சென்னை தினம்: மெட்ராஸ் நகரத்தின் உண்மையான வயது என்ன? - கல்வெட்டுகள் விவரிக்கும் வரலாறு

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
சென்னைக்கு வயசு எத்தனை?
படக்குறிப்பு,

சுமார் 1950 ஆம் ஆண்டில் மெட்ராஸிலுள்ள சட்டமன்றப்பேரவை கட்டடம்

(2017ஆம் ஆண்டு பகிரப்பட்ட கதையை மீண்டும் மீள்பகிர்வு செய்கிறோம்)

ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் உதய தினத்தை கொண்டாடுகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நடைப் பயணம், சென்னை நகரத்தின் தொன்மை குறித்த கருத்தரங்கங்கள், திரைப்பட நிகழ்வுகள், புகைப்பட கண்காட்சிகள், மாணவர்களுக்குப் போட்டிகள் என பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

படக்குறிப்பு,

1927 ஆம் ஆண்டு - மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

`மெட்ராஸ் டே முடிவு செய்யப்பட்டது எப்படி?

வரலாற்று ஆய்வாளர் முத்தையா, பதிப்பாளர் வின்சென்ட் டி சோஸா உள்பட சென்னை வரலாறு குறித்து ஆர்வமிக்கவர்கள் இணைந்து 2004ல் முதன்முதலாக சென்னை நகரத்தின் பழமையைக் கொண்டாடவேண்டும், அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற விதத்தில் 'மெட்ராஸ் டே' நிகழ்ச்சியைத் தொடங்கினர்.

சென்னை நகரத்தின் பிறந்தநாள் என்று ஒரு நாளை குறிப்பிட வேண்டும் என்று எண்ணிய 'மெட்ராஸ் டே' குழுவினர், தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தின் ஒரு சிறுபகுதியை, அன்றைய விஜயநகர நாயக்கர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி முறைப்படி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம்தேதி வாங்கியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதால், அந்த தினத்தை சென்னை தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவு செய்ததாக தெரிவிக்கின்றனர்.

பழைய மெட்ராஸ் நகரத்திற்கு 380 வயசு

''தற்போது தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னை நகரம், அதன் உள்கட்டமைப்பு, நகரப் போக்குவரத்து, வியாபாரம் என்ற விதத்தில் வளர்ச்சி பெற தொடங்கிய தினம் என்று கருத்தில் மெட்ராஸ் டேவை கொண்டாடுகிறோம்,'' என்றார் வின்சென்ட்.

''ஒரு நகரத்தின் சிறப்பைக் கொண்டாடுவது பல நாடுகளில் உள்ளது. கிழக்கிந்திய கம்பெனியின் நுழைவுக்குப் பிறகு இந்த நகரம் வணிகத்திற்காக சீரமைக்கப்பட்டது. ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமமும் இணைக்கப்பட்டு, தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது,'' என பிபிசி தமிழிடம் விவரித்தார் வின்சென்ட்.

மெட்ராஸ் டே குழுவினரின் கருத்துப்படி 2019ம் ஆண்டில் சென்னை நகரத்தின் வயது 380 என குறிக்கப்படுகிறது.

இதே சென்னை நகரத்தில் மற்றொரு பிரிவினர், சென்னை நகரம் கிழக்கிந்திய கம்பெனியின் வருகையில் இருந்து தொடங்கியது என்று முடிவு செய்யக் கூடாது என்று வாதாடுகிறார்கள்.

படக்குறிப்பு,

1961-ல் எலிசபெத் ராணி, சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு வந்தபோது...

சென்னைக்கு வயசு 2000த்துக்கும் மேல்

சென்னை 2000பிளஸ் அமைப்பின் நிறுவனர் ரங்கராஜன், சென்னை நகரத்தின் பழமையை கொண்டாடும் நேரத்தில், அதன் உண்மையான வரலாற்றை அறிய மேலும் முயற்சிகள் செய்யப்படவேண்டும், ஆங்கிலேயருக்கு முந்தைய காலத்தில் தமிழர்கள் இந்த நகரத்தில் வளமுடன் வாழ்ந்த வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்கிறார்.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றுத் துறை பேராசிரியர் ராஜவேலு, சென்னை நகரத்தில் பழமையான கோயில்களான திருவொற்றியூர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருமுல்லைவாயில் உள்ளிட்ட கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள், அதாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கோயில்களைக் கொண்டுள்ளது என்பதால், இந்த நகரம் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே பரபரப்பான நகரமாக இருந்துள்ளது என்பதைக் கட்டுகிறது என்கிறார்.

