''சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்'': நடிகர் விஜய்

படத்தின் காப்புரிமை ActorVijay

தான் சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் என்றும், யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உள்ளது என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்குமுன், பாலிவுட்டில் வெளியான ஒரு படத்தை நடிகர் விஜய் நடித்த சுறா படத்துடன் ஒப்பிட்டு சமூக ஊடகமான ட்விட்டரில் தி நியூஸ் மினிட் என்ற இணைய செய்தி நிறுவனத்தின் ஆசிரியரும், பெண் ஊடகவியலாளருமான தன்யா ராஜேந்திரன் கருத்து ஒன்றை பதிந்திருந்தார்.

அதில், "விஜயின் சுறா படத்தை இடைவேளை வரை பார்த்தேன்; அதற்குப் பிறகுதான் எழுந்து வெளியில் வந்தேன். ஆனால், #Whenharrymetsejal அந்த சாதனையை முறியடித்துவிட்டது. இடைவேளைவரைகூட பார்க்க முடியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

தன்யா கருத்து நடிகர் விஜய் ரசிகர்களை ஆத்திரமடைய செய்தது. முதலில், ட்விட்டரில் கேலி செய்த ரசிகர்கள் பின்னர் ஒருபடி மேலே சென்று ஆபாசமாகத் பேசத் தொடங்கினர். ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று உருவான பிரச்சனை மூன்று, நான்கு நாட்களை கடந்த பின்னரும் தீர்வை எட்டவில்லை.

#publicitybeebdhanya என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி மீண்டும் விஜய் ரசிகர்கள் வசைமாரி பொழியத் துவங்கியவுடன் அந்த ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் தன்யாவுக்கு எதிராக வந்தன.

மு.க ஸ்டாலின் கண்டனம்

இச்சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.கவின் செயல்தலைவர் மு.க ஸ்டாலின், ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கும் உரிமையுள்ள ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை என்றும், பேச்சுரிமையின் குரல்வளையை நெறிக்கும் வகையில் சென்னையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தளத் தாக்குதல், மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது என்றும் கூறினார்.

மவுனம் கலைத்த விஜய்

இந்த விஷயத்தில் நடிகர் விஜய் தரப்பிலிருந்து ஆரம்பித்திலிருந்து எவ்வித விளக்கங்களும் வெளியிடப்படாத நிலையில், நேற்று இரவு விஜய்யின் அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. அதில், தான் சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் என்றும், யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ அல்லது தரக்குறைவாகவோ விமர்சிக்க கூடாது என்பது தன்னுடைய கருத்து என்றும், அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டு கொள்வதாக நடிகர் விஜய் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழில் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்