விவசாயிகளிடம் பொய் சொல்ல மாட்டேன்: அய்யாக்கண்ணுவிடம் முதல்வர் உறுதி

  • 11 ஆகஸ்ட் 2017
Farmers meet CM

விவசாயிகளின் கோரிக்கைகள் விஷயத்தில் பொய் சொல்ல மாட்டேன் என்று டெல்லியில் தன்னை சந்தித்த அய்யாக்கண்ணு குழுவினரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து 27-ஆவது நாளாக அய்யாக்கண்ணு குழுவினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு இன்று பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி வந்தார்.

மாநில அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கிய முதல்வரை சந்திக்க தமது சங்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேருடன் அய்யாக்கண்ணு இன்று காலை 8 மணியளவில் தமிழ்நாடு இல்ல பிரதான வாயிலுக்கு வந்தார்.

ஆனால், விருந்தினர் இல்ல வளாகத்துக்கு அவர்கள் உள்ளே நுழைய அவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனால் தமிழ்நாடு இல்ல வாயில் பகுதியில் அய்யாக்கண்ணு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட தயாரானார்கள்.

இந்நிலையில் வெளியே புறப்படும் வேளையில் தனது காரின் அருகே இருந்தபடி அய்யாக்கண்ணு குழுவினரை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

இது குறித்து பின்னர் பிபிசி தமிழிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், "விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதை பிரதமரிடம் கேட்க விரும்புகிறோம். அதனால் பிரதமரை சந்திக்க எங்களை அழைத்துச் செல்லுங்கள் என முதல்வரை கேட்டுக் கொண்டோம்" என்றார்.

மேலும், விருதுநகர் மாவட்டம் குண்டாறில் தடுப்பணை கட்டுவது, அரியலூர் மருதையாற்றில் தடுப்பணை கட்டுவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தபோது, அவற்றை நிறைவேற்ற பரிசீலிக்கிறேன் என முதல்வர் உறுதியளித்தார்" என்று அய்யாக்கண்ணு கூறினார்.

"விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, நிச்சயமாக உங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்கிறேன். விவசாயிகள் விஷயத்தில் நான் பொய் சொல்ல மாட்டேன் என முதல்வர் கூறினார்" என்றார் அய்யாக்கண்ணு.

காங்கிரஸ் ஆதரவு

இதைத்தொடர்ந்து, அய்யாக்கண்ணு குழுவினர் மீண்டும் பிரதான வாயில் பகுதிக்கு வந்ததும், தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் ஆகியோர் விவசாயிகளை சந்தித்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் பேசி விவசாயிகளின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்ப உதவுவதாக திருநாவுக்கரசர் கூறியதாக அய்யாகண்ணு குழுவினர் தெரிவித்தனர்.

முன்னதாக, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி அவர்கள் சில நிமிடங்கள் கோஷமிட்டனர்.

இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராடி வந்த விவசாயிகள், தமிழ்நாடு இல்லம் அருகே குவிந்ததை அறிந்த டெல்லி காவல்துறையினர், உடனடியாக ஒரு பேருந்தில் அனைத்து விவசாயிகளையும் ஏற்றி ஜந்தர் மந்தர் பகுதிக்கே மீண்டும் அழைத்து வந்து இறக்கி விட்டனர்.

இதையடுத்து, ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து, இரண்டாவது நாளாக போராடி வரும் பெரியசாமி, நாராயணசாமி ஆகிய இரு விவசாயிகளை முன்னிலைப்படுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்