலளிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

"அவர் என்ன அரசியல்வாதியா? அவரைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள். இதைப் பற்றியெல்லாம் பதில்சொல்ல முடியாது," என்று பதிலளித்தார் செங்கோட்டையன்.

இத்தனைக்கும் உதயசந்திரன் பள்ளிக் கல்வித் துறையின் செயலராகப் பதவியேற்றபோது, அனைத்து பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் செயலரை உடன் அமர்த்திக்கொண்ட செங்கோட்டையன், கல்வித் துறையில் செய்யப்பட்டுவரும் சீர்திருத்தங்களில் உதயசந்திரனின் பங்களிப்பையும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கட்சியினரிடமிருந்து வரும் நெருக்கடி காரணமாகவே தற்போது செயலரை மாற்றும் முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'பேரழிவுக்கு இட்டுச்செல்லும்'

"உதயசந்திரனை மாற்றினால், அது மிகப் பெரிய பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என தலைமைச் செயலருக்கு எழுதியிருக்கிறேன். ஆனால், என்ன நடக்குமெனத் தெரியவில்லை" என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவசகாயம்.

"அப்படி நடந்தால், அது மிக மிக மோசமான நிகழ்வாக அமையும். அரசுக்கு மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும். கல்வித் துறை என்பது தற்போது மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக மாறிவிட்டது. அதுதான் பிரச்சனை" என்கிறார் அவர்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை என்பது மிகப் பெரிய அளவில் ஊழியர்களைக் கொண்டுள்ள ஒரு துறை. சுமார் 3 லட்சம் ஊழியர்கள் இந்தத் துறையில் பணியாற்றுகின்றனர். இதன் காரணமாகவே, தேர்தல் பணிகள், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் ஆகியவை ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றன.

"இவ்வளவு பெரிய அமைப்பு தானாக, சரியாக இயங்க வேண்டும். ஆனால், ஒரு தனி அதிகாரியை நம்பி இயங்க வேண்டியிருக்கிறது. தமிழக அரசில் இருந்த ஒவ்வொரு சுயேச்சையான அமைப்பையும் நாசம் செய்தவர் ஜெயலலிதா. அதன் விளைவைத்தான் இப்போது பார்த்துகொண்டிருக்கிறோம்" என்கிறார் தேவசகாயம்.

நேர்மையான அதிகாரியான உதயசந்திரன், இதற்கு முன்பாக பலமுறை முக்கியத்துவமில்லாத துறைகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். பள்ளிக் கல்வித் துறைக்கு வருவதற்கு முன்பாக, தமிழ்நாடு உப்புக் கழகத்தின் தலைமை அதிகாரியாக அவரை நியமித்திருந்தார் ஜெயலலிதா.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்