நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய தம்பிதுரை: 'புரியவில்லை' என வட மாநில எம்.பி..க்கள் கூச்சல்

தம்பிதுரை படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அதன் துணைத் தலைவரும் அதிமுக உறுப்பினருமான தம்பிதுரை இன்று (புதன்கிழமை) தமிழில் பேசியபோது, மொழி புரியவில்லை என்று வட மாநிலங்களைச் சேர்ந்த மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

இதனால் அவையில் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது.

"வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தின் 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி அது பற்றிய பேசுவதற்கு இந்திய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது.

எம்.பி.க்கள் கூச்சல்

அப்போது மக்களவையில் தமிழில் தம்பிதுரை தமது பேச்சை தொடங்கியபோது, அவையில் இருந்த மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் "தம்பிதுரை பேசுவது புரியவில்லை. மொழிபெயர்ப்பு வசதி இல்லையா?" என்று குரல் எழுப்பி கூச்சலிட்டனர்.

இதையடுத்து தம்பிதுரை "நான் எனது தாய்மொழியில் பேசுவதை சக உறுப்பினர்கள் புரிந்து கொள்ள மொழபெயர்ப்பு வசதிகள் இல்லாத நிலைதான் இங்கு உள்ளது" என்றார்.

அப்போது மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "தாய்மொழியில் பேசுவதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்" என்றார்.

அவரது பதிலால் திருப்தி அடையாத தம்பிதுரை, "இந்திய நாடாளுமன்றத்தில் மற்ற உறுப்பினர்கள் பேசும்போது, உடனுக்குடன் அதை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய அலுவலர்கள் உள்ளனர்.

ஒரு உறுப்பினர் அவரது தாய்மொழியில் தமிழில் பேச முன்னனுமதி பெறும் நிலையில்தான் நாடு உள்ளது என்பதை வலியுறுத்தி சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்றார்.

தம்பிதுரை யோசனை

மேலும், "வங்க மொழியில் ஒருவர் பேசுவதாக இருந்தால் அதன் மொழியாக்கத்தை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில்தான் கேட்க முடிகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் தமிழ், தெலுங்கு, வங்காளி உள்ளிட்ட மொழிகள் "அலுவல் மொழிகள்" ஆக அங்கீகரிக்கப்பட நாம் உறுதி ஏற்போம்" என்று தம்பிதுரை கூறினார்.

"ஒரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக, எல்லா மொழிகளும் சமமாக மதிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பு" என்றும் தம்பிதுரை வலியுறுத்தினார்.

தம்பிதுரை பேசத் தொடங்கியபோது, மொழி புரியவில்லை எனக் கூச்சலிட்ட உறுப்பினர்கள் மற்றும் அவையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் அவர் பேசி முடித்தபோது, மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

கனிமொழி கவலை

மாநிலங்களவையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டுகள் நிறைவு குறித்து திமுக குழுத் தலைவர் கனிமொழி பேசுகையில், "இந்திய சுதந்திரத்தில் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது" என்றார்.

படத்தின் காப்புரிமை RAJYA SABHA TV

ஆனால், "நாடு சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் இன்னும் மகளிருக்கு இடஒது்கீடு பெற்றுத்தர முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்" என்று கனிமொழி கூறினார்.

தன்னை பின்தொடர்ந்து வந்த அரசியல் பிரமுகரின் மகன் மீது புகார் கூறிய பெண்ணின் நேர்மை குறித்து மக்கள் பிரதிநிதிகள் சிலர் கேள்வி எழுப்புவதாகக் குறிப்பிட்ட கனிமொழி, "பாலியல் விவகாரம், ஆசிட் வீச்சு சம்பவம் என எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கேள்வி எழுப்பும் நிலையே காணப்படுவது நமக்கு அவமானமாக இல்லையா?" என்றும் கேள்வி எழுப்பினார்.

பிபிசி தமிழில் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :