பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக பள்ளிக்கூடங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் குழுவில் உள்ளவர்களையும் மாற்றக்கூடாது எனவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வழிக் கல்வியில் பத்தாம் வகுப்புப் படித்துவரும் மாணவன் சூர்யகுமார் என்பவரின் தந்தையான ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் "2018-19ல் 11ஆம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தப்போவதாக அறிந்தேன். தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அரசாணையின்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. கல்வித் துறையிலும் பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. அதே நேரத்தில் மத்திய அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

இந்த நிலையில்தான் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு பாடத் திட்டங்களை மாற்றியமைத்துவருகிறது. இதற்கென பல்துறை நிபுணர்களைக் கொண்ட 10 பேர் கமிட்டியும் கல்வித் துறை வல்லுனர்களைக் கொண்ட 13 பேர் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுக்கள் செயல்படத் துவங்கியுள்ளன.

இந்த ஆண்டு, 1, 5, 11 ஆகிய வகுப்புகளுக்குப் பாடத் திட்டங்களை மாற்ற வேண்டியுள்ளதால், அவை எந்த தொந்தரவும் இன்றிப் பணியாற்ற வேண்டும். ஆகவே, இந்தக் குழுக்கள் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும். இரு குழுக்களிலும் உள்ள எந்த நிபுணரும், இந்தக் குழுக்களை இயங்குகின்ற முக்கியமான அதிகாரிகளும் மாற்றப்படக்கூடாது" என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், கல்வித் துறை செயலாளரையும் பாடத் திட்டக் குழுவைச் சேர்ந்தவர்களையும் இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

பள்ளிக் கல்வித் துறையின் செயலராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட உதயசந்திரன், அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகி வந்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :