காதல் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க காவல்துறையின் தனிப்பிரிவு பயன்தருமா?

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் பாதுகாக்க தமிழகத்தின் சில மாவட்டங்களில் காவல்துறையின் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இது மட்டும் போதுமானதல்ல என்கிறார்கள் தலித் செயல்பாட்டாளர்கள்.

Image caption ஜாதி மாறி காதலிக்கும் காதலர்களைப் பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டுவருவதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும்: சங்கரின் மனைவி கௌசல்யா

தமிழ்நாட்டில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் பாதுகாப்புக் கோரி வந்தால், அவர்களைப் பாதுகாக்கவென மாநிலம் முழுவதும் தனி காவல்துறை பிரிவுகளை ஏற்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கூறியிருந்தது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்திலும் சேலத்திலும் இதற்கென தனிப் பிரிவுகளைத் துவக்கியிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

விமலா தேவி வழக்கு

கடந்த 2014ஆம் ஆண்டு, மதுரை மாவட்டம் பூதிப்புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விமலா தேவி என்ற பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த திலீப் என்ற வாலிபரைக் காதலித்துள்ளார். இந்தக் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், விமலாவும் திலீப்குமாரும் அந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் வீட்டை விட்டு வெளியேறி விருத்தாச்சலத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

Image caption விமலா தேவி

ஊர் திரும்பிய விமலா தேவியை காவல்துறையினர் சமரசம் செய்து பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். இதற்குப் பின்னர் மீண்டும் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், 2014 அக்டோபர் 2-ம் தேதியன்று இரவு அந்தப் பெண் தூக்கிலிடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதன்பின்னர், காவல்துறையினருக்குத் தெரியாமல் விமலாவின் சடலத்தை அவரது பெற்றோர் எரித்தனர். விமலாவின் சடலத்தோடு, அவரது உடமைகளும் எரிக்கப்பட்டன. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் பெற்றோர் உட்பட 8 பேரைக் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி, திலீப் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

தவிர, இதுபோல ஜாதி மாறி திருமணம் செய்துகொள்பவர்கலளைப் பாதுகாக்க காவல்துறையில் தனிப்பிரிவை துவங்க வேண்டும், காதலர்களின் பெற்றோருக்கு அறிவுரையும் ஆலோசனையும் வழங்க வேண்டும், அவர்களை அச்சுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 விதிமுறைகளையும் விதித்தது.

ஆனால், இந்த விதிமுறைகளை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்த ஆண்டுத் துவக்கத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரவிருக்கும் நிலையில், மதுரை, சேலம் மாவட்டங்களில் ஜாதி மாறி திருமணம் செய்துகொள்பவர்களைப் பாதுகாக்கத் தனிப்பிரிவைத் துவக்கியிருப்பதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருக்கிறது.

சரியான தீர்வு எது?

இது தொடர்பாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜிடம் கேட்டபோது, "ஜாதி மாறி திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்க முன்பு ஏதுமே இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கையாவது எடுக்கப்பட்டிருக்கிறது. முன்பு காவல்துறையில் காதலர்கள் சென்று புகார் அளிப்பதே பெரிய காரியமாக இருக்கும்.'' என்று கூறினார்.

"அவ்வளவு சீக்கிரம் புகாரைப் பெற மாட்டார்கள். இப்போது அதற்கு வழி கிடைத்திருக்கிறது. ஆனால், எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்பினால் பெரிய பயன் ஏதும் இருக்காது என்கிறார் தலித்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக இயங்கிவரும் மதுரையைச் சேர்ந்த எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்.

Image caption எவிடன்ஸ் கதிர்

"இதற்கென தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இம்மாதிரி தனிப் பிரிவைத் துவங்கியிருப்பதாக அறிவித்தால் அது எப்படி செயல்பாட்டுக்கு வரும், இதற்காகும் நிதியை எங்கிருந்து பெறுவார்கள், எப்படி காதலர்களைப் பாதுகாப்பார்கள் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. வழக்கு விசாரணைக்கு வருவதால் இப்போது அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்" என்கிறார் கதிர்.

தலித்கள் மீதான வன்கொடுமையைக் கண்காணித்துத் தடுக்க மாநில அளவில் உள்ள கண்காணிப்புக் குழு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாநில முதல்வர் தலைமையில் கூடி நிலைமையை ஆராய வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அந்தக் குழு இரண்டு முறையே கூடியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் கதிர், இம்மாதிரி தனிப் பிரிவினால் என்ன பயன் ஏற்பட்டுவிடும் என்கிறார்.

காதலர்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் தீர்வா?

ஜாதி மாறி காதலிக்கும் காதலர்களைப் பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டுவருவதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும் என்கிறார் ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டதால் கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா.

"இம்மாதிரி தனிப் பிரிவு ஏற்படுத்தும்போது, அங்கு வைத்தும் காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது. அப்படி காவல்துறை செய்தால், யார் தடுப்பார்கள்? இம்மாதிரி வரும் காதலர்களை எப்படிப் பாதுகாப்பார்கள் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்கிறார் கௌசல்யா.

உயர்நீதின்றம் விதித்திருக்கும் 9 அறிவுரைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைRAVIKUMAR
Image caption ரவிக்குமார் துரை

பஞ்சாப் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கண்ணன், 2013ல் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கென அளித்த அறிவுரைகளின் அடிப்படையிலேயே இந்த 9 விதிகளும் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறும் ரவிக்குமார், வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிறார்.

வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்கான ஐ.நா. பிரகடனத்தில் இந்தியா 1970களிலேயே கையெழுத்திட்டுவிட்டாலும், இன்னும் இதைத் தடுப்பதற்கான சட்டம் இந்தியாவில் இல்லை என்கிறார் அவர்.

பல்வேறு சமூகங்களிடையே தற்போது வளர்க்கப்பட்டுவரும் வெறுப்புப் பிரச்சாரத்தை முழுமையாக தடுத்து நிறுத்துவது, ஒற்றுமையை வளர்ப்பதுதான் இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்