படக்குறிப்பு,

ஜனவரி 1786: புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகிலுள்ள ஆங்கிலேய குடியிருப்புகள்

மற்றொரு சான்றாக,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலுள்ள விவரத்தை குறிப்பிடுகிறார். 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதராசபட்டினம், நீலாங்கரையன் பட்டினம், ராயபுர பட்டினம் போன்ற துறைமுக பகுதிகளுக்கு பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கு விதிக்கப்படும் வரிகள் விவரமாக அடங்கிய கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தோம். இவையெல்லாம் ஆங்கிலேயேர் காலத்திற்கு முன்பாகவே இந்த நகரம் செழிப்புடன், கட்டமைப்புடன் இருந்தது என்பதற்கு சான்றாக உள்ளது,'' என்றார்.

புலியூர் கோட்டத்தில் இருந்த சென்னை

தற்போது எழும்பூர் என்று அறியப்படும் பகுதி, சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் எழுமூர் நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார் 'சென்னபட்டணம் மண்ணும் மக்களும்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராமச்சந்திர வைத்தியநாத்.

''சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம் போன்ற பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி கால் பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே 12 -13ம் நுற்றாண்டுகளில் பிரசித்தி பெற்ற கிராமங்களாக இருந்துள்ளன,'' என்றும் ராமச்சந்திர வைத்தியநாத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், குறும்பர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மதராஸ் தொண்டை மண்டலத்தில் புலியூர் கோட்டத்தில் இருந்தது என்பதற்குச் சான்று உள்ளது என்கிறார் ராமச்சந்திர வைத்தியநாத்.

படக்குறிப்பு,

கபாலீஸ்வரர் கோயில்

விவாதம் கிளம்பியதே ஆரோக்கியம்

மெட்ராஸ் நகரத்தின் பிறந்த நாள் என்று என்பதை அறிய கிளம்பியுள்ள விவாதமே பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்கிறார் ஆவணப்பட இயக்குனர் மற்றும் பாரம்பரிய நடைப்பயண நிகழ்வுகளை (heritage walks) நடத்திவரும் கோம்பை அன்வர்.

'' சென்னை நகரம் எல்லோருக்குமான நகரமாக இருந்து வந்துள்ளது. என்னைப் பொருத்தவரையில் இந்த நகரத்தின் வரலாற்றை பேசப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதேமுக்கியமாக தெரிகிறது. பழமையைப் பற்றி தெரிந்துகொள்ளும் சமயத்தில் தற்போதைய நகரம் இருக்கும் நிலை, அதை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தையும் விவாதிப்பது நல்லது,'' என்றார்.

2015ல் வெள்ள பாதிப்பிற்கு பிறகு, பண்டைய காலத்தில் நீர்நிலைகள் மேலாண்மை செய்யப்பட்ட விதம் பற்றி பரவலாகப் பேசப்பட்டது, சில நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதனால், வரலாற்றைப் பற்றிய விவாதம் மேலும் ஆரோக்கியமனதாக மாற வேண்டும் என்று குறிப்பிட்டார் அன்வர்.

என்ன சொல்கிறார்முன்னாள் சென்னை மேயர் ?

சென்னை நகரத்தின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியிடம் பேசியபோது ''ஆங்கிலேயர்கள் வருகை நம் நகரத்தின் வளர்ச்சியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றியது உண்மைதான். ஆனால் அவர்கள் ஏற்படுத்திய போக்குவரத்து வசதிக்கு முன்பாகவே வணிகத்திற்காக கப்பல் போக்குவரத்து பெருமளவு இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

மெட்ராஸ் டே என ஒரு தினம் கடைபிடிப்பதும், இந்த நகரத்தின் வயது பற்றியும் எழுந்துள்ள சர்ச்சை பற்றிக் கேட்டபோது விமர்சனங்களை விடுத்து வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வது முக்கியம் என்ற கருத்துடன் அவர் முடித்துக்கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: