அ.தி.மு.க. அம்மா அணிக்குள் எடப்பாடி - டிடிவி தினகரன் இடையே உச்சகட்ட மோதல்

டிடிவி தினகரன் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்பதால் அவர் செய்யும் நியமனங்களைக் கட்சியினர் ஏற்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்திருக்கும் நிலையில், கட்சி தன் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக தினகரன் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. அம்மா அணியின் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று காலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வி.கே.சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தாலும்கூட அவரால் செயல்பட இயலாத நிலையில், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் தற்போது கட்சியை வழிநடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனை, கடந்த 14.2.2017ல் மீண்டும் கட்சியில் சேர்த்து அடுத்த நாளே அவரை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தது சட்ட விரோதமானது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து 5 ஆண்டுகள் அவர் கட்சியில் இல்லாததால், அவரால் கட்சிப் பதவிகளை வகிக்க இயலாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், தினகரனை நியமனம் செய்த சசிகலாவின் நியமனமே தற்போது தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் இருக்கும் நிலையில், தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவிப்பது அ.தி.மு.க. தொண்டர்களைக் கட்டுப்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் 27 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்தில் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், சசிகலா பொருளாளராக நியமனம் செய்த திண்டுக்கல் சீனிவாசன் தற்போதும் கட்சியின் பொருளாளராக நீடிக்கும் நிலையில், தன்னுடைய நியமனம் மட்டும் எப்படிச் செல்லாமல் ஆகும் எனக் கேள்வியெழுப்பினார்.

தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்படும் பொதுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளுக்குத்தான் தொடர்ச்சியாக ஐந்தாண்டு கட்சியில் நீடிக்க வேண்டும் என்ற விதி பொருந்தும் என்றும் துணைப் பொதுச் செயலாளர் போன்ற நியமனப் பதவிகளுக்குப் பொருந்தாது என்றும் தினகரன் தெரிவித்தார்.

'தேவைப்பட்டால் கட்சியிலிருந்து நீக்குவேன்'

கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்யக்கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாகக் கூறிய தினகரன், தேவைப்பட்டால் கட்சியிலிருந்து சிலரை நீக்கவும் செய்வேன் என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவால்தான் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார் என்றும் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் துணைப் பொதுச் செயலாளர் என தன் பெயரையே குறிப்பிட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டு, வெளியில் ஒன்றை சொல்வதாகவும் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாமல், யார் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டாலும் அவர்களை கட்சியைவிட்டு நீக்குவேன் என்றும் நடப்பது எங்களுடைய ஆட்சியென்றும் தினகரன் கூறினார்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு கட்சியைப் பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ கவலையில்லையென்றும் பதவியில் உள்ளவரை சுருட்டிக்கொண்டு போவதற்காகவே இப்படிச் செயல்படுவதாகவும் கூறிய தினகரன், தங்களுடைய மடியில் கனம் இருப்பதால்தான் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு செயல்படுவதாகத் தெரிவித்தார்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

தான் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதால், பயந்துபோய் இந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டிருப்பதாக தினகரன் கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி, சசிகலா தலைமையிலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் இரண்டாக உடைந்தது. இதற்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

மார்ச் மாதம் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, சசிகலா அணியின் சார்பில் அந்தத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். ஆனால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பிறகு ஏப்ரல் மாத மத்தியில் தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கிவைப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல்துறையால் தினகரன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதற்குள் கட்சிக்குள் எடப்பாடி பழனிச்சாமி தன் பிடியை வலுப்படுத்தியுள்ள நிலையில், கடந்த வாரம் சில கட்சிப் பதவிகளுக்கு ஆட்களை அறிவித்தார் தினகரன். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி அணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், இரு அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருவதாக அமைச்சர்கள் தெரிவித்துவருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்