நள்ளிரவில் வெளியே போகக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?: கொதிக்கும் பெண் இணையவாசிகள்
இந்தியாவில் உள்ள பெண்கள் சமூக ஊடகங்களில் தாங்கள் இரவு நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடன் செலவிடுகின்றனர் என்பதை #AintNoCinderella என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
ஏன் இந்த திடீர் ஹேஷ்டேக்?
சண்டிகரில் உள்ள வட புற நகரில் டி ஜே எனப்படும் டிஸ்க் ஜாக்கியாக பணி செய்துவரும் வர்னிகா குந்தா என்ற பெண் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அன்று பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரண்டு நபர்களால் பின்தொடரப்பட்டார்.
தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ள குந்தா, தான் துரத்தப்பட்டதாகவும், கிட்டத்தட்ட கடத்தப்படும் சூழல்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அதில் கூறியுள்ளார். மேலும், தனது அவசர அழைப்புக்கு போலீஸ் விரைவாக செயலாற்றியதாலே தான் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு எங்கோ ஒரு மூளையில் வீசப்படவில்லை என்றும் அதில் கூறியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை குந்தா ஃபேஸ்புக் பதிவில் எழுதியதை தொடர்ந்து அது வைரலாக பரவியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை கைது செய்த இருவரில் ஒருவர் இந்தியாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவை சேர்ந்த முன்னணி பிரமுகர் ஒருவரின் மகனும் ஆவார்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஹரியாணா பாஜகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதியான ரம்வீர் பாட்டி, குந்தாவுக்கு ஏற்பட்ட சம்பவத்துக்கு அவரையே குற்றஞ்சாட்டியுள்ளார்.
சி என் என் நியூஸ் 18 என்ற தொலைக்காட்சி சேனலிடம் பேசிய அவர், ''அந்த நள்ளிரவு நேரத்தில் அவர் ஏன் காரில் தனியாக சென்றார்? தற்போது சூழல் சரியாக இல்லை. நாம்தான் நம்மை பார்த்துகொள்ள வேண்டும்?'' என்றார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்த அவர், ''பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். இரவு நேரத்தில் உலாவுவதற்கு விடக்கூடாது. இரவுகளில் நேரத்திற்கு பிள்ளைகள் வீட்டிற்கு வரவேண்டும். ஏன் வெளியே தங்கியிருக்கிறார்கள்?'' என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
ரம்வீர் பாட்டியின் இந்த கருத்துக்கள் பெண்களை சமூக ஊடகங்களில் கிளர்ந்து எழவைக்க, நள்ளிரவு நேரத்தை தாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் செலவிட்டு கொண்டிருக்கின்றனர் என்பதை புகைப்படம் எடுத்து பெண்கள் சமூக ஊடகங்களில் பதிந்துள்ளனர்.
திரைப்பட நடிகையும், எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக குழுவின் தலைவருமான திவ்யா ஸ்பந்தனா, #AintNoCinderella என்ற இந்த டிவிட்டர் ஹேஷ்டேக் பிரசாரத்தை தொடங்கி வைக்க, பெண்கள் பலரும் இதே ஹேஷ்டேக்கை தங்களுடைய புகைப்படங்களுடன் பதிவு செய்தனர்.
#AintNoCinderella ஹேஷ்டேக்கில் இடம்பெற்ற கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
பிற செய்திகள்:
- பெண்களுக்கான 'டவல்' உள்ளாடைக்கு பெருகும் ஆதரவு - காரணம் என்ன?
- பிரியாவிடை பெற்றது; சைகை மொழியில் பேசிய மனிதக் குரங்கு
- கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்பட முக்கிய தகவல்களை கசியவிட்டு பணம் கேட்டு மிரட்டும் ஹேக்கர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :