`கருணாநிதி என்ற ஆளுமையின் அம்சமாக விளங்கிய முரசொலி'

  • கே. முரளீதரன்
  • பிபிசி தமிழ்
முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அந்த நாளிதழின் இத்தனை ஆண்டுகாலப் பயணத்தை விளக்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் கண்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் பல்லாவரத்தைச் சேர்ந்த நந்தகோபாலின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்கின்றன.

"கிட்டத்தட்ட 40 வருஷமா படிக்கிறேன் சார். அப்பல்லாம் சொந்தமா வாங்க வசதியில்ல. மன்றத்திலதான் படிப்பேன். எல்லாரோடையும் சேர்ந்து படிக்கிறது ஒரு சந்தோஷம்" என்கிறார் நந்தகோபால்.

படக்குறிப்பு,

''மன்றத்திலதான் படிப்பேன். எல்லாரோடையும் சேர்ந்து படிக்கிறது ஒரு சந்தோஷ'': நந்தகோபால்

இதுபோல, நூற்றுக்கணக்கன தி.மு.க. தொண்டர்கள் உணர்ச்சிகரமான முகங்களுடன் அந்தக் கண்காட்சியைப் பார்த்துச் சென்றுவருகின்றனர். பலர் தங்கள் மனைவியுடன் அங்கு வந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

"ஒரு நல்ல இயக்கத்தில் அதன் தலைவருக்கு ஒரு பார்வையும் லட்சியமும் இருக்கும். அவற்றைத் தொண்டர்களுக்குச் சொல்வது மிக முக்கியம். அதைச் சொல்லும் விதத்தில், அந்த லட்சியங்களைத் தொண்டர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை திராவிட இயக்கத்தில் முரசொலி செய்தது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட் லைன் இதழின் ஆசிரியருமான விஜய் ஷங்கர்.

முரசொலி துவங்கப்பட்டபோது, தி.மு.கவின் பத்திரிகையாக துவங்கப்படவில்லை. மு. கருணாநிதியின் இதழாகவே துவங்கப்பட்டது. அவர் அந்த இதழைத் தீவிரமாக நடத்த ஆரம்பித்தபோது, 10க்கும் மேற்பட்ட திராவிட இயக்க இதழ்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இருந்தபோதும், எல்லாவற்றையும் மீறி எழுந்து நின்ற முரசொலி, தற்போது 75 ஆண்டுகளை எட்டிப்பிடித்திருக்கிறது.

முரசொலி துவக்கத்தில் ஒரு துண்டுப் பிரசுரமாகத்தான் வெளியிடப்பட்டது. கருணாநிதிக்கு வெறும் பதினெட்டு வயதாக இருந்த காலகட்டத்தில், அதாவது 1942 ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று ஒரு துண்டுப் பிரசுரமாக முரசொலியைப் பிரசுரித்தார் கருணாநிதி. 1944ஆம் வருடம் வரை துண்டுப் பிரசுரமாகவே முரசொலி வெளிவந்தது. அப்போது பள்ளிக்கூட இறுதித் தேர்வு முடிவுகள்கூட வரவில்லையென்பதால், சேரன் என்ற புனைப் பெயரில்தான் படைப்புகளை எழுதிவந்தார் கருணாநிதி.

1943ல் முரசொலியின் முதலாம் ஆண்டு விழாவை கருணாநிதி நடத்தியபோது, அந்த விழாவில் பிற்காலத்தில் திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டதாக பின்னாளில் நினைவுகூர்ந்தார் கருணாநிதி.

1944 காலகட்டத்தில் கருணாநிதியின் ஆர்வம் நாடகங்களின் பக்கம் திரும்பியதால் இதழ் வெளிவருவது தடைபட்டது. அதற்குப் பின், 1948ஆம் ஆண்டு பொங்கல் நாளிலிருந்து மீண்டும் வெளிவர ஆரம்பித்தது முரசொலி. துண்டறிக்கை வடிவிலிருந்து மாறுபட்டு, 'க்ரவுன்' வடிவத்தில் வெளிவர ஆரம்பித்த முரசொலி சுமார் 25 இதழ்கள் வெளிவந்திருக்கலாம் என கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் சங்கொலி திருநாவுக்கரசு. இதற்குப் பிறகு மீண்டும் தடைபட்டது.

அதன் பிறகு, 1954 முதல் சென்னையிலிருந்து வார இதழாக வெளியாக ஆரம்பித்தது. 1960 வரையில் வார இதழாகவே வெளிவந்த முரசொலி, அண்ணா சாலையில் ஒரு கட்டடத்தில் இருந்து நிலையாக செயல்பட ஆரம்பித்தது.

1960ஆம் வருடம் ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து முரசொலி தினசரியாக வெளியாகும் என கூறப்பட்டாலும் செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்துதான் தினசரியாக வர ஆரம்பித்தது (அந்த காலகட்டத்தில் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடாக 1953ல் துவங்கப்பட்ட நம்நாடு இதழே இருந்துவந்தது).

1960க்குப் பிறகு, தடையின்றி தற்போதுவரை தொடர்ந்து வெளியாகிவருகிறது முரசொலி. சென்னையிலிருந்து மட்டும் பதிப்பிக்கப்பட்ட இந்த நாளிதழ், 80களின் இறுதியிலிருந்து மதுரையிலிருந்தும் அச்சாக ஆரம்பித்தது.

"வாசிப்பதை ஒரு முக்கியமான செயல்பாடாக கொண்டிருந்தது திராவிட இயக்கம். தி.மு.கவின் தலைவரான சி.என். அண்ணாதுரையின் சிலை, படங்கள் எல்லாவற்றிலும் அவர் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருப்பதுபோலவே இருக்கும். அழுத்திவைக்கப்பட்டிருந்த சமூகம், வாசிப்பின் மூலமாகவே மேலே வரமுடியும் என்பதையே அது சுட்டிக்காட்டியது. அந்த மனப்போக்கின் ஒரு பகுதிதான் முரசொலி" என்கிறார் விஜயசங்கர்.

முரசொலியின் முதுகெலும்பைப் போன்ற அம்சம், தி.மு.க. தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிவரும் கடிதம். தி.மு.கவின் நிறுவனர் சி.என். அண்ணாதுரை, நம் நாடு இதழில் எழுதிவந்த "தம்பிக்கு கடிதம்" இதற்குத் தூண்டுதலாக அமைந்தது,

ஆனால், கருணாநிதி இந்தக் கடிதங்களை எழுதத் துவங்கியபோது 'உடன்பிறப்பே' என துவங்கவில்லை. முதலில் 'பொன்முடிக்குக் கடிதம்' என்றுதான் இது துவங்கியது என்கிறார் சங்கொலி திருநாவுக்கரசு. அதற்குப் பிறகு, 1954 மே 18ஆம் தேதியிலிருந்து 'நீட்டோலை' என்ற பெயரில் இந்தக் கடிதங்கள் வெளியாக ஆரம்பித்தன. பிறகு, சில காலம் மறவன் மடல் என்று எழுதினார் கருணாநிதி. "அதற்கு வெகுகாலத்திற்குப் பிறகு, அதாவது 1971 ஏப்ரலில்தான் உடன்பிறப்புக்கான கடிதங்கள் துவங்கின" என்கிறார் சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதிய ஆர். கண்ணன்.

1954ல் துவங்கி, 2016ல் உடல்நலம் குன்றும்வரை, கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தக் கடிதங்களை தன் கட்சித் தொண்டர்களுக்காக எழுதி வந்திருக்கிறார் கருணாநிதி.

"கட்சிகள் பல இதழ்களை நடத்தினாலும் கட்சித் தலைவரே அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து சுமார் 62 ஆண்டுகள் தொண்டர்களுக்கு எழுதி வந்தது உலகில் வேறு எங்கு இல்லாதது" என்கிறார் கண்ணன்.

தி.மு.கவின் அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகள், லட்சியங்கள் போன்றவற்றை தொண்டர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்ததில் முரசொலியின் பங்கு மிகமிக முக்கியமானது என்கிறார் அவர்.

இவையெல்லாவற்றையும்விட முரசொலியின் மிக முக்கியமான பங்களிப்பு, இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது அதனைத் தீவிரமாக எதிர்த்து நின்றது. கடுமையான தணிக்கை முறை அந்த காலகட்டத்தில் அமலில் இருந்தபோதும் பல புதுமையான வழிகளில் தொண்டர்களிடம் சொல்லவேண்டியதைச் சொன்னது முரசொலி.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தி.மு.கவினர் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில். 1976 பிப்ரவரி 3ஆம் தேதி, அண்ணாவின் நினைவு தினத்தன்று வெளியான இதழில், "அண்ணாவின் நினைவிடத்திற்கு வரமுடியாதவர்களின் பட்டியல்" என கைதானவர்களின் பட்டியல் வெளியானது.

அப்போது அமலில் இருந்த தணிக்கை முறையைக் கடுமையாக கிண்டல் செய்யும் வகையில், முரசொலியின் தலைப்புச் செய்திகளாக, "விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்: வைத்தியர் வேதாந்தைய்யா அறிவிப்பு", "வெண்டைக்காய் உடலுக்கு நல்லது" என தலைப்புச் செய்திகள் வெளியிடப்பட்டன. நெருக்கடி நிலை காலகட்டம் நெடுக, அதற்கு எதிராக முரசொலி குரல்கொடுத்து வந்தது.

கேள்வி - பதில் பகுதிகள், கருத்துச் சித்திரங்கள், கார்ட்டூன்கள், இருவருக்கு இடையிலான உரையாடல்கள் என வெவ்வேறு சுவாரஸ்யமான வடிவங்களில் தி.மு.கவின் கருத்துகள் தொண்டர்களைச் சென்றடைந்தன.

நெருக்கடி நிலை காலகட்டத்தைப் போலவே, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது முரசொலி அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் ஒரே ஒரு நாள் மட்டும் நாளிதழ் வெளியாகவில்லை. அடுத்த நாளிலிருந்து மீண்டும் வெளியாகத் துவங்கியது முரசொலி.

ஆனால், தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் எதிரிகளின் மீது முரசொலி கடுமையாக தாக்குதல் தொடுத்திருக்கிறது. கருணாநிதி மீது விமர்சனங்களை வைத்தவர்கள், முரசொலியால் கேலிக்குள்ளாக்கப்பட்டனர், தூற்றப்பட்டனர். ஆனால், அதே நபர்கள் தேவையான தருணங்களில் பாராட்டவும்பட்டனர்.

"நெருக்கடி நிலையை அமல்படுத்திய இந்திரா காந்தியை தி.மு.க. ஆதரித்தபோது, அதனைச் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி தொண்டர்களிடம் கொண்டு சேர்த்ததும் முரசொலிதான்" என்கிறார் விஜயசங்கர்.

கட்சியின் நிலைப்பாடுகள் மாறுபோது, கட்சித் தொண்டர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்துவதில், பிற கட்சிகளின் தொண்டர்களுக்கு பதிலளிப்பதற்கான வாதங்களை முன்வைப்பதற்கு முரசொலி மிக முக்கியமான பங்கை வகித்தது என்கிறார் விஜயசங்கர்.

முரசொலி நாளிதழில் கருணாநிதி எழுதிவந்த பகுதிகள், சின்னக் குத்தூசியால் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகியவை தி.மு.கவின் தொண்டர்களால் மிகவும் விரும்பப்பட்டவை. தற்போது இந்த இரு பகுதிகளுமே இல்லாத நிலை. கருணாநிதி என்ற மாபெரும் ஆளுமையின் ஓர் அம்சமாகவே முரசொலி இருந்து வந்திருக்கிறது. இனியும் அப்படியே தொடர முடியுமா?

"தற்போது மு.க. ஸ்டாலின் அதில் எழுதுகிறார். தற்கால நிலைமைக்கு ஏற்ப கட்டுரைகள் அதில் இடம்பெறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தி.மு.கவினர் மத்தியில் அதன் முக்கியத்துவம் தொடரக்கூடும்" என்கிறார் கண்ணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :