வனவிலங்குகளை மீட்க ஹைட்ராலிக் ஆம்புலன்ஸை வடிவமைத்த தமிழக வனத்துறை

வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளை எளிதில் மீட்க ஹைட்ராலிக் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை தமிழக வனத்துறை வடிவமைத்துள்ளது.

அதிகரித்துவரும் விலங்கு-மனித மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இந்த ஆம்புலன்ஸ் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் மத்திய சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட கணக்கெடுப்பில் கடந்த ஏப்ரல் 2014 முதல் மே 2017 வரை, விலங்கு-மனித மோதல் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒரு நபர் இறந்துபோனதாக தெரிவித்திருந்தது.

வனவிலங்கு நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் அங்குள்ள மக்கள் தகவல் கொடுத்ததும், விலங்கைப் பிடிக்கும் நேரம் அதை காப்பகத்திற்கு அல்லது வனபகுதியில் வேறு இடத்தில் கொண்டு சேர்ப்பதில் இருக்கும் தாமதமும் மனிதன் அல்லது விலங்கு இறந்துபோவதற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், பிடிபட்ட விலங்குகளை இடமாற்றம் செய்வதில் உள்ள தாமதத்தைக் குறைக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் புதிய வடிவில் ஒரு வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.

பல விதமான அவசர ஊர்திகள் இருந்தாலும், சத்தியமங்கலம், கோவை, நீலகிரி ஆகிய வனப்பகுதிகளில் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் அடிக்கடி வருவதால், ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் வாகனம் மிகவும் ஏற்றது என்ற முடிவுசெய்யப்பட்டு இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளதாகக் கூறுகிறார் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குனர் அருண்லால்.

ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் எப்படி செயல்படுகிறது?

ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் இயங்கும் விதம் பற்றிப் பேசிய அவர், '' பல சம்பவங்களில் யானை பிடிபட்டதும், அதை வாகனத்தில் ஏற்றி காப்பகத்திற்கு கொண்டு செல்வது இடர்பாடுகள் நிறைந்த செயலாக இருந்தது. யானையை வண்டியில் ஏற்றுவதற்குப் பலரின் உதவி தேவை. தற்போது யானை எந்த இடத்தில் பிடிக்கப்படுகிறதோ, அங்கு ஹைட்ராலிக் ஆம்புலன்சை கொண்டுவந்து நிறுத்தி, அதன் உயரத்தை யானை நிற்கும் இடத்திற்கு ஏற்ப அதிகப்படுத்துவது அல்லது குறைக்கவும் முடியும், பின்னர் யானை வண்டியில் ஏறியதும், வண்டியை ஓட்டுவதற்கு தேவையான அளவில் சரிசெய்து ஓட்டமுடியும்,'' என அருண்லால் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஒரு தனியார் நிறுவனத்திடம் லாரி ஒன்றை வடிவமைக்கச் சொல்லி, அந்த வண்டியை வனவிலங்கை ஏற்றுவதற்கு மற்றும் அதை பிடிக்கும் வகையில் சீரமைப்பு செய்ததாகக் கூறுகிறார் வனவிலங்கு மருத்துவர் அசோகன்.

''சரக்கு லாரிகளை வடிவமைக்கும் நபர்களைக் கொண்டு, சுமார் இருபது லட்சம் செலவு செய்து இந்த வண்டியின் பின்புறத்தை சீரமைத்தோம். சோதனை செய்து பார்த்துள்ளோம். பிற வனவிலங்கு சரணாலய அதிகாரிகள் இந்த வண்டி பிற இடங்களில் தேவை என்று கூறியுள்ளனர்,'' என்றார்.

மேலும் இந்த வாகனத்தை வனப்பகுதியில் இரவு நேரத்தில் நிறுத்தி வைத்து, விலங்குகளை கண்காணிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

''தற்போதைய நிலையில், விலங்கை பிடிக்க வண்டியை வனப்பகுதியில் நிறுத்திவிட்டு நாங்கள் வனப்பகுதிக்கு வெளியில் தங்கிக்கொள்வோம். இந்த வண்டியை ஐந்து அடி வரை உயர்த்தி வைத்து, மேலே நாம் நின்று கண்காணிக்க முடியும்,'' என்றார்.

வனவிலங்கு ஆர்வலர் மற்றும் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் ''கிராமங்களுக்குள் வந்த யானை பிடிக்கப்பட்ட பின்னர், லாரி போன்ற வாகனத்தில் ஏற்றுவது வனத்துறையினருக்கு மட்டுமல்ல அந்த யானைக்கும் சிரமமான ஒன்று. இந்த ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் வாகனத்தில் படிக்கட்டு ஏறுவது போல அல்லாமல் யானை எளிதாக நடந்து வாகனத்திற்குள் செல்ல முடியும்,'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்