கோரக்பூர் குழந்தைகள் மரணத்திற்கு குறைப் பிரசவம் காரணம்: உ.பி அமைச்சர்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் அறுபது குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் ஆக்சிஜன் விநியோகம் தடை பட்டதால் அல்ல என்றும், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அப்பகுதியில் நிலவும் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்க நோய் மற்றும் பிற காரணங்களால் இறந்தார்கள் என்றும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த மருத்துவமனையில் இரண்டு மணிநேரம் மட்டும் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டிருந்ததாக அவர் கூறினாலும் அதனால் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளின் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும், அந்த மருத்துவமனையில் உயிரிழந்த, உத்தரப்பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை முறையே 567, 668 மற்றும் 587 என்று, சித்தார்த்நாத் சிங், மருத்துவக் கல்விக்கான அமைச்சர் அஷுதோஷ் டாண்டன் ஆகியோரின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இன்று ஞாயிற்றுக்கிழமைஎன்று, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரையும், மருத்துவமனை ஊழியர்களையும் சந்தித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நடந்ததை கேட்டறிந்தார்.

பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற யோகி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, '' என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்க நோய்க்கு எதிராக அரசு போராடிக் கொண்டிருக்கிறது'' என்று கூறினார்.

''தங்களின் குழந்தைகளை இழந்த பெற்றோர்களின் மன வேதனையையும், வலியையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைத்துள்ளேன். அக்குழு இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்'' என்று மேலும் தெரிவித்தார்.

இக்குழுவுக்கு மாநில தலைமை செயலாளர் தலைவராக இருப்பார் என்று யோகி கூறினார்.

ஆக்சிஜன் விநியோகப் பிரச்சனையை யாரும் தெரிவிக்கவில்லை: யோகி ஆதித்யநாத்

முன்னதாக, சனிக்கிழமை இரவு செய்தியாளர்களைச் சந்தித்த, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குழந்தைகள் அதிகமாக இறந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளை முந்தைய தினமான, ஆகஸ்ட் 9 அன்று அதே மருத்துவமனைக்குச் சென்று அதன் நிர்வாகிகளுடன், மூன்று மணி நேரம் கூட்டம் நடத்தியதாகவும், ஆக்சிஜன் தடை பிரச்சனை பற்றி யாரும் அப்போது தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

அம்மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறிய ஆதித்யநாத், அதன் அறிக்கை ஒரு வாரத்தில் கிடைக்கும் என்று கூறினார்.

இந்த மரணங்களில் ஆக்சிஜன் விநியோகம் செய்து வந்த நிறுவனத்தின் பங்கு பற்றியும் அந்தக் குழு விசாரணை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

என்சிபாலிட்டிஸ் நோய் பிரச்சனை தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் 34 மாவட்டங்களில் நிலவுவதாகவும் முதலமைச்சர் ஆதித்யநாத் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்