கும்பகோணம் பள்ளி தீ விபத்து: குற்றவாளிகள் விடுவிப்புக்கு அதிர்ச்சி, கண்டனம்

  • 11 ஆகஸ்ட் 2017

கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், குற்றவாளிகள் அனைவரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்ததற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாநில அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளிக்கூடத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் 24 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இதில் ஒருவர் 'அப்ரூவராக' மாறிவிட, வழக்கு நடந்துவந்த காலத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மீதமிருந்த 21 பேர் மீது வழக்கு நடந்துவந்தது.

தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில், 2014ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி தீர்ப்புவழங்கப்பட்டது. இதில் 10 பேருக்கு சிறை தண்டனையும் 11 பேருக்கு விடுதலையும் கிடைத்தது.

பள்ளிக்கூடத்தின் நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் 940 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் 51 லட்சத்து 65 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பள்ளித் தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர்கள் துரைராஜ், சிவப்பிரகாசம் ஆகியோருக்கு தலா ஐந்தாண்டு சிறை தண்டனையும் கட்டடத்தின் பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தண்டனை பெற்றவர்கள் முறையீடு செய்தனர். 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து காவல்துறை சார்பிலும் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணா, வி.எம். வேலுமணி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமையன்று தீர்ப்பை அறிவித்தனர். அந்தத் தீர்ப்பின்படி, பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை மாற்றியமைக்கப்பட்டது. அவர் சிறையிலிருந்த காலத்தையே தண்டனைக் காலமாக ஏற்பதாகவும் அபராதத் தொகை 1 லட்சத்து 15ஆயிரமாக குறைக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.

சமையல்காரர் வசந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் அவர் சிறையில் இருந்த காலமே தண்டனையாகக் கருதப்படும் என்றும் சாந்தலட்சுமி, விஜயலட்சுமி, பாலாஜி, தாண்டவன், துரைராஜ், சிவப்பிரகாசம், ஜெயச்சந்திரன் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பள்ளித் தாளாளர் சரஸ்வதி உயிரிழந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவரும் விடுவிக்கப்பட்டார்.

"இந்தத் தீர்ப்பு எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஒரு சாதாரண அடிதடி வழக்கைப் போல இந்த வழக்கை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில், ஒரு பள்ளிக்கூடமென்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கே இந்த வழக்குதான் காரணம். தங்கள் மீதான வழக்கு என்றால் பெரிய வழக்கறிஞர்களை வைத்துவாதாடும் அரசு, இந்த வழக்கை அப்படி நடத்தாதது ஏன்? இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்" என்கிறார் பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கத்தின் செயலாளர் இன்பராஜ். இன்பராஜின் இரண்டு குழந்தைகளும் இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தனர்.

பத்து ஆண்டுகளாக நடந்த வழக்கில் 2014ஆம் ஆண்டில்தான் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது, மூன்று ஆண்டுகளில் குற்றவாளிகளை விடுவிப்பது என்ன விதத்தில் நியாயம் என்று கேள்வியெழுப்புகிறார் இன்பராஜ்.

இந்தத் தீர்ப்பிற்கு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் சம்பந்தப்பட்டோரை காப்பாற்றுவதற்காக தொடக்கம் முதலே முயற்சிகள் நடைபெற்று வந்தன.

இவ்வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் ஆசிரியர்கள், அதிகாரிகள் என மேலும் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மீதமுள்ளவர்களும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஆசை ஆசையாய் வளர்த்த குழந்தைகளை தீக்கு பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்? தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கீழ வெண்மணி கிராமத்தில் கடந்த 1968 இல் 44 விவசாயத் தொழிலாளர்கள் எரித்து சாம்பலாக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அனைவரையும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சி தான், தற்போதும் ஏற்படுகின்றது" என்று கூறியிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :