இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

  • 14 ஆகஸ்ட் 2017
பிரிட்டனைப் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்? படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளான நிலையில், பிரிட்டன் இந்தியாவிடம் ஒரு மிக நெருக்கமான வர்த்தக உறவை எதிர்பார்க்கிறது. ஆனால், பிரிட்டன் பற்றி நவீன இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பிபிசியின் தெற்கு ஆசிய செய்தியாளர் ஜஸ்டின் ரௌலட் எழுதுகிறார்.

``இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும் எனது குடும்பத்திற்கு நெருக்கமான உறவு இருக்கிறது. இதில் பெருமைப்பட எதும் இல்லை என்பதால், இதை பற்றி நான் வழக்கமாகப் பேசுவதில்லை.

இந்தியா தனது 70 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில், பிரிட்டன் உடனான இந்தியாவின் சிக்கலான மற்றும் பெரும்பாலும் முரண்பாடான அணுகுமுறைகள் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பிரெக்ஸிட்க்கு பிறகு இந்தியாவுடன் புதிய வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்த பிரிட்டன் முயன்றுவரும் நிலையில், பிரிட்டன் பற்றி இந்தியா என்ன நினைக்கிறது என்பது முன்பை விட முக்கியமான ஒன்றாகும்.

தெற்கு டெல்லியில் உள்ள எம்.பி சசி தரூரின் பங்களாவிற்கு நான் சென்றிருந்த போது மழை பெய்திருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆங்கிலம் பேசும் பல லட்சம் இந்தியர்களின் வாழ்க்கை முறையினை வடிவமைக்க, இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சி உதவியது என்பதை அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறார்.

` இந்தியர்கள் படிக்கும் புத்தகங்கள், உணவு உண்ணும் முறை, சில சமயம் ஆடை உடுத்தும் முறை, பழக்கவழக்கம் என இந்தியர்களின் அன்றாட வாழ்கையில் கலந்த பலவற்றையும் காலனித்துவம், பிரிட்டிஷ் நிறுவனங்கள் மற்றும் ஆங்கில மொழியில் இருந்து வந்தது`` என என்னிடம் கூறினார் சசி தரூர்.

``எடுத்துக்காட்டாக, பெரும்பாலான இந்தியர்கள் பிஜி வோட்ஹவுஸ் புத்தகங்களைப் படிக்க விரும்புவார்கள். கிரிக்கெட்டை விளையாடவும் பார்க்கவும் விரும்புவார்கள்`` என்றார்.

தற்போது இந்தியாவின் தேசிய பானமாக இருக்கும் தேநீரை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய பிரிட்டனை அவர் புகழ்கிறார்.

இருப்பினும், பிரிட்டனின் ஏகாதிபத்திய மரபு குறித்து வலுவான விமர்சனங்களை சசி தரூர் வைக்கிறார்.

பிரிட்டிஷ் காலனியாதிக்கம் குறித்து இன்னும் இந்திய மக்களிடம் கோபங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிட்னி ரௌலட்

எனது கொள்ளுத்தாத்தாவால் எழுதப்பட்ட அவரது பெயரை கொண்ட ஒரு கொடூரமான சட்டத்தின் காரணமாக, இந்தியர்கள் மீது மிக மோசமான அட்டூழியத்தை பிரிட்டிஷார் நடத்தினர் என்பது எனக்குத் தெரியும்.

ஏப்ரல் 13-ம் தேதி 1919-ம் ஆண்டு ஜாலியன்வாலா பாக்கில் 379 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எனது கொள்ளுத்தாத்தா சிட்னி ரௌலட் கொண்டுவந்த `ரௌலட் சட்டமே` முக்கிய காரணமாக அமைந்தது.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஜாலியன்வாலா பாக்கில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கும் போது, அவை எவ்வளவு வெட்கக்கேடானவை என்பது தெரிகிறது.

ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பள்ளி வரலாற்றுப் புத்தகங்களிலும் `ரௌலட் சட்டம்` இடம்பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption ஜாலியன்வாலா பாக் படுகொலை குறித்து 1982-ம் ஆண்டு வெளிவந்த காந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி

ரௌலட் சட்டமே காந்தியை வலுவான தேசிய தலைவராக மாற்றியது என லட்சக்கணக்கண மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகங்கள் கூறுகின்றன.

இரண்டரை வருடங்களுக்கு முன்பு பிபிசியின் தெற்கு ஆசிய நிருபராக எனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்தியா வந்தபோது, `ரௌலட்` என்ற எனது குடும்ப பெயர் எனக்குச் சுமையாக இருக்கும் என நினைத்து வருத்தப்பட்டேன்.

ஆனால், இந்தியாவில் யாரும் என் மீது கோபத்தையோ வெறுப்பையோ காட்டியதில்லை.

இளம் இந்தியர்கள் பிரிட்டன் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இந்தியா பிரிட்டன் இடையே எது வலுவான நாடு என 16-17 வயதுடைய மாணவர்களிடம் கேட்டேன்.

``எங்களது பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்கிறது`` என சேகால் என்ற மாணவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் 2013ல் அமிர்தசரஸ் வந்திருந்த போது

`` இந்தியாவிற்கு பிரிட்டனை விட, பிரிட்டனுக்கு தான் இந்தியா முக்கியமான நாடு`` என மற்றோரு மாணவர் கூறினார்.

வெறும் நாட்டு பற்றுடன் மட்டும் இல்லாமல், அவர்களது கருத்துகளுக்கான திடமான காரணங்களையும் என்னிடம் கூறினார்கள்.

மூத்த பத்திரிக்கையாளரும், எம்.பியுமான ஸ்வபன் தாஸ்குப்தா, பிரிட்டன் குறித்து இளம் இந்தியர்களின் மன ஓட்டத்தை பிரதிபலித்தார்.

`` இன்றைய காலத்தில் நடுத்தர இந்தியர்கள், பிரிட்டனை விட அமெரிக்காவையே அதிகம் விரும்புகின்றனர். நிறைய இந்தியர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள், அதனால் அமெரிக்க கலாசாரம் இந்தியாவிலும் எதிரோலிக்கிறது`` என்கிறார் தாஸ்குப்தா.

படத்தின் காப்புரிமை Getty Images

தனிநபர் வருமானத்தை வைத்துப்பார்த்தால், இந்தியா இன்னும் ஏழை நாடாகவே உள்ளது. அனால், வர்த்தகத்தில் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.

எழு சதவிகித வளர்ச்சியுடன், இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்தியாவின் தொழில்மயமாக்கலில், இரும்பு மற்றும் எஃகு ஆலை மிக பெரிய மாற்றத்தை உருவாக்கும் என நினைத்த ஜாம்ஷெட் டாடா 19-ம் நூற்றாண்டில் அதற்கான பணிகளை ஆரம்பித்தார்.

கடந்த ஒரு நூற்றாண்டில், டாடாவின் வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரிட்டனில் அதிக வேலைப்பாய்ப்புகளை வழங்கும் தொழில்துறை நிறுவனமாக டாடா உள்ளது

பிரிட்டனில், ஜாகுவார் லாண்ட் ரோவர் மற்றும் கோரசஸ் ஸ்டீல்ஸ்க்கு உரிமையாளராக இருக்கும் டாடா குழுமம், பிரிட்டன் தொழில்துறையில் அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும் உள்ளது.

``இந்தியாவிற்குத் தவறிழைத்த பிரிட்டிஷ் மீது கோபத்தில் இருக்கும் இந்தியர்கள், பிரிட்டனை பழிவாங்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை.`` என சசி தரூர் கூறுகிறார்.

``பிரெக்ஸிட்க்கு பிறகு பிரிட்டனின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக, இந்தியாவுடன் கைகோர்க்க பிரிட்டன் பிரதமர் தெரிசா மே முன்வருகிறார். பலிவாங்கல்களை விட எவ்வளவு மேலானது`` எனவும் என்னிடம் கூறினார் சசி தரூர்.

70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் விட்டுச் சென்ற இந்தியாவிலிருந்து, தற்போதைய இந்தியா வித்தியாசமான நாடாக இருக்கலாம்.

ஆனால், இந்தியர்களின் இதயத்தில் பிரிட்டிஷுக்கும், பிரிட்டனுக்கு ஒரு தனி இடம் உள்ளது.''

இவ்வாறு எழுதியுள்ளார் பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரௌலட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்