யார் "420"? எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

ttv eps

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் "420" என பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமியும், தஞ்சாவூரில் தினகரனும் இருந்தபடி இன்று பரஸ்பரம் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சசிகலா ஆதரவு அணியாக அறியப்பட்டு வந்த பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையிலான பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், அதிமுகவில் அவர் வகித்து வரும் துணை பொதுச் செயலாளர் பதவி சட்டவிரோதம் என்று அதிமுக தலைமைக்கழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தினகரன், "பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தேர்தல் ஆணையத்தில் ஒரு கருத்தையும், ஆணையத்துக்கு வெளியே ஒரு கருத்தையும் கொண்டு, முரண்பாடான தகவலையும் வெளியிடுபவர் எடப்பாடி பழனிசாமி. "420" ஃபோர்ஜரி (மோசடி செயல்) வேலையில் ஈடுபடுவோருக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது" என்று கூறினார்.

இந்நிலையில் டெல்லி வந்துள்ள பழனிசாமியிடம் தினகரனின் விமர்சனம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "420" என்ற வார்த்தையே தினகரனுக்குத்தான் பொருந்தும் என்றார்.

சில மாதங்களுக்கு முன்புவரை, ஒரே கட்சியில் இருந்து கொண்டு, ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமியும் டி.டி.வி.தினகரனும் பேசி வந்தனர்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி காவல்துறை கடந்த ஏப்ரல் மாதம் டிடிவி தினகரன் மீது வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த தினகரன், கடந்த ஜூன் மாதம் ஜாமீனில் விடுதலையானார்.

அதன் பிறகு கட்சிப் பணியில் தீவிரம் காட்டப் போவதாக தினகரன் அறிவித்த நிலையில், அவரது தலைமைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் தினகரனுக்கு எதிராக முதல் முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே கருத்து வெளியிட்டிருப்பது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, டெல்லி வந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முனுசாமி, கே.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், செம்மலை ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் இன்று ஒரு மனுவை அளித்தனர்.

அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தினகரனை நீக்கி அக்கட்சியின் தலைமைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் அதனடிப்படையில் தினகரனை அக்கட்சியின் நிர்வாகியாக அங்கீகரிக்கக் கூடாது என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